- வேளாண் சுற்றுலாவுக்கு மூன்று வகையான தலையாய கொள்கைகள் இருக்கின்றன. அவை சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் வகையில் கண்கவர் பொருட்களை வைப்பது, பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி செயல்பாடுகளை வகுப்பது மற்றும் பண்ணையில் விளையும் பொருட்களை வாங்கும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவது. இம்மூன்று கொள்கைகளை உள்ளடக்கியே வேளாண் சுற்றுலா இருத்தல் வேண்டும்.
- ஜனநாயகத்துக்கு எப்படி நான்கு தூண்கள் இருக்கின்றதோ, அதே போல் வேளாண் சுற்றுலாவுக்கும் நான்கு தூண்கள் இருக்கின்றன. அவை, பயிர் சாகுபடி, பொழுதுபோக்கு அம்சங்கள், பரிமாறப்படும் உணவு வகைகள் மற்றும் தங்குவதற்கான அறைகள். இவை எல்லாவற்றையும்விட வேளாண் சுற்றுலா பண்ணையானது முதன்மையாக விவசாயிகள், அதனூடே கிராமம், வேளாண்மை ஆகியவற்றோடு சங்கமிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
- புதியதொரு தொழிலை ஆரம்பிக்கும்போது சாதக பாதகங்களை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் தொழிலின் நீடித்தத் தன்மை, சந்தையில் அதற்கு உண்டான வரவேற்பு போன்றவற்றையும் கவனத்தில் வைக்க வேண்டும் என்பது தலையாய விதி. அத்தகைய விதி வேளாண் சுற்றுலாவுக்கும் பொருந்தும். வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்கும் பண்ணையாளர்கள் பண்ணையை தேர்வு செய்யும்போது பண்ணை அமைந்திருக்கும் சூழலை கவனிக்க வேண்டும். தேவையான தரவுகளை அவர்கள் திரட்ட வேண்டும்.
- அதாவது அந்தப் பண்ணை அமைந்து இருக்கும் இடத்தில் சுற்றுலாத்தலம் ஏதேனும் இருக்கிறதா, அப்படி இருக்கிறதென்றால் சுற்றுலாவாசிகள் எத்தனைபேர் வருகை புரிந்துள்ளனர் என்றும் அவர்களின் சமூக காரணிகளையும் ஆராய வேண்டும். அதற்கடுத்து அவர்கள் வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் பற்றி விலாவாரியாக அலச வேண்டும். அத்தோடு வேளாண் சுற்றுலாவுக்கு உண்டான நிதி நிலையையும் தயார் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்ட வேளாண் சுற்றுலா பண்ணையின் மாதிரியை எடுத்துக் கொள்வோம்.
- வேளாண் சுற்றுலா என்பது பருவகாலத்தோடு ஒன்றிப்போன காரணத்தால் அங்கு ஆண்டுக்கு 240 நாட்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வேளாண் சுற்றுலா பண்ணையின் செலவினங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் ரூ.40 முதல் ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. வருமானம் ரூ.30 லட்சம் கிடைக்கும் என்கிற பட்சத்தில் செலவினத்தை ஒன்றரை ஆண்டுக்குள் சமன் செய்து விடலாம்.
- மேலும் நபர் ஒருவருக்கு பகல் மற்றும் இரவில் தங்குவதற்கு ரூ.600 - ரூ.1000 வரையிலும், கோடைகாலத்தில் மூன்று நாட்களுக்கு ரூ.2,500 - ரூ.4,000 வரையிலும், அதுவே விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதென்றால் ஏழு நாட்களுக்கு ரூ.10,000 வரையிலும் கட்டணமாக வசூலிக்கலாம்.
- பொதுமக்களிடம் வேளாண் சுற்றுலாவின் பலன்களை விளக்குவதன் மூலம் அவர்களின் வருகையை அதிகரிக்கச் செய்ய முடியும். அந்த வகையில், வேளாண் சுற்றுலா மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். சொல்லப்போனால், விவசாயத்தில் ஈடுபட்டால் நஷ்டம்தான் என்ற சூழலை மாற்றி அமைக்க நமக்கு வேளாண் சுற்றுலா உதவும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 04 – 2024)