TNPSC Thervupettagam

எப்போதும் இரண்டாமவர்!

July 10 , 2020 1651 days 784 0
  • திராவிட இயக்க வரலாற்றில் மிகுந்த சுவாரஸ்யமான வரலாற்றுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன்.

  • திமுகவில் நாவலருக்கு இணையாக வேகமாக வளர்ந்த தலைவர் யாரும் கிடையாது. பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்தபோது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு 24 வயது.

  • 1949-ல் திமுக உதயமானபோது, 29 வயதேயான நெடுஞ்செழியன் அந்தக் கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.

  • அண்ணாவால் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட அவர் ஆறே ஆண்டுகளில், மிக இளம் வயதில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.

  • ஆம், 1956 மே மாதத்தில் திருச்சி மாநில மாநாட்டில், “தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லாம் அடங்கி நடப்போம். தலைமையேற்க வா!” என்று அண்ணாவால் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்டபோது அவருடைய வயது 35.

  • மீண்டும் அண்ணா அதே பதவியில் அமரும் வரை நான்காண்டு காலம் தலைமைப் பொறுப்பில் இருந்தார் நெடுஞ்செழியன்.

  • திராவிட இயக்கத்தின் தாயான நீதிக்கட்சியில் பற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் பிறந்த ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரம்.

  • பெற்றோரால் சூட்டப்பட்ட பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றும் திராவிட இயக்கம் முன்னெடுத்த பெயர் அரசியலும் ