TNPSC Thervupettagam

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு

March 12 , 2021 1412 days 653 0

பொதுச் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும்:

  • ‘கரோனா இறுதிப் பெருந்தொற்று நோயல்ல. இது போன்ற பல பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்.
  • தங்கள் நாடுகளின் பொதுச் சுகாதாரத் துறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்' என உலக சுகாதார நிறுவனம் பல முறை எச்சரித்துள்ளது.
  • அதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகப் பொதுச் சுகாதாரத் துறையை வலுப்படுத்திட வேண்டும்.
  • பொதுச் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%-ஐ மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அரசே ஒதுக்கிட வேண்டும். ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • அரசு மருத்துவமனைகளில் அனைத்து சேவைகளும் இலவசம்: அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டின் மூலம் சிகிச்சை வழங்கும் முறை ஏழை நோயாளிகளைப் பாதித்துள்ளது.
  • ஊழல் முறைகேடுகளை அதிகரித்துள்ளது. மருத்துவக் காப்பீட்டு நிதியிலிருந்து ஊழியர்களைக் குறைந்த ஊதியத்தில் பணிநியமனம் செய்வது ஊழியர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக்கப்பட வேண்டும்.

தனியார்மயம் கூடாது:

  • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ‘சுகாதார மற்றும் நல வாழ்வு மைய’ங்களாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன.
  • அதன் ஒரு பகுதியாக அவசர கோலத்தில் சிகிச்சை மையங்களை உருவாக்கும் ஆபத்தான போக்கு கைவிடப்பட வேண்டும்.
  • மாவட்ட மருத்துவமனைகளைப் பாதுகாக்க வேண்டும்: மாவட்ட மருத்துவமனைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிடுவது குறித்த ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  • இருதய, நுரையீரல், புற்று நோய் சிகிச்சைகளைத் தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிடும் முடிவானது, பொதுச் சுகாதாரத் துறையை வலுவிழக்கச் செய்துவிடும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகரிக்க வேண்டும்:

  • தமிழகத்தில் 30 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இவற்றை 15 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒன்று என்ற அளவில் அதிகரிக்க வேண்டும்.
  • அவற்றின் சேவைத் தரத்தை மேம்படுத்திட வேண்டும். அவற்றை 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாக மாற்ற வேண்டும். அதற்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை அதிகரிக்க வேண்டும். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குக் கழிப்பிடம், வீட்டு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

அரசு மருத்துவச் சேவை நேர விரிவாக்கம்:

  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலை நேரங்களில் வெளி நோயாளிகள் பிரிவுகள், அறுவை சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுவதுபோல், மாலை நேரத்திலும் 4 மணி முதல் 9 மணி வரை முழுமையாகச் செயல்படச் செய்திட வேண்டும். இதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமித்திட வேண்டும். இது பொதுமக்களுக்கு மிகவும் உதவும்.
  • மருந்து உற்பத்திக்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்: மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளில் 80% மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கே சென்றுவிடுகின்றன.
  • இதைக் குறைக்கத் தமிழக அரசே அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்திசெய்ய வேண்டும். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளுக்குக் குறைந்த விலையில் இவற்றை வழங்குவதோடு, அரசு மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் பொதுச் சந்தையிலும் விற்பனை செய்திட முடியும்.
  • ஏற்கெனவே, சித்த மருந்துகளை டாம்கால் மூலம் தமிழக அரசு உற்பத்திசெய்வதை இதற்கு ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.

மருத்துவ ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு:

  • தமிழகத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திட வேண்டும். வைரஸ் ஆராய்ச்சி மையத்தைத் தமிழக அரசே உருவாக்கிட வேண்டும்.

ஊட்டச் சத்துக் குறைபாட்டுக்குத் தீவிர கவனம்:

  • தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைபாடும், ரத்தசோகையும் அதிகரித்துவருகிறது. இதைச் சரிசெய்ய உகந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.

மருத்துவத் துறைப் பணியாளர்களுக்கு நிவாரணம் :

  • கரோனாவால் இறந்த அல்லது கரோனா தொற்றுக்கு உள்ளான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து, இழப்பீடுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.

கண்டுகொள்ளப்படாத ஊதியக் கோரிக்கை:

  • மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட நெடுநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

பத்து சதவீத இடஒதுக்கீடு:

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்திட வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களைத் தரமுள்ளதாக்கிட வேண்டும். மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்களை மீண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்