TNPSC Thervupettagam

என்ன சொல்கின்றன புதிய சட்டங்கள்?

August 29 , 2023 502 days 651 0
  • சுமார் 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் பெயர், இப்போது எங்கு இருக்கிறார் போன்ற விவரங்கள் தெரியவில்லை. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அவர்தான் 1970களில் நீதித் துறை வரலாற்றிலேயே தாய் மொழியான தமிழில் முதல் தீர்ப்பை வழங்கியவர். அந்த ஒரே காரணத்துக்காக அவரின் தீர்ப்பை மேல் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

காகித விரயமா?  

  • ராமாயி மற்றும் சிலர் எதிர் முனியாண்டி கோனார் மற்றும் சிலர்என்ற வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் 1978இல் தன் தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கின் மூலவழக்கில், ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு தமிழில் வழங்கப்பட்டதாலேயே அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, அந்த மாவட்டச் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது. இதற்கான மேல்முறையீட்டு வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் அப்போதைய சட்ட வரைமுறைப்படி, ‘தமிழில் வழங்கப்படும் தீர்ப்பு, தீர்ப்பே அல்ல... வெறும் காகித விரயமேஎன்று தமிழில் வழங்கப்பட்ட தீர்ப்பை, அந்தக் காரணத்தாலேயே இல்லா நிலையாக்கியது.
  • காலம் ஓடிவிட்டது. அதற்குப் பின் வந்த பல சட்டங்கள், அரசாணைகள், தீர்ப்புகள்படி கீழமை நீதிமன்றங்களில் இப்போது தமிழிலும் தீர்ப்பு பகரப்படுகிறது. நீதிமன்ற மொழி குறித்து இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 348 மொழிகிறது. அவற்றின் மீதான விவாதங்கள் இப்போதும் தொடர்கின்றன.

சர்ச்சையை ஏற்படுத்திய மாற்றம்

  • விடுதலை இந்தியா தேவையற்ற பல சட்டங்களை இப்போதும் தன் முதுகில் சுமக்கிறது. இவை அகற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. புதிய சட்டங்களைக் கொண்டு வருவது குறித்து 2020இல் ரன்பீர் சிங் தலைமையில் மத்திய அரசு அமைத்த குழு 2022இல் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. நடந்து முடிந்த நாடளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளில், குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்ட மசோதாக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
  • இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.C), இந்திய சாட்சிய சட்டம் (IEA) ஆகிய சட்டங்கள் முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா என பெயர் மாற்றப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளன.
  • இந்நிலைக் குழுவின் தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்லால் இருக்கிறார். இப்போது சட்டங்களின் பெயர்மாற்றமும் புதிய சட்டங்களின் ஓர் அங்கமாக உள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. உள்துறைச் செயலர் அஜய் பல்லா இந்தச் சட்டங்களின் பெயர் சம்ஸ்கிருத்தில் உள்ளது என்கிறார்.
  • எனினும் அரசியல் சாசனத்தின் பிரிவு 348இல், சம்ஸ்கிருதம் பற்றி ஒரு சொல்லும் இல்லை. 21,000பேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு மொழியை 140 கோடி மக்களின் சட்டத்துக்கான பெயராக ஏன் வைக்கிறீர்கள்? இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானதுஎன்று நிலைக்குழுக் கூட்டத்தில் வாதிடப்பட்டுள்ளது. புதிய சட்டங்களின் பெயரோடு, அவற்றின் உள்ளடக் கமும் முக்கியமானது. காலத்துக்கு ஏற்ப சட்டங்கள் மாற வேண்டியது தான். காய், கனியாவது நல்ல மாற்றம். பால் மோராக மாறுவதும் மோர் தயிராக மாறுவதும்கூட நல்ல மாற்றங்கள்தான். எனினும் கனி அழுகுவதும், தயிர் காடியாவதும் ஆரோக்கியமானவையல்ல.

என்னென்ன மாற்றங்கள்?  

  • இந்திய தண்டனைச் சட்டம் 1860ஆம் ஆண்டிலும் இந்திய சாட்சிய சட்டம், 1872ஆம் ஆண்டிலும், 1973இல் திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898ஆம் ஆண்டிலும் உருவாக்கப் பட்டவை. இந்திய தண்டனைச் சட்டத்தின் முந்தைய 511 பிரிவுகள், இப்போது 356 ஆகக் குறைகின்றன. எட்டு பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன. 175 திருத்தங்கள், 22 நீக்கங்கள் இடம் பெறுகின்றன.
  • இந்திய சாட்சிய சட்டத்தின் 170 பிரிவுகள் 163 ஆகின்றன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 533க்குப் பதில் 160 பிரிவுகள் மாற்றப்படுகின்றன. இ.த.ச.-இல் 377ஆவது பிரிவு நீக்கப் படுகிறது. 124A இ.த.ச. சட்டப் பிரிவு மாற்றப்பட்டு புதிய சட்டத்தில் 150ஆவது பிரிவாகச் சேர்க்கப்படுகிறது.
  • தேசத் துரோகம் என்பது இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவித்தல் என மாறுகிறது. இ.த.ச.-இன் 302ஆவது பிரிவு (கொலை) 101ஆகவும், 420 பிரிவு (ஏமாற்றுதல்) 316ஆகவும் மாறுகின்றன. மிக முக்கிய மாற்றங்கள் என்பவை பயங்கர வாதம் என்பதன் வரையறை, கும்பல் படுகொலைகள், திட்டமிடப்பட்ட குற்றங்கள் என்கிற அடையாளங்களில் மனித உரிமைகள் சட்டபூர்வமாக நசுக்கப்படுவது ஆகும்.

