- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதியன்று அவரது லட்சியக் கனவான பசுமை இந்தியாவை உருவாக்குவதற்காக, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மரக்கன்றுகளை நடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
- அதே நாளில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் நாட்டின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் மிகுந்த மனவேதனைக்கு உட்படுத்தியுள்ளது.
- தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியத்தில் ஒரு மண்டலத்திற்குப் பொறுப்பு வகிக்கும் சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளர் ஒருவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
- இரண்டு நாள் நடத்திய சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை அவர்கள் கைப்பற்றி உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய பணம் உட்பட அனைத்து சொத்துகளும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த அந்த அரசு அதிகாரி, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வாங்கிக் குவித்த லஞ்சம் அதாவது கையூட்டு என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. எதற்காக அவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது?
- இந்த கேள்விக்கான விடையைத் தேடி அலைய வேண்டியதில்லை. தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் வெளிப்படுத்தும் மாசு நிறைந்த நீர் மற்றும் காற்று தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகக் கொடுக்கப்பட்ட லஞ்சம்தான் அவை.
- மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரியே லஞ்ச லாவண்யத்தில் திளைத்திருந்தால், "மரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்த்து, பசுமை இந்தியாவை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பேணிக் காப்போம்' என்ற அப்துல் கலாமின் கனவு எப்படி நிறைவேறும்?
கனவு எப்படி நிறைவேறும்?
- திடீர் சோதனையின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய பணம் மற்றும் சொத்துகளின் மதிப்பைப் பார்க்கும்போது அந்த அதிகாரி நீண்ட காலமாக லஞ்சம் வாங்கிக் கொண்டிருப்பவர் என்பதும், தனது உயர் அதிகாரிகளுக்கு பயந்து மறைமுகமாக லஞ்சம் வாங்கியவர் அல்ல என்பதும் தெளிவாகிறது.
- அதற்கான துணிவு அந்த அதிகாரிக்கு எப்படி வந்தது? அதன் பின்னணி என்ன? இவை பெரும்பாலான வழக்குகளில் வெளிச்சத்திற்கு வருவதில்லை.
- இம்மாதிரியான வழக்குகளில் கையும் களவுமாகப் பிடிபடும் அரசு அதிகாரிகள் மீதான குற்ற வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எப்போது வருகிறது? நீதிமன்ற விசாரணையில் அந்த அதிகாரிகள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டதா போன்ற செய்திகள் அதிக அளவில் பொதுவெளியில் தெரிவதில்லை.
- அந்த அதிகாரிகளில் பலர் தங்கள் மீதான வழக்குகளை ஏதோ ஒரு வழியில் சமாளித்து விடுகிறார்கள்.
- தற்போது பிடிபட்ட மாசுக் கட்டுபாடு வாரிய அதிகாரியைப் போன்று அரசின் மற்ற துறைகளிலும் லஞ்சம் வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அதிகாரிகள் பலர் உள்ளனர் என்பதை யாவரும் அறிவர்.
- உற்பத்தி செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு, அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என்ற வழக்கு விசாரணையின்போது லஞ்சம் வாங்குவோரின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையில், "அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்' என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
- அரசு அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக லஞ்சம் வாங்கியதும், லஞ்சம் வாங்குவது இழிவான செயல் என்று கருதிய காலத்தைக் கடந்து வந்து விட்டது இன்றைய சமுதாயம்.
- தன்னுடைய நிர்வாகக் கட்டுபாட்டின் கீழ் பணிபுரிபவர்களில் லஞ்சம் வாங்குபவர்கள் குறித்த விவரங்கள் தெரிந்திருந்தும் பல்வேறு காரணங்களுக்காக உயர் அதிகாரிகள் பாராமுகத்துடன் செயல்படுகின்ற இன்றைய நிலையை சமுதாயம் நன்கு உணர்ந்துள்ளது.
நாட்டு மக்களின் சேவகர்
- "அரசாங்கப் பணி என்பது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பணி. ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிந்தாலும் அதுவும் ஒருவகையில் பொதுச்சேவைதான்.
- மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்ய லஞ்சம் வாங்குபவர்களை நாட்டுப்பற்று மிகுந்தவர்களும் செய்தியேடுகளும் விழிப்புடன் செயல்பட்டு அம்பலப்படுத்துவதோடு, அவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும் வேண்டும்' என அண்ணல் காந்தியடிகள் கூறியுள்ளதை இன்றைய தினத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
- தன்னுடைய வசதிக்காக பொதுச்சேவை புரியும் அரசு ஊழியர்கள், பிறரைத் துன்புறுத்தக் கூடாது என்பதை காந்தியடிகள் தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமன்றி தனது வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்து வந்தார் என்பதற்கு சான்றாக நிகழ்வுகள் பல உள்ளன.
- நம்நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவம். ஒருநாள் தன்னுடைய உதவியாளர்கள் சிலருடன் காந்தியடிகள் லாகூரிலிருந்து பாட்னாவுக்கு ரயில் பயணம் மேற்கொண்டார்.
- பயணத்தின்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அவர் பயணித்த மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியின் மேல்கூரையிலிருந்து மழை நீர் பயணிகள் மேல் விழுந்ததால் காந்தியடிகள் உட்பட அனைத்துப் பயணிகளும் சிரமத்துடன் பயணித்தனர்.
- இத்தகவல் அறிந்த ரயில்வே ஊழியர் ஒருவர் காந்தியடிகளை நேரில் சந்தித்து சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் மற்றொரு பெட்டியில் இடம் ஒதுக்கித் தருவதாகக் கூறினார்.
- "வேறு பெட்டியில் எங்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்த பின்னர் இந்த பெட்டியை என்ன செய்வீர்கள்?' என்று காந்தியடிகள் கேட்டதற்கு "மற்ற பயணிகள் இந்தப் பெட்டியைப் பயன்படுத்திக் கொள்வார்கள்' என ரயில்வே ஊழியர் பதிலளித்தார்.
- "ஒழுகும் இந்தப் பெட்டி மற்ற பயணிகளுக்குப் போதுமானது என்றால் எங்கள் பயணத்துக்கும் இந்தப் பெட்டி போதுமானது. மற்ற பயணிகளுக்கு சிரமத்தைக் கொடுத்துவிட்டு நாங்கள் வசதியாகப் பயணம் செய்வதை நான் விரும்பவில்லை. இந்தப் பெட்டியிலேயே நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடருகிறோம்' என்றார் காந்தியடிகள்.
- சுதந்திர இந்தியாவில் அரசுப் பணியாளர்களின் நிலையோ காந்தியடிகள் வெளிப்படுத்திய உணர்விலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.
- அரசுப் பணியாளர்களின் செயல்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் போன்றே பொதுமக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று.
கலாசாரத்திற்கே இழுக்கு
- இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ரயில்வே துறைக்கு எட்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி காந்தியடிகளின் கவனத்திற்கு வந்தது.
- இது நாள்வரை லாபத்தில் இயங்கிவந்த ரயில்வே துறைக்கு தற்போது இழப்பு ஏற்படக் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடியபோது, பயணிகள் பலர் பயணச்சீட்டு வாங்காமலே பயணம் மேற்கொண்டதால் ரயில்வே துறைக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தார் காந்தியடிகள்.
- சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதால் மக்கள் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கைவிட்டுவிட்டு அவரவர் மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வு காந்தியடிகளுக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
- சுதந்திர இந்தியாவில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
- மேலை நாடுகளுக்கு இணையாக அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகள் வளர்ந்துள்ளன.
- ஆனால், லஞ்சம் கொடுக்காமலும், லஞ்சம் வாங்காமலும் வாழ்கின்ற வாழ்க்கை முறையை நிகழ்காலக் கல்வியும், சமுதாயச் சூழலும் இன்றைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டன.
- தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என்ற மனநிலை மேலோங்கி வருகின்ற இன்றைய சமுதாயத்தில், நேர்மையாக வாழ முயல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
- நேர்மையைப் பற்றிப் பேசிக்கொண்டே, நேர்மையற்றவர்களாக வாழும் கலையைக் கற்றுக் கொண்டவர்கள்தான் இன்றைய சூழலில் வெற்றியாளர்களாகத் திகழ முடியும் என்ற புதுவகையான வாழ்க்கைத் தத்துவம் சமூகத்தில் பரவி வருகிறது.
- எல்லா வகையான இயற்கை வளங்களையும் பெற்றுள்ள நம் நாட்டில் பல கோடி மக்கள் மூன்று வேளை உணவும், குடியிருக்க வீடும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், எல்லா மட்டங்களிலும் பரவியிருக்கும் லஞ்சமே.
- லஞ்சத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஏற்படும் தொய்வு, நாட்டின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகும்.
- 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஊழல் கருத்துக் குறியீட்டின்படி, உலகின் ஊழல் மிகுந்த நாடுகள் வரிசையில் 80-ஆவது இடத்தை இந்தியா பிடித்திருப்பது, நேர்மையையும் தர்ம சிந்தனையையும் உள்ளடக்கிய பாரம்பரியம் மிக்க நம் நாட்டின் கலாசாரத்திற்கே இழுக்கு என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது.
நன்றி: தினமணி (22-10-2020)