- பயணம் தவிர்த்தல் பொருந்தாத துறைகளில் ஒன்று ஊடகம். பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தி மக்களுக்கு விஷயங்களைச் சொல்லவும், மக்களின் பாதிப்பை அரசுக்கு உணர்த்திச் செயல்பாட்டைத் தூண்டவும் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாவது தொடர்கதையாகிவருகிறது.
- அந்த வகையில் என்னையும் கரோனா தொற்ற, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஒரு வாரச் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினேன். குடும்பத்தைப் பிரிந்து மருத்துவமனையில் தனித்திருக்கும் நாட்கள் எப்படி இருக்கின்றன? நோயாளிகளை எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள்? நோயாளிகள் சந்திக்கும் இடர்கள் என்னென்ன? நேரடி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
மருத்துவமனை வளாகம்
- கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிக்கொண்டுவருகிறார்கள். இரண்டு மாதக் கைக்குழந்தையை மார்பில் அணைத்தபடி இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு உள்ளே செல்லக் காத்திருந்தார்; சோகம் சூழ சுற்றிலும் குடும்பத்தினர்.
- இன்னொரு பக்கம், இரண்டரை வயதுக் குழந்தையை மடியில் வைத்துத் தாலாட்டும் இளம் தாயிடம், அகத்தின் கவலை ரேகைகள் முகத்திலும் தெரிகின்றன; கணவர் கொடீசியா தனிமைப்படுத்துதல் பகுதிக்கும், மனைவி இ.எஸ்.ஐ.க்கும் பிரித்து அனுப்பப்பட, குழந்தையுடன் விக்கித்து நிற்கிறார்.
- 60 வயதுக் கணவர் கரோனாவால் இறந்துவிட, 20 வயது மகளும் தொற்றுக்கு ஆளாக, கணவர் இறந்த துக்கத்தை நினைத்து வேதனைப்படக்கூட முடியாமல், மருத்துவமனை வாசலில் மகளுடன் கண்ணீரோடு நிற்கிறார் மற்றொருவர்.
- அவருடைய செல்பேசியை அங்கு இருப்பவர்களிடம் தர, யாரும் செல்பேசியைத் தொடக்கூட அஞ்சுகிறார்கள். தொற்று உறுதியானதால், நோயாளிகளின் பொருட்களை யாரும் தொடுவதில்லை.
- மற்றொரு நோயாளிதான் செல்பேசியை வாங்கிப் பேசினார். “மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், உடன் தங்க வேண்டும்” என செல்பேசியில் பேசியவர் சொல்கிறார். இப்படி ஏராளமான கண்ணீர்க் கதைகளைக் கடந்துதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குள் செல்ல வேண்டி இருந்தது.
- வார்டுக்குள் செல்லும் முன்பே தொற்றுள்ளவர்களுக்குத் தேவையான மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய், இதயநோய் என வேறு பிரச்சினை இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனித்தனியாக மாத்திரைகளை வழங்குகின்றனர். காலை, இரவு நேரங்களில் 4-5 மாத்திரைகள் வரை ஒவ்வொருவரும் உட்கொள்ள வேண்டும்.
உணவு உபசரிப்பு
- அதிகாலை நேரத்தில் ஒரு டம்ளர் பால், அதன் பின்னர் கபசுரக் குடிநீர், காலையில் வெண்பொங்கல், கோதுமை ரவை, காய்கறிகளுடன் கூடிய கிச்சடி, தேங்காய்ப்பாலுடன் இடியாப்பமும் ஊத்தப்பமும் வழங்கப்படுகின்றன.
- அதன் பின்னர் எலுமிச்சைச் சாறுடன் இஞ்சிச் சாறும் சேர்த்து சூடாகத் தருகிறார்கள். குடிக்கக் குடிக்கத் தொண்டைக்கு இதம் தருகிறது. மாம்பழச்சாறு, சாத்துக்குடி, பெரிய நெல்லிக்காய், சிறுதானியக் கூழ், மதிய உணவுக்கு முன் நாள்தோறும் மிளகு ரசம், மதிய உணவுடன் காய்கறி, கீரையுடன் கட்டாயம் ஒரு வேகவைத்த முட்டையை வழங்குகிறார்கள்.
- மாலை நேரத்தில் வேகவைத்த சுண்டல், பயிறு, தேநீர், சத்துமாவு தருகிறார்கள். இரவு சிற்றுண்டியாக இட்லி, பூரி, சப்பாத்தி, வெங்காய ஊத்தப்பம் என கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உணவுக்கு எவ்விதக் குறையும் இல்லை.
- தனித்தனிப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை, அங்கிருக்கும் ஊழியர்கள் வார்டின் மரப் பலகைகளில் வைத்துவிட்டு ஒரு அறைக்குச் சென்றுவிடுவார்கள். அதன் பின்னர் அவர்கள் விசில் அடித்ததும், நாம் சாப்பிடச் செல்ல வேண்டும்.
