TNPSC Thervupettagam
November 8 , 2023 428 days 454 0
  • பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சினை குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சமீபத்தில் நிகழ்த்திய ‘பொது விவாதம்’ என்ற கேலிக்கூத்து எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது.
  • இதில் ‘பொதுவானது’ எதுவுமில்லை என்பது மட்டுமல்ல என்னுடைய வருத்தத்துக்குக் காரணம்; நதி நீர்ப் பகிர்வு போன்ற தேசியப் பிரச்சினைகளில் மேலும் ஒரு அரசியல் கட்சி ‘இரட்டை வேடம்’ போடத் தொடங்கிவிட்டதே என்பதுதான் வருத்தத்துக்குக் காரணம் (ஏற்கெனவே காவிரி நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக காங்கிரஸ், பாரதிய ஜனதா இதைச் செய்கின்றன); நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கக்கூடிய இத்தகைய போக்குகளுக்குத் தீர்வு காண ஒன்றியத்தை ஆளும் ‘தேசிய அரசு’ எதையும் செய்யவில்லை என்பதாலும் நான் வருத்தப்படவில்லை.

விவசாய சங்கத் தலைவர்கள் எங்கே?

  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் – ஹரியாணா மாநில விவசாயிகளை ஒரே இடத்தில் திரட்டி, ஒற்றுமைப்படுத்திப் போராடி வெற்றி கண்டு வரலாறு படைத்த விவசாயிகளின் தேசிய இயக்கம், இந்த நதி நீர்ப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண எதையுமே செய்யவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தத்துக்குக் காரணம்.
  • இந்த நதி நீர்ப் பிரச்சினை இரு மாநில விவசாயிகளையும் அதிகம் பாதிக்கிறது. விவசாயிகளுடைய பெயரில் இரு மாநிலத் தலைவர்களும் கேலிக்கூத்தான அரசியல் – சட்டப் போராட்டங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இவ்விரு மாநிலங்களையும் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்கள் ஏன் ஒன்றாக அமர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வு காணக் கூடாது?
  • அப்படி தீர்வு காணத் தவறுவதற்குக் காரணம், நம்முடைய இந்திய தேசியத்துக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நெருக்கடி எவ்வளவு ஆழமானது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது. நம்முடைய தேசியவாத உணர்வு வெளித்தோற்றம் மட்டுமே கொண்டது, வெறும் பகட்டு ஆரவாரக் கூச்சலால் நிரம்பியது. நம் நாட்டுக்கு விருந்தினராக வந்திருக்கும் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரருக்கு எதிராக கோஷமிட்டு அவமதிப்பதுதான் நம்முடைய தேசிய உணர்வாக இருக்கிறது.
  • தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வழி காணப்பட வேண்டும் என்ற உணர்வு யாருக்கும் இல்லை. காசா நிலப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தன்னுடைய எதிரிகளைத் தாக்கி பொடிப் பொடியாக்குவதைப் பார்த்து பூரிப்படையும் நாம், நம் நாட்டு எல்லைக்குள் மணிப்பூரில் இரு பகுதி மக்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பூசல்களைத் தீர்க்கும் முனைப்பு இன்றி அலட்சியமாகத் திரிகிறோம்.

இந்திய தேசிய இயக்கம் எத்தகையது?

  • இந்திய தேசியவாதம் இப்படி இருக்கக் கூடாது. நம் தேசிய இயக்கமானது தன்னிகரில்லாத ஆக்கப்பூர்வமான கட்டமைப்பில் உருவானது. அது காலனியாதிக்கத்துக்கு எதிராக இருந்ததே தவிர வெள்ளை இனத்தை வெறுக்கவில்லை, பிரிட்டிஷ் நாட்டுக்கு எதிரானதாகக்கூட இல்லை. அது இந்தியர்களைப் பக்கத்து நாட்டுக்காரர்களுக்கு விரோதமாகக் கொண்டுபோய் நிறுத்தவில்லை.
  • சுதந்திரம் பெற்ற இந்தியா செய்த முதல் வேலை, ஐக்கிய நாடுகள் சபையில் நம்முடைய பக்கத்து நாடான சீனம் இடம்பெறுவதற்கு ஆதரவாக வாதிட்டதுதான்; உலகம் முழுவதிலும் - ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா வரை - காலனி ஆதிக்கத்தை எதிர்த்த நாடுகளுக்கெல்லாம் ஆதரவு தந்து அவர்களுடன் நமக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது நம்முடைய தேசிய உணர்வுதான்.
  • ஒற்றுமை, ஒரே சீர்மை தொடர்பாக ஐரோப்பிய சிந்தனையாளர்கள் முன்வைத்த கருத்துகளை ஏற்க மறுத்த நம்முடைய தேசத் தலைவர்கள், தேசிய ஒருமைப்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தேசியவாதம் என்ற கருத்து குறித்து சந்தேகம் கொண்டிருந்த கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், நமக்கு தேசிய கீதத்தை மட்டும் தரவில்லை, ஒன்றுபட்டு வாழ்வதற்கான மெய்யியல் தத்துவத்தையும் அளித்தார்.
  • நேரு ‘இந்தியாவைக் கண்டறிதல்’ என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் நம்முடைய மேதாவிலாசங்களை விரிவுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமல்ல; நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான இழைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் அரசியல் ஆய்வுத் திட்டமும் ஆகும். தீண்டாமைக்கு எதிராக காந்திஜி தொடுத்த போரும், இந்தி படிக்குமாறு அவர் செய்த பிரச்சாரமும் இந்த நாட்டை ஒன்றுபடுத்திவிட வேண்டும் என்ற கவலையில் விளைந்தவை.
  • இப்படிப்பட்ட இந்திய தேசிய மாதிரியில் என்ன கோளாறு ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது, இன்றைய காலத்தில் அறிவார்ந்தவர்கள் தளத்திலும் அரசியல் தளத்திலும் கடினமான சோதனைதான்.

