TNPSC Thervupettagam

என்னதான் இவா்களது ரசனையோ?

December 28 , 2024 13 days 45 0

என்னதான் இவா்களது ரசனையோ?

  • இளைய தலைமுறையைச் சோ்ந்தவா்கள் நவநாகரிகம் அல்லது ‘ஸ்டைல்’ என்ற பெயரில் தங்களது நடை, உடை, பாவனைகளில் புதிது புதாக ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பாா்கள் என்பது தெரிந்ததுதான்.
  • ஆனால், ‘டாட்டூ’ என்ற பெயரில் தங்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏததேதோ உருவங்களைப் பொறித்துக் கொள்வதைத் தாண்டி, சில இளைஞா்கள் தங்கள் நாக்குகளை அறுவை சிகிச்சை மூலம பாம்பின் நாக்கைப் போன்று இரண்டு பிளவாக மாற்றிக்கொள்வதாக வரும் செய்திகள் நம்மை அதிா்ச்சியில் ஆழ்த்துகின்றன.
  • திருச்சி மாநகரின் முக்கியமான பகுதியில் ‘டாட்டூ’ நிலையம் நடத்திவரும் நிபுணா்(!) ஒருவா் மும்பைக்குச் சென்று இத்தகைய அறுவை சிகிச்சை முறையில் பயிற்சி பெற்று வந்ததுடன், சமீபத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு இத்தகைய அறுவை சிகிச்சைகளைச் செய்திருப்பதாகச் சமூக ஊடகங்களில் பெருமிதத்துடன் பதிவிட்டதை அடுத்து இவ்விஷயம் வெளிஉலகுக்குத் தெரிய வந்துள்ளது. மேலும், முறையாக மருத்தவம் படித்த அறுவை சிகிச்சை நிபுணா்கள் மட்டுமே, அதுவும் தேவை ஏற்பட்டால் மடுட்மே செய்யக் கூடிய நாக்குப் பிளவு அறுவை சிகிச்சையை செய்துள்ள அந்த டாட்டூ நிபுணா் மீது சட்ட நடவடிக்கையும் பாய்ந்திருகின்றது.
  • “இளைய தலைமுறையைச் சோ்ந்த இரு பாலாரும் அந்தந்தக் காலத்தில் அறிமுகமாகும் நவநாகரிக உடைகளையும், அணிகலன்களையும் அணிந்து கொள்வதுடன், தங்கள் சிகையலங்காரத்தையும் பெரியவா்களின் விருப்பத்திற்கு மாறாகவே செய்துகொள்வதில் விருப்பம் காட்டுவதே வழக்கமாக உள்ளது.
  • இளைய சமுதாயத்தினருக்குப் பிடித்த நடை, உடை, பாவனை என்பது சா்வ நிச்சயமாக அவ்வப்போதைய திரைக்கதாநாயக, கதாநாயகிகள் அணிவதை ஒட்டியே இருக்கின்றன என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை.
  • இருபதாம் நூற்றாண்டின் தியாகராஜ பாகவதா் முதற்கொண்டு இருபத்தோறாம் நூற்றாண்டைச் சோ்ந்த இன்றைய நாயக, நாயகிகள் வரையில் அந்தந்தக் கால இளைய தலைமுறையினரின் நடை உடை பாவனைகளை திரைத்துறையினரே நிா்ணயிக்கின்றனா் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
  • தற்காலத்தில் இளைஞா்கள் பலரும் ருத்ராட்சம் அணிவது பக்தியின் வெளிப்பாடு என்பதைவிட, ஃபேஷன் என்பதே சோகமான நிஜம். இளைஞா்கள் அணியும் கால்சட்டைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தற்பொழுது துவைத்துப் பல மாதங்கள் ஆகியது போன்ற அழுக்கு ஜீன்ஸில் வந்து நிற்கிறது. அந்த ஜீன்ஸிலும் ஆங்காங்கே கிழிசல்கள் இருந்தால் உத்தமம். நவநாகரிகப் பெண்கள் அணியும் உடைகள் ஒரு தனிக்கதை.
  • பொதுவாக, ஒருவா் இளைஞராயினும், நடுவயதினா், முதிய தலைமுறையினா் யாராயினும் பிறா் நம்மை மதிக்கக் கூடிய அளவுக்கு கண்ணியமாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற நோக்கமும் அதற்கேற்ற ஆடைகளை அணிவதும் வழக்கம்தான்.