- உணவு தீர்ந்துவிட்டால் உடனடியாகக் கொண்டுவந்து தருகிறார்கள். ஒரு நாள்கூடக் குறை சொல்ல முடியாத அளவுக்கு உபசரிப்பு உள்ளது.
தேவை வெந்நீர்
- ஒரு அறைக்கு 4 பேர். அனைவருக்கும் தனித்தனிப் படுக்கைகள். சில இடங்களில் மின்விசிறி இல்லை. சிகிச்சையில் இருந்த மூதாட்டி மணி அங்கே வந்து 15 நாட்கள் ஆகின்றன என்றும், இருமல் நிற்கவே இல்லை என்றும் கூறினார். வயதாகிவிட்டதால் அவரை அங்கிருந்து அனுப்பாமல் இருந்தார்கள்.
- குடிப்பதற்குச் வெந்நீர் கிடைப்பதில்லை என்பது அவருடைய பெரும் கவலையாக இருந்தது. இருமல் தீராமல், பாட்டில் குடிநீரையே தொடர்ந்து குடிக்க வேண்டியிருந்ததால் இருமலுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
- இன்னொருபுறம், கழிப்பறைகளில் தாழ்ப்பாள் இல்லாததால், பெண்கள் பலரும் கழிப்பறை செல்லவே தயங்குகின்றனர். நோய் பாதித்த பலருக்கும் வயிற்றுப்போக்கு இருப்பதால் அடிக்கடி கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதுபோன்ற குறைகளை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகக் களைய வேண்டும்.
- நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து ‘பிபிஇ கிட்’ எனப்படும் முழுக் கவச உடை அணிந்த நிலையில், சி.டி. ஸ்கேன் எடுக்கிறார்கள்.
- பலரும் அந்த உடை அணியத் தொடங்கியதும் வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிடுகிறது. பரிசோதனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால், 8 மணி நேரத்துக்கு மேலாக முழுக் கவச உடையை அணிந்து இன்முகத்துடன் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களின் பணி மெச்சத்தக்கது.
- அவர்கள் உடல்ரீதியான அவதியை எதிர்கொள்கிறார்கள். அதிக உடல்நலப் பாதிப்பு இருப்பவர்களுக்கு மாத்திரையுடன் ஊசி, அவ்வப்போது வென்டிலேட்டரும் அளிக்கப்படுகிறது. ஆளற்ற அறையில் ஒலிக்கும் கடிகார முள் சத்தம்போல, ஏதாவது ஒரு வார்டிலிருந்து இருமல் சத்தம் நொடிக்கு நொடி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
குழந்தைகளை என்ன செய்கிறார்கள்?
- தனிக் குடித்தனங்கள் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில், வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், பெற்றோருடன் தொற்று பாதிக்காத குழந்தைகளும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
- கரோனா வார்டு என்பதால், குழந்தைகளிடம் எளிதாக நோய் பரவுவதற்கு இதுவே ஒரு வாய்ப்பாக மாறிவிடுகிறது. மருத்துவமனைக்கு வந்த பின்னர் பாதிக்கப்படும் குடும்பங்களும் உண்டு. தமிழகம் முழுவதுமே தொற்று பாதிக்காத குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, அதே வளாகத்தில் ஒரு சிறப்புத் தனிமைப்படுத்துதல் பகுதி அமைத்துத் தந்தால், அந்தக் குடும்பங்களும் நிம்மதியாகச் சிகிச்சை பெறும்.
- “மருந்து கண்டறியப்படாத ஒரு கொள்ளைநோய்க்கு மருத்துவம் என்பதால், ஆரம்பத்திலேயே பலரும் மனதளவில் ஊனமாகிவிடுகிறோம். அதன் பிறகு, குடும்பங்கள் படும் துயரம் மனதளவில் பல மடங்கு வேதனையை அதிகப்படுத்துகிறது” என்கிறார், தொற்று இல்லாத குழந்தையையும் உடன் கூட்டிவர நேர்ந்த தாயார் ஒருவர்.
- மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது அவரவர்கள்தான் வாகன ஏற்பாடு செய்து போக வேண்டும். தனியார் டாக்ஸிகள் தயங்குவதால், ஆட்டோக்களில் செல்ல வேண்டியுள்ளது. வீட்டில் 14 முதல் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தும் நிலையில், தனியார் வாகனங்களில் செல்வது ஓட்டுநருக்கும் அந்த வாகனங்களைப் பயன்படுத்தும் பிறருக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான். அழைத்துவருவதற்கு ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனை வாகனங்கள் இருப்பதுபோல், வீட்டுக்கு விடவும் மருத்துவமனையில் பேருந்துகள் போன்று ஏற்பாடு செய்யலாம்.
நன்றி: தி இந்து (27-08-2020)