தேசிய அரசு – அரசு தேசியம்

  • தனிப்பட்ட முறையில் எனக்கு இது அறிவார்த்தமான சவால்தான். இ்ந்தியாவின் முன்மாதிரி தேசியம் இந்த அளவுக்கு சீர்கெட்டது, 2011இல் ஒப்பீட்டு அரசியல் பாடத்தின் இரண்டு அறிஞர்கள் ஜுவான் லின்ஸ், ஆர்பிரட் ஸ்டீபன் ஆகியோர் தங்கள் புத்தகத்தில் எழுதிய கருத்துகளையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
  • ‘கிராஃப்டிங் ஸ்டேட் – நேஷன்ஸ்’ (Crafting State-Nations) என்பது அந்தப் புத்தகத்தின் தலைப்பு. அதன் மையக்கரு, ‘தேசிய அரசு’ அல்ல - ‘அரசே தேசியமாக இருப்பது’. புத்தகத்தின் முக்கியமான கருத்துகளைப் பின்வருமாறு சுருக்கிவிடலாம்; ஒரு நாட்டுக்குள் நிலவும் ஆழமான சமூக – கலாச்சார பன்மைத்துவத்தை, ஜனநாயகம் எப்படித் தன்வயப்படுத்தலாம்?
  • இப்போதுள்ள மரபியக் கண்ணோட்டம் என்னவென்றால், ஒரு நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒரே இயல்பான கலாச்சாரத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலமும் ஒருநாடு போலவே தனித்துவமாக இயங்க வேண்டும், ஒவ்வொரு நாடும் தனி அரசாகத் திகழ வேண்டும். இப்படிப்பட்ட ‘தேசிய அரசு’ மாதிரியைத்தான் ஐரோப்பிய அரசியலும், அறிவார்ந்த அதிகார மையமும் உலகம் முழுவதும் மக்களிடையே பெரிதாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. அது அரசியல் சார்ந்த அணுகுமுறை, ஒரு நாட்டின் அரசியல் எல்லையையே, கலாச்சார எல்லையாகவும் ஆக்க நினைக்கிறது.
  • தேசிய அரசுகள், ஒரே சமூக – கலாச்சார அடையாளத்தை அங்கு வாழும் பிற குழுக்களும் தாங்களாகவே ஏற்க வைக்கின்றன, இதை மென்மையாக ஒன்றுகூட்டியும், முடியுமென்றால் வன்முறையால் கட்டாயப்படுத்தியும் மேற்கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நவீன தேசிய அரசுகள் வரலாறு.
  • இந்தப் பழைய ஐரோப்பிய மாதிரியின் காலம் முடிந்துவிட்டது என்பது அந்தப் புத்தகத்தில் நாம் வாதிட்ட கருத்துகளாகும். இந்தியா, கனடா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற வெற்றிகரமான ஜனநாயக தேசிய அரசுகள் இந்த மாதிரியானவை அல்ல. அவை வேறுபட்ட அரசியல்-நிறுவன அணுகுமுறையைக் கையாண்டன. நாம் அந்த அணுகுமுறையே ‘அரசு – தேசிய’ அணுகுமுறை என்றோம். இந்த மாற்று மாதிரியானது வெவ்வேறு சமூக – கலாச்சார அடையாளங்களை மதிக்கிறது, அப்படியே தொடர பாதுகாப்பு அளிக்கிறது.
  • இதன் வாயிலாக மக்களும் அரசியல் சமூகமும் வெளிப்படுத்தும் வேறுபாடுகளையும் அது அங்கீகரிக்கிறது. ஒன்றோடொன்று போட்டிபோடும் அல்லது எதிர் முரணாக இருக்கும் கருத்துகளுக்குக்கூட இடம் தரும் சட்டப்பூர்வ, அரசியல் வழிமுறைகளை உருவாக்குகிறது; இந்தியா இந்த மாதிரிக்கு உதாரணம் என்று நாங்கள் வாதிட்டிருக்கிறோம்.
  • உலகம் முழுவதிலுமே ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு சமூக – கலாச்சார மக்கள் வாழும் பன்மைத்துவ நிலை இருப்பதால் இந்தியாவின் ‘அரசு தேசியம்’ பின்பற்றத்தக்க மாதிரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறோம்.

