TNPSC Thervupettagam
September 24 , 2019 1934 days 2580 0
  • முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மனதில் 1958-ல் எழுந்த எண்ணம் உருப்பெற்று, 24.09.1969-இல் அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி.ராவ் மூலம் எனக்காக அல்ல உனக்காக என்ற தாரக மந்திரத்துடன் என்எஸ்எஸ் எனப்படும் நாட்டு நலப்பணித் திட்டம் தொடங்கப்பட்டது. இன்று 50 ஆண்டுகளைக் கடந்த நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்எஸ்எஸ்) பொன்விழா நாள் கொண்டாடப்படுகிறது.

என்எஸ்எஸ்

  • மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மிகப் பெரிய அங்கீகரிக்கப்பட்ட இளைஞர் அமைப்பாக என்எஸ்எஸ் விளங்குகிறது.  முதலில் 37 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 40,000 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட என்எஸ்எஸ், தற்போது சுமார் 600 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 42 லட்சம் மாணவர்களைக் கொண்டு சேவைகளைச் செய்து வருகிறது.
  • தமிழகத்தில் மட்டும் 22 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4,20,000 மாணவ, மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்து சேவையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.      
  • சமுதாய சேவையின் மூலம் தங்களது ஆளுமைத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்வது என்எஸ்எஸ்-இன் முக்கிய நோக்கம். ஒடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் ஆலயத்தில் உள்ள தேர்ச் சக்கரம், என்எஸ்எஸ் அமைப்பின் குறியீடாகும்; இதன் 8 கட்டங்கள் 24 மணி நேர சேவையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கிராமத்தில் மாணவர்கள்

  • நாட்டு நலப்பணித் திட்டத்தில் உள்ள மாணவர்கள் ஆண்டுக்கு 120 மணி நேர சேவையும் ஏழு நாள் சிறப்பு முகாமில் பங்கேற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏழு நாள் முகாமில் ஒரு கிராமத்தை மாணவர்கள் தத்தெடுத்து அங்கேயே தங்கி அந்தக் கிராமத்தின் சமுதாய, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துதல், மரம் நடுதல், பள்ளிக் கட்டடத்துக்கு வெள்ளை அடித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழிகாட்டி வகுப்புகள் நடத்துதல், மது-புகை-எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராம மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஊர் மகளிருக்கு கோலப் போட்டி நடத்தி பரிசளித்தல் ஆகியவை நடைபெறும்.
  • மேலும், கிராம மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்று, அவற்றுக்கு  தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளையும் என்எஸ்எஸ் மாணவர்கள் செய்கின்றனர்.
  • மேலும், சிறப்பு முகாமில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் நிறைய மாற்றங்களை அவர்களிடத்தில் காண முடியும். குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து அவர்களே சமையல் செய்து மற்றவர்களுக்குப் பரிமாறிய பிறகு உண்பது, பாத்திரங்களை தாங்களே சுத்தம் செய்வது, அனைவருடனும் அனுசரித்து எப்படிப் பழக வேண்டும், கிராம கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை அனுபவம் ஆகியவற்றை இந்தச் சிறப்பு முகாம் மூலம் மாணவர்கள் பெறுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக 240 மணி நேர சேவையை மாணவர்கள் செய்ய வேண்டும். 
  • சிறப்பு முகாம்கள் தவிர தேசிய ஒருங்கிணைப்பு முகாம், சாகச முகாம், குடியரசு தின அணிவகுப்பு முகாம், தேசிய இளைஞர் விழா உள்ளிட்டவையும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

மாநில கலாச்சாரங்கள்

  • தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 200 மாணவர்கள் ஒரு மாநில பல்கலைக்கழகத்தில் கூடி அவரவர் மாநில கலாசாரங்களை தொடர்ந்து 7 நாள்கள் வெளிப்படுத்துவர்.
  • இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசத்தில் நடத்தப்படும் கோடை, குளிர்கால சாகச முகாம்களில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 1,500 மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். சறுக்கு விளையாட்டு, மலையேற்ற பயிற்சி, நடைப் பயிற்சி, ஆற்றைக் கடக்கும் பயிற்சி ஆகியவை மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
  • 1988-ஆம் ஆண்டு முதல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பை என்எஸ்எஸ் மாணவர்கள் பெற்றனர். இதில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 81 மாணவர்கள் பங்கேற்று குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் ஆண்டுதோறும் 81 மாணவர்கள் பங்கேற்கும் வாய்ப்பை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும்  ஜனவரி 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் விழா நடைபெறும். இதில் அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்துவர்.
  • சிறப்பாகச் சேவை செய்யும் பல்கலைக்கழகம், கல்லூரி, பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொருத்தவரை படிப்பு மட்டும் அவர்களுக்கு அறிவை அளிக்காது; சமுதாயம் சார்ந்த சேவைகளும் சிறந்த சமூகப் பழக்கங்களும் இருந்தால்தான் அவர்கள் முன்னேற முடியும்.  இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல; அவர்களைக் குறைவாகப் பயன்படுத்துகிறோம். 
  • கல்லூரியில் 5,000 மாணவர்கள் இருந்தால், அவர்களில் 500 மாணவர்களுக்கு மட்டுமே நாட்டு நலப்பணித் திட்டத்தில் (என்எஸ்எஸ்) இடம்பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.  மற்றவர்களும் தங்கள் பொன்னான நேரத்தை சமுதாய மேம்பாட்டுக்குச் செலவிட இந்தப் பொன்விழா ஆண்டில் அரசு நடவடிக்கை மேற்கொண்டால் அனைத்து மாணவர்களுக்கும் அது பொன்னான வாய்ப்பாக அமையும்; சிறந்த சமுதாயம் உருவாகும்.

நன்றி: தினமணி (24-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்