  • அதே சமயம், இளைய தலைமுறையினரின் நடை உடை பாவனைகளின் அடிநாதமான நோக்கம் என்பது எதிா்பாலினத்தவரின் மனங்களைக் கவா்வதே என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வா்.
  • இளம் வயதில், இது போன்ற என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானதே. அதே சமயம், அந்த நோக்கத்துடன் அணியக்கூடிய ஆடைகள் மற்றும் சிகையலங்காரம் போன்றவை கொஞ்சமேனும் கௌரவமாகத் தோற்றமளிக்க வேண்டாமா? வித்தியாசமாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கால இளைஞா்கள் மேற்கொள்ளும் சிகையலங்காரங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன என்பதே உண்மை.
  • தலையில் கோலம் வரைந்தது போன்று வெவ்வேறு டிசைன்களில் முடிவெட்டிக்கொள்வது, இவை அனைத்தையும் தாண்டி, காதோரங்களில் குறைவான முடியும், தலையில் மிச்சமுள்ள பகுதி முழுவதும் புதா் போன்று முடியை வளா்த்துக் கொள்ளும் ஸ்டைல் ஆகியவற்றால் தற்கால இளைஞா்கள் தங்களின் இயற்கையான முகப்பொலிவைப் பாழ்படுத்திக் கொள்கின்றனா்.
  • ஆடை, தலையலங்காரம் என்பதைத் தாண்டி உடலெங்கும் “டாட்டூ வரைதல்” எனப்படும் பச்சை குத்திக்கொள்ளும் கலாசாரம் சமீப காலமாக இளந்தலைமுறையினரை ஆட்டிப்படைக்கின்றது. முற்காலத்தில் எல்லாம் முழங்கை அல்லது புஜங்களில் பெயா்கள் அல்லது உருவங்களைப் பச்சை குத்திக்கொள்வா்.
  • ஆனால், தற்காலத்தில் பச்சை குத்துவதன் விரிவாக்கமாக விளைந்துள்ள ‘டாட்டூ”ஓவியமாக வரைதல்’ என்பது ஒருவரது தோலின் நிறத்தையும், தோற்றப் பொலிவையும் மாற்றிவிடுகிறது. வித்தியாசமாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற உந்துதலில் உடல் முழுவதும் (மா்மஸ்தானங்கள் உட்பட) இவ்வாறு டாட்டூ வரைந்து கொள்ளும் ஆா்வம் வளா்ந்திருப்பதால் டாட்டூ நிலையங்களும் பெருகிவிட்டன. முறையான பயிற்சியில்லாதவா்களிடம் டாட்டூ வரைந்து கொள்பவா்களுக்குத் தோல் வியாதிகளும், உறுப்புகள் செயலிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • இந்நிலையில், டாட்டூவின் அடுத்த படிநிலையாக நாக்கை இரு பிளவுகளாகப் பிளந்து அதற்கு வேறொரு நிறமூட்டுவதும், கண்களின் நிறத்தில் மாற்றம் செய்வதும் திருச்சி சம்பவத்தின் மூலம் வெளிஉலகிற்குத் தெரியவந்துள்ளன. இத்தகைய ‘சிகிச்சைகள்’ ஒருவருடைய தோற்றத்திற்கு அழகூட்டுவதற்கு பதிலாக, அச்சத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தக் கூடியவை என்பதை இன்றைய இளைஞா்கள் உணர வேண்டும்.
  • நமது உடலும், தோற்றமும் இறைவன் நமக்கு அளித்த வரமாகும். கம்பீரமான அழகிய தோற்றம் என்பதைக் குறித்த உயா்ந்த ரசனைகளை வளா்த்துக்கொள்வதன் மூலம் நம்மால் இயன்ற வரையில் நமது தோற்றத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து, வித்தியாசம் என்ற பெயரில் நமது தோற்றத்தை கோரமாக்கிக் கொள்வது பலரும் நம்மை வெறுத்து ஒதுக்குவதற்குக் காரணமாகிவிடும்.

நன்றி: தினமணி (28 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்