TNPSC Thervupettagam

எது சிறார் இலக்கியம் தொடரும் விவாதம்

September 24 , 2023 475 days 437 0
  • ‘ஆயிஷா நூலுக்குப் பிறகுதான் நவீன சிறார் இலக்கியத்தின் எழுச்சி தொடங்கியது’ என இலக்கியக் கூட்டங்களில் பேசப்படுவதையும் கட்டுரைகளில் எழுதப்படுவதையும் பரவலாகப் பார்க்க முடிகிறது. பல்வேறு பதிப்பகங்களின் மூலம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற ‘ஆயிஷா’, பல்லாயிரம் ஆசிரியர்களின் சிந்தனை, செயல்பாடுகளை மாற்றியிருக்கிறது. கல்வி குறித்த புரிதல்களை, சலனங்களை, விவாதங்களை ஏற்படுத்தி வருகிற நூல் அது. ‘ஆயிஷா’ நூலை இதுவரையிலும் வாசிக்காத ஒரு ஆசிரியரைப் பற்றிய நம் மதிப்பீடே வேறு மாதிரியாக இருக்கும்.
  • ஆனாலும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, புரிதலுக்காக அல்லது குழந்தைகளிடம் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்டதல்ல அது. ‘ஆசிரியர்களிடமிருந்து எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’, ‘அவரவர் அறிவைப் பயன்படுத்த அனுமதியுங்களேன்’ என்கிற அந்நூலின் கோரிக்கைகள் யாரை நோக்கியவை? யாரிடம் மாற்றம் கோருபவை? குழந்தைகளின் கல்வியைத் தீர்மானிக்கிற அமைப்புகளை நோக்கியவை. அதில் அங்கம் வகிக்கிற அனைவரையும் நோக்கியவை.

யாருக்கானது

  • குழந்தைகளும் இந்த நூலைப்படிக்கலாம். ஆனால், இந்நூலை குழந்தைகளுக்கானதாக, குழந்தை இலக்கிய வகைமையைச் சார்ந்ததாகப் புரிந்துகொள்ளப்படுகிறபோதுதான், குழந்தைமை குறித்த புரிதல்கள் என்னவாக இருக்கின்றன என்கிற கேள்வி எழுகிறது.
  • நூலின் ஆசிரியர் ஆயிஷா நடராசன் சொல்கிறார், “ஆயிஷா, சிறார் பற்றிய இலக்கியம். ‘கணையாழி’ குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றது என்பதால், அது பொது இலக்கியத்திலும் இடம்பெறும். அறிவியலைப் பற்றி நிறையப் பேசுவதால், அது அறிவியல் புனைகதையாகவும் திகழ்கிறது”. ஆக, எது சிறார் இலக்கியம் என்கிற தெளிவை நோக்கி நாம் மேலும் நகர்ந்திட வேண்டிய தேவையை இந்தச் சூழல் நமக்கு உணர்த்துகிறது. இது புதிது அல்ல. எது சிறார் இலக்கியம் என்கிற விவாதம் இப்போது தொடங்கியதும் அல்ல. ஆனால், எப்போதும் தொடர வேண்டிய ஒன்று.

எது சிறார் இலக்கியம்

  • சிறார் இலக்கிய நாயகராக அறியப்படக்கூடிய அழ.வள்ளியப்பா, 1979இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின்போது, “ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்ட நீதி நூல்களை, பாடல்களை ஒளவையார் குழந்தைகளை மனக்கண் முன் நிறுத்திப் பாடியிருப்பாரா என்பது ஐயத்திற்குரியது. படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் பயன்படும் வகையில், பழமொழிபோல் இப்பாடல்களை ஒளவையார் பாடியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது” எனப் பதிவுசெய்கிறார்.
  • 1981ஆம் ஆண்டு ‘வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்’ என்கிற வள்ளியப்பாவின் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் ‘ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்கள், குழந்தை இலக்கியம் ஆகா என்று துணிச்சலோடு கூறியவர் நம் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தான். நானும் இக்கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன். உயர்ந்த நீதிகளைப் புகட்டுவதில் தனிச்சிறப்பு உடையவை என்றாலும், அவை குழந்தைப் பாடல்கள் ஆகமாட்டா என்பதை நானும் வலியுறுத்திச் சொல்கிறேன்’ என்று வள்ளியப்பாவை வழிமொழிகிறார் அறிஞர் பெ.தூரன்.