இன்றைய சவால்கள் என்ன?

  • கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்த மாதிரிக்கு பெரிய போட்டியாக உருவாகியிருப்பதுபோலத் தெரிகிறது. உலகமே பின்பற்ற வேண்டும் என்று கூறிய தேசிய மாதிரி இந்தியாவில் நொறுங்கிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் ‘ஒரே நாடு – ஒரே…’ என்ற சொல்லாட்சி எல்லாவற்றிலும் வலியுறுத்தப்படுகிறது.
  • புதிய தேசிய அரசியலில் ஒற்றுமை என்பது எல்லாம் ‘ஒரே மாதிரி’யாக இருப்பது என்றாகிவிட்டது. எந்தப் பன்மைத்துவமும் சந்தேகத்துக்கு உள்ளாகிறது, ஆள்வோரின் சீற்றத்துக்கும் ஆளாகிறது.

‘அரசு – தேசிய’ மாதிரியில் இப்போது திடீரென ஏற்பட்டுள்ள சரிவை எப்படி விளக்குவது?

  • ‘அரசு – தேசிய’ மாதிரி என்பது கருத்துப்பொருள்தான், உண்மையான வாழ்க்கையில் நடந்த பாதையை நம்பியிருப்பது அல்ல என்று சுலபமாக வாதிட்டுவிட மாட்டேன். ‘அரசு தேசியம்’ என்பதற்கு இந்தியா இன்னொரு உதாரணமாக அல்ல – அந்த வகையில் மிகச் சிறந்த உதாரண நாடாகத் திகழ்ந்திருக்கிறது. எனவே, இந்தியாவில் அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து அந்த மாதிரிக்கே ஏற்பட்டிருக்கும் ஆபத்தான சவாலாகும்.
  • இந்த விவகாரம் தொடர்பாக நிறைய யோசித்த பிறகு பின்வரும் முடிவுக்கு வந்திருக்கிறேன். அரசு தேசிய மாதிரி என்பது நல்ல முயற்சி, இப்போதைய உலகில் நாம் அடைய வேண்டும் என்று முயற்சிக்க வேண்டியது. நம்முடைய புத்தகம் இந்த வழிமுறையை முழுதாகப் புரிந்துகொள்ளவில்லை, இப்படிப்பட்ட அரசு தேசியத்தை உருவாக்குவதுடன் அதைத் தொடர்ந்து வழிநடத்த என்ன தேவை என்று அது விவாதிக்கவி்ல்லை.
  • புத்தகம் கடுமையான வழிமுறைகளான அரசமைப்புச் சட்டம், நிறுவனங்களின் வடிவமைப்பு, முறையான அரசுக் கொள்கைகள், கட்சி அரசியலின் இயல்பான நிலை ஆகியவை குறித்துத்தான் பேசுகிறது, மக்களுடைய தனித்துவம், மாறுபட்ட நிலைக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் சமுதாய மனப்பக்குவம், சேர்ந்து வாழும் மனப்பான்மை, பொது விஷயங்களில் மக்களுடைய கருத்து ஆகியவற்றுக்குப் போதிய கவனம் செலுத்தவில்லை.
  • இப்போது இருப்பது கலாச்சார அரசியல் காலம். கடந்த 75 ஆண்டுகளில் தேசிய அரசியல் குறித்து அதிகம் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்துவிட்டோம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம்முடைய தலைவர்களின் அக்கறை இரண்டு வகையானவை. சிலர் பன்மைத்துவத்துக்கு முக்கியத்துவம் தராமல் ஒற்றுமை மட்டுமே முக்கியம் என்கின்றனர். மற்றவர்கள் பன்மைத்துவத்தை மட்டுமே வலியுறுத்தி ஒற்றுமையின் அவசியத்தை மறந்துவிட்டனர்.
  • நாம் இந்த வேறுபட்ட நிலையிலிருந்து மீண்டு சமநிலையை அடைய வேண்டும், அரசு - தேசியம் என்று அழைக்கப்படும் இந்தியாவை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (08 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்