TNPSC Thervupettagam

எது மக்களின் அதிகாரத்தை உருவாக்குகிறது?

April 8 , 2024 288 days 199 0
  • அதிகாரம் செயல்படுகிற விதங்கள் இரண்டு என அம்பேத்கர் குறிப்பிடுவார். ஒன்று உள்கட்டுமானம், அடுத்தது வெளிக்கட்டுமானம் என அதை விளக்கினார். சட்டங்கள் முதலியன வழியாகச் செலுத்தப்படும் அதிகாரம் வெளிக்கட்டுமானம். உள்கட்டுமானம் என்பது மக்களிடையே திரண்டிருக்கும் கருத்து, நிலவும் பழக்கம், தொடரும் வழக்கம், பின்பற்றப்படும் மரபு முதலியவற்றால் உருவாவது.
  • இரண்டுக்கும் ஒத்திசைவு இல்லையெனில் எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த முடியாது. இதற்கு அம்பேத்கர் சொன்ன அயல்நாட்டு உதாரணங்கள் பல. நம் நாட்டில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கிக் கிடப்பதை நினைத்துப் பாருங்கள். 1905இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்குப் பிறகு மக்கள் அதிகாரம் திரளத் தொடங்கியது.

மக்களின் வலிமை:

  • கோரல் மில் வேலை நிறுத்தத்தின் போதும் விபின் சந்திர பால் விடுதலையை ஒட்டி வ.உ.சி. கொண்டாட விரும்பிய தேசிய நாள் கொண்டாட்டத்தின்போதும் ஆட்சியாளர்கள் அவரை விசாரணைக்கும் பேச்சுவார்த்தைக்கும் தொடர்ந்து அழைத்தனர்.
  • ஆனால் அவர் மக்களிடம் சென்று பேசுவதில் காட்டிய முதன்மைக் கவனத்தை, அதிகார வர்க்கத்திடம் போய்ப் பேசுவதில் காட்டவில்லை. அதற்குக் காரணம் ‘உள்கட்டுமான’த்துக்கு அவர் அளித்த முன்னுரிமை. மக்களிடம்தான் வலிமைமிக்க அதிகாரம் உள்ளது என்பதை 1908இலேயே வ.உ.சி. உணர்ந்திருந்தார்.
  • இந்த ஆண்டு நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்ட நிகழ்வில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை மக்களின் வலிமையைத்தலைவர்கள் உணர்ந்துவிட்டிருந்தனர் என்பதற்குச் சான்றாகக்காட்டலாம். ஆமைச்சாடி தேவன், ராமன் இளையாத்து ஆகிய சத்தியாகிரகிகளின் கண்களில் எதிராளிகள் சுண்ணாம்பைப்பூசித் துன்புறுத்தினர். இந்த அசம்பாவிதத்தை ஒட்டிக்காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
  • ‘‘அதிகாரிகள் மூலமாகத் தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்வதைக் காட்டிலும் பத்திரிகைகள் மூலமாகத் தங்கள் கோபத்தைவெளிக்காட்டுவதில்தான் சத்தியாகிரகிகள் கருத்துடையவராக இருக்கிறார்கள்’’ (ப.161, ‘வைக்கம் போராட்டம்’,பழ.அதியமான், 2020). பிரச்சினையைப் பத்திரிகையின் மூலமாக மக்களிடம் கொண்டுசெல்வதில்தான் சத்தியாகிரகிகள் கவனம் செலுத்தினர் என்பது இதிலிருந்து தெரிகிறது.
  • ‘‘பிரச்சினையைச் சட்டசபையில் எடுத்துக்கூறித் தீர்வு கண்டிருக்க வேண்டுமே ஒழிய அவசரப்பட்டு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தது தவறு’’ என்று திருவாங்கூர் சமஸ்தான திவான் (பொறுப்பு) வீரராகவ ஐயங்காரும் சத்தியாகிரகிகளைக் குற்றஞ்சாட்டினார்.
  • ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் சட்டசபையில் பல முறை தீர்மானம் கொண்டுவந்து அவை தோல்விகளைத் தழுவின. பின்னரே மக்கள் கருத்தை உருவாக்கச் சத்தியாகிரகத்தை முன்னெடுத்தார். இதுவும் மக்கள் சக்தியே மகத்தானது என்பது உணரப்பட்டதன் அடையாளமாகும்.
  • அதைப் போல வைக்கம் கோயில் தெருவில் ஒடுக்கப்பட்டவர்கள் நுழைய அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவுப்படி செயல்படலாம் என்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதைச் சத்தியாகிரகிகள் தரப்பு ஏற்றது.
  • ஒடுக்கப்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமுடைய வைதிகர் தரப்பு வாக்கெடுப்பை ஒப்புக்கொள்ளத் தயங்கியது. வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும் சத்தியாகிரகிகள் அதற்குக் கட்டுப்படுவார்கள். ஆனால், வைதிகர் அந்த வாக்கெடுப்பின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பது தேவையல்ல என்று காந்தி அதிரடியாகக் கூறினார். வைதிகர் உள்பட அனைவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர்.
  • எந்த வாக்கெடுப்பின் முடிவையும் இரு தரப்பும் ஒப்புக்கொள்வதுதான் உலக நடைமுறை. அதுவரை அல்ல, உலக வரலாற்றில் இன்று வரை அதுதான் நடைமுறை. அப்படியிருக்க வைதிகர் வாக்கெடுப்பின் முடிவை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று காந்தி சொன்னார்.
  • அப்படியானால் பிறகு ஏன் அதை நடத்த வேண்டும்? மக்கள் கருத்தை இதன் தொடர்பில் ஏற்படுத்திவிட வேண்டும் என்பது காந்தியின் நோக்கம். அப்படி உருவாகிவிட்ட மக்கள் கருத்துக்கு எதிராக வைதிகர்களால் நிற்க முடியாது; அப்படியே எதிர்த்து நின்றாலும் எவ்வளவு காலம் எதிர்த்து நிற்க முடியும் என்று காந்தி எண்ணியிருக்கக்கூடும். மக்கள் கருத்தின் வலிமையை வாக்குரிமை வருவதற்கு முன்பே காந்தி உணர்ந்திருந்தார் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