அழ.வள்ளியப்பா, பெ.தூரன்  

  • இருவரும்தான் இந்த விவாதத்தின் தொடக்கப் புள்ளியா என்றால், இல்லை. 1972இல் சாகித்ய அகாடமிக்காக எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்கிற நூலில் “நீதி நூல்களில் குழந்தைகளின் அறிவுக்கு எட்டாத கருத்துகள் உள்ளன. சிறுசிறு சொற்களால், சிறு தொடர்களால் அமைந்தமையாலேயே சிறுவர்களின் இலக்கியம் என்று சொல்லிவிட முடியாது. அவற்றின் வடிவம் குழந்தை இலக்கியத்திற்கு உரியது. அவற்றின் பொருள் மனத்தை எட்டாதது! அதே கருத்துதான் பாரதியாரின் ஆத்திசூடிக்கும் பொருந்தும்” என்கிற தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசன் கருத்தையே வள்ளியப்பா வழிமொழிந்தார். பெரியசாமி தூரன் அதை ஆதரித்தார்.

பெரியவர்களுக்கானதே

  • அறம் செய விரும்பு, ஆறுவது சினம் - இதில் என்ன மாறுபாடு? ஏன் மறுக்க வேண்டும் என்று நம்மில் பலருக்குத் தோன்றலாம். அதே நூல்களில், தையல் சொல் கேளேல், மை விழியார் மனை அகல் (ஆத்திசூடி), பிறன்மனை புகாமை அறம் எனத் தகும் (கொன்றைவேந்தன்), இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் (உலக நீதி) என்பது போன்ற குழந்தைகளின் வயதுக்குப் பொருந்தாத பல வரிகளும் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நல்வழி, மூதுரை, திரிகடுகம், நான்மணிக்கடிகை உள்ளிட்ட பல்வேறு நூல்களின் பாடல்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே பாடநூல்களில் இடம்பெற்று வருகின்றன.
  • சமீபத்தில் எழுத்தாளர் உதயசங்கர் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் எழுதிய கட்டுரை ஒன்றில், ‘பெரியவர்களே விளக்கவுரை இல்லாமல் திருக்குறளைப் புரிந்து கொள்ளவோ பொருள் விளங்கிக்கொள்ளவோ முடியாது. திருக்குறள் இரண்டடியில் இருப்பதாலோ, ஏழே ஏழு வார்த்தைகள் மட்டுமே இருப்பதாலோ சிறார் இலக்கியமாகி விடாது. அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் இவையெல்லாம் பதினெட்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் வாசிப்புக்கோ, அவர்களின் உளவியல் நிலைகளுக்கோ ஏற்றது கிடையாது. திருக்குறளின் அருமை, பெருமை, உலகப் பொதுமறையாக, மதச்சார்பற்ற இலக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்’.
  • அந்நூல்களில் இருக்கிற குழந்தைகளுக்குப் பொருத்தமான வரிகளை எடுத்துப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதே நேரம், எது சிறார் இலக்கியம் என வகைப்படுத்துவதில், புரிந்து கொள்வதில் ஒரு தெளிவு வேண்டி இருக்கிறது. மேம்போக்காக நடந்துகொள்வதில் குழந்தைமை குறித்த நமது அக்கறையற்ற தன்மை வெளிப்படுகிறது.
  • இத்தெளிவு, நீதி நூல்கள் அளவில் மட்டுமல்ல. இது நல்ல உணவு, இது நல்ல உடை, இது நல்ல கதை, நூல், இது நல்ல சினிமா என்று பெரியவர்கள்தான் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கும் இடத்தில் இருக்கிறோம். ஆராயாமல் வகைப்படுத்துவது தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கும். அந்தப் புரிதல்களின் அடிப்படையில் படைப்புகள், திரைப்படங்கள் அணிவகுக்கும். அது குழந்தைகளின் குணங்களில் பிரதிபலிக்கும். எதையும் குழந்தைகளுக்குப் படிப்பிக்கலாம், எதையும் காட்சிப்படுத்தலாம் என்கிற போக்கு, பொறுப்பற்ற சமூகத்தின் அடையாளம் அல்லவா?!

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்