ஆபத்தான மாற்றங்கள்

  • சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (The unlawful activities (Prevention) Act, 1967) உள்ளிட்ட சட்டங்கள் ஏற்கெனவே உள்ளன. இந்நிலையில், புதிய சட்டங்களின்படி, அரசுக்குக் கோரிக்கை வைக்கும் சிறு ஆர்ப்பாட்டங்கள்கூட பயங்கரவாதச் செயலாக அடையாளப் படுத்தப்படலாம்.
  • சட்டப்பிரிவு 116(6)(a), காவல் துறையின் கரங்களில் கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கிறது. வெள்ளக் காலங்களில் அபாயத்திலிருந்து தப்ப நீர்நிலைகளில் சிறு உடைப்புகளைச் செய்து அபாயத்திலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்கின்றனர். இத்தகு செயல்களும் பயங்கரவாதப் பட்டியலில் சேரும்.
  • குற்றம்சாட்டப்பட்டவர்களை எந்த வன்முறையைப் பிரயோகித்தும் கைது செய்யலாம். மோதல் கொலைகள் (என்கவுன்டர்கள்) நிறுவனமயமாக்கப்படுகின்றன. கைவிலங்கிட்டுக் கைது செய்வது மனித உரிமை மீறல் என உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. புதிய சட்டங்கள் படி கைவிலங்கிடுவது உரிமை மீறல் அல்ல.
  • மேலும், தகுந்த முகாந்திரம் இல்லாமல் ஒருவர் கம்பிகளுக்குள் அடைக்கப்படுவது 60 நாள்களிலிருந்து 90 நாள்களாக உயர்த்தப்படுகிறது. தனி மனிதச் சுதந்திரம், மனித உரிமைகள் இவை இரண்டாம் தரமாக்கப்பட்டு அரசாங்கத்தின் அதிகாரமே புதிய சட்டத்தில் முதன்மைப் படுத்தப்படுகின்றன.
  • இத்தகு சட்டங்கள் ஏற்கெனவே எவ்வளவு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. 2018-2020களில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் 4,690 கைதுகள் நடந்தன. இதில் தண்டிக்கப்பட்டவை 3%தான். பாலியல் வன்முறை குறித்த சட்டங்களில் மாற்றுப் பாலினத்தினரின் அவதிகளுக்கு நிவாரணம் இல்லை; பாலியல் வன்கொடுமை குறித்த வரையறையில்கூடத் தெளிவுஇல்லை.
  • தளவாட வசதியின்றி மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி கவர்ச்சிகரமான வெறும் வாய்ச்சொல்லே புதிய சட்டத்தில் உள்ளது. தண்டனைக்குப் பதில் சமூக சேவை செய்ய வலியுறுத்தப்படும் என புதிய சட்டம் குறிப்பிட்டாலும், பல சந்தேகங்கள் தொக்கி நிற்கின்றன.

பால் குடிக்கும் பூனை

  • உலகின் முதல் சட்டத் தொகுப்பாகக் குறிப்பிடப்படுவது பாபிலோனிய மன்னன் ஹமுராபியினுடையது. பொ.ஆ.மு (கி.மு.) 1792-50களில் இது உருவானது. அதிலிருந்து தொடங்கி வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு மொழிகளில் நீதியும் சட்டமும் மாற்றங்களைச் சந்தித்துவருகின்றன.
  • ஒரு சட்டத்தின் உருவாக்கம் என்பது மனிதகுல வளர்ச்சியை நோக்கியதாகும். அது வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை அல்ல. புதிய சட்ட மசோதாக்களை, ஆய்வுக்காக உள்துறை இலாகாவுக்குப் பதிலாகச் சட்டம் - நீதித் துறைக்கான நிலைக்குழுக்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் கருத்து நிலவுகிறது.
  • சட்டம் என்பது ஒரு பூனை; அது பாய்ந்து பிடித்த எலிகளைவிட பதுங்கிக் குடித்த பாலே அதிகம்என்று ஒரு கவிதை உண்டு. ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகப் புதிய சட்டம் அமையக் கூடாது. மதம், சாதி எனப் பிரிவினைகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் தேசத்தில், புதிய சட்டங்களை உருவாக்குவதில் பரவலான விவாதமும் மனிதாபிமானப் பார்வையும் அடிப்படைத் தேவையாக உள்ளன.

நன்றி : இந்து தமிழ் திசை (29– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்