கருத்து உருவாக்கம்:

  • அதேபோல ‘‘கோயில் தெரு நுழைவு உரிமையைச் சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து பெற்றுக் கொள்ளலாம். எதற்கு அனாவசியமாகச் சத்தியாகிரகம் நடத்த வேண்டும்’’ என்று ஒரு கட்டத்தில் திருவாங்கூர் அரசு சட்டசபையிலேயே தெரிவித்தது.
  • ஆனால், நீதிமன்றத்தைச் சத்தியாகிரகிகள் நாடவில்லை. இதற்கும் சத்தியாகிரகிகளில் காந்தி உள்பட பெரும்பான்மையோர் பாரிஸ்டர்களும் வக்கீல்களும்தாம். காந்தி அது பற்றி இப்படிக் கூறினார்: ‘‘எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத்தான் தீண்டாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுக்கப்படும் உரிமை அல்லது வழக்கம் என்ற விஷயத்தைத் தீர்க்க வேண்டும் எனில், அது திருவாங்கூர் சாதாரண குற்றவியல் சட்டத்தின்படி விசாரிக்க வேண்டி வரும்.
  • ஆனால், அதற்கு முன் அரசாங்கத்தின் உதவியுடன் பொதுமக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கி விடலாம் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் அது தடுக்கப்பட முடியாததாக ஆகிவிடும்’’ (ப. 160 - 161, தேர்ந்தெடுக்கப்பட்ட வைக்கம் சத்தியாகிரக ஆவணங்கள்).
  • ஆக நீதிமன்றத்துக்கு வழக்கு போவதற்கு முன்பே மக்கள் கருத்தைச் சாதகமாக உருவாக்கிவிடுவது பாதுகாப்பானது என்பது காந்தியின் எண்ணம். மக்களின் கருத்தைச் சாதகமாக மாற்றுவதில் பிரச்சாரம் மிக முக்கியமானது. அதில் பெரியார் ஆற்றிய பங்கு பெரிய அளவிலானது.
  • மக்களின் கருத்தை உருவாக்க, தலைநகர் திருவனந்தபுரம் நோக்கி இரண்டு மக்கள் பேரணிகள் நிகழ்ந்தன. சஞ்சார உரிமைக்கு ஆதரவாக மக்கள் கருத்தை உருவாக்கும் நோக்கத்தில் அவை அமைந்தன. மக்களின் கருத்து தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சாதகமாக உருவாகிவிட்டதன் விளைவாக, முதலில் முரண்டு பிடித்த அரசாங்கம் வேறு வழியின்றி பின்னால் இறங்கி வந்தது.
  • பொதுமக்கள் கருத்து என்பது வெடி மருந்து போன்றது என்ற காந்தியின் வெளிப்பாடு புகழ்பெற்றது. அதை வைக்கம் சத்தியாகிரகத்தின் போதுதான் காந்தி சொன்னார். மக்கள் தம் வலிமையை உணர்ந்து செயல்பட வேண்டிய முக்கியமான தருணம் தேர்தல் காலம்.
  • மக்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்