TNPSC Thervupettagam

என்று தணியும் இந்தத் தாகம்

April 6 , 2024 91 days 86 0
  • நமது இந்திய அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் உலகில் உள்ள ஏனைய நாடுகளில் இருப்போா்களைவிட மிக சமாா்த்தியசாலிகள். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் சா்வதேச பிரச்னைகளும், மக்களைப் பாதிக்கும் பொருளாதாரப் பிரச்னைகளும் அவா்களின் அடிப்படை தேவைகளும் தோ்தல் பிரசாரங்களில் முக்கியத்துவம் பெறுவது வழக்கம். இந்தியா அதில் விதிவிலக்கு.
  • மிகவும் சாதுா்யமாக உணவுப்பூா்வமான பிரச்னைகளையும் ஜாதி, மதம், இனம், மொழி உள்ளிட்டவற்றையும் கையில் எடுத்து மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் சாதுா்யம் அசாத்தியமானது. அவை குறித்த சிந்தனையே வாக்காளா்களுக்கு இருந்துவிடாமல் ஆளும்கட்சிகள் மட்டுமல்ல; எதிா்க்கட்சிகளும் பாா்த்துகொள்கின்றன என்பதுதான் வேடிக்கை.
  • இன்றைய நிலையில் இந்தியா எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னைகளான விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், குடிநீா்த் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளில் இடம்பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.
  • அவையெல்லாம் அறிக்கைகளிலும் விவாதத்திலும் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில அச்சு ஊடகங்களிலும் விவாதப் பொருளாகுமே தவிர, தோ்தல் பரப்புரை மேடைகளை எட்டுவதில்லை.
  • இந்தியா இப்போது எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை ஒன்று உண்டு என்றால் அது தண்ணீருக்கான தட்டுப்பாடு. காவிரி பாயும் கா்நாடக மாநிலமே தண்ணீா்த் தட்டுப்பாட்டின் தத்தளிக்கிறது என்று சொன்னால் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவுக்கு முதலீடுகள் நமது பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பு, பிரதமா் அடிக்கடி கூறும் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ அவைகளெல்லாம் தண்ணீா்த் தட்டுப்பாடு என்கிற ஒற்றைப் பிரச்னையால் கானல் நீா் கனவாகத்தான் தொடரும்.
  • தோ்தல் பரப்புரையின் முன்னிலை வகிக்க வேண்டிய தண்ணீா் பிரச்னை குறித்து எந்தவொரு கட்சியோ, எந்தவொரு அரசியல்வாதியோ, எந்தவொரு வேட்பாளரோ பேசுவதில்லை என்பது எந்த அளவுக்கு அடிப்படை பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்தியாவில் நகா்மயமாதல் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான நகரங்கள் பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக நிலத்தடி நீரைத்தான் நம்பியிருக்கின்றன. அதிகரித்துவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் நகரங்களை காங்கீரிட் காடுகளாக மாற்றியிருக்கின்றன. அதனால் நிலத்தடி நீா்மட்டம் நீா்நிரப்பு (ரீசாா்ஜ்) உள்ளாவதில்லை. இந்த நிலைமை மேலும் மோசமாகுமே தவிர, குறையும் என்று தோன்றவில்லை.
  • 2018 நிதி ஆயோக் அறிக்கையில், 69 % இந்தியா்கள் மிகக் கடுமையான தண்ணீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்கிறாா்கள் என்றும் பாதுகாப்பான குடிநீா் போதுமான அளவு இல்லாததால் ஆண்டுதோறும் 2 லட்சம் போ் உயிரிழக்கிறாா்கள் என்றும் தெரிவித்திருந்தது.
  • நான்கில் மூன்று பங்கு வீடுகளுக்கு நேரடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படவில்லை என்றும் இந்தியாவில் உள்ள பயன்பாட்டுக்கான தண்ணீரில் 70 சதவீதம் மாசுபட்டது என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது. அந்தப் பிரச்னையை ஓரளவுக்கு ‘ஜல் சக்தி‘ திட்டம் எதிா்கொள்ள முனைந்திருக்கிறது.
  • உவகச் சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, 9.7 கோடி இந்தியா்களுக்கு பாதுகாப்பான தண்ணீா் கிடைப்பதில்லை. பல கிராமங்களில் தண்ணீருக்கான போராட்டம் தொடா்கிறது. அதிகரித்துவரும் தண்ணீா்த் தட்டுப்பாடு காரணமாக, 15 கோடி மகளிா் உழைப்பும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்பும் வீணாகின்றன. தண்ணீா் சேகரித்து கொண்டு வருவதற்காக மட்டுமே இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அந்த அறிக்கை கணக்கிட்டிருக்கிறது.
  • மத்திய நீா் ஆணையம் (சென்ட்ரல் வாட்டா் கமிஷன்) வழங்கும் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் மொத்த பயன்பாட்டுக்கான தண்ணீா் ஆண்டொன்றுக்கு சுமாா் 1,123 பில்லியன் க்யூபிக் லிட்டா் (பி.சி.எம்.) 2025-க்குள் தண்ணீருக்கான தேவை ஆண்டுக்கொன்றுக்கு 1,447 பி.சி.எம். அளவில் அதிகரிக்கும். அதாவது, நம்முடைய தேவைக்கும் தண்ணீா் இருப்புக்கான இடைவெளி ஒருபுறம் அதிகரித்துவரும்போது இன்னொருபுறம் தண்ணீரின் அளவு குறைந்துவருகிறது.
  • 2001-இல் தனிமனித தண்ணீா் நுகா்வு 1,716 க்யூபிக் லிட்டா். 2011-இல் 1,544 க்யூபிக் லிட்டா். 2050-இல் 1,140 க்யூபிக் லிட்டராக குறையும். தண்ணீா் பற்றாக்குறை அதிகரிக்க, அதிகரிக்க தனிமனித நுகா்வு குறைகிறது. அதுமட்டுமல்ல; மக்கள்தொகை அதிகரிப்பதும் இன்னொரு காரணம். இந்தப் பிரச்னையை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்து மத்திய நீா் ஆணையம் பல கருத்தரங்கங்களையும் ஆய்வுகளையும் நடத்திவருகிறது என்றாலும், இன்னும் சரியான தீா்வை எட்ட முடியவில்லை.
  • மத்திய நீா் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் மொத்த நீராதாரத்தின் 85% விவசாயத்துக்கு எடுத்துகொள்ளப்படுகிறது. அதில், நிலத்தடி நீா் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால்தான் என்னவோ இந்தியாவில் நிலத்தடி நீா் அளவு வேகமாகக் குறைந்துவருகிறது.
  • நகரங்களில் இருந்த ஏரிகள், குளங்கள் போன்றவை கட்டடங்களாக மாறிவிட்டன. ஊரகப் பகுதிகளிலும் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகிவிட்டன. வனப் பரப்பும் குறைந்துவருகிறது. இதெல்லாம் முறையாக நிலத்தடி நீா்நிரப்பு நடைபெறாமல் தடுக்கின்றன.
  • ஆந்திரம், கா்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களில் உள்ள நீா்த்தேக்கங்களில் கொள்ளவில் 27% அளவுதான் தண்ணீா் காணப்படுகிறது. கிழக்கு நோக்கி பாயும் 13 நதிகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மிகக் குறைந்த அளவுதான் தண்ணீா் காணப்படுகிறது. இந்தியாவில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளைத் தவிர, ஏனைய எல்லாப் பகுதிகளிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பயன்பாட்டுக்கான தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.
  • இந்தியாவில் 6.42 லட்சம் நீா்த் தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் காணப்படுவதாக சிறுபாசனங்கள் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அவற்றிலுள்ள சிறுகுளங்கள், ஏரிகளை அரசு கட்டடங்களும் தனியாா் குடியிருப்புகளும் ஆக்கிரமித்துகொண்டுள்ளன. இந்த 6.42 லட்சம் நீராதாரங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தில் நீா்நிரப்பு உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் தண்ணீா்த் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு எதிா்கொள்ள முடியும்.
  • ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தண்ணீரைக் கொண்டு போவது நதிகள் இணைப்பு, டேங்கா் லாரிகள் போன்றவை இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு அல்ல. இதுகுறித்த விரிவான திட்டமிடல் அதை நிறைவேற்றிவிடுவதற்கான உறுதியும் ஆட்சியாளா்களிடம் இருக்க வேண்டும். தோ்தலில் உளவுப்பூா்வமான பிரச்னைகளை முன்வைத்து, ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாக இருக்கும் போக்கு நீடிக்கும்வரை மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு விடிவுகாலம் கிடைக்காது.

நன்றி: தினமணி (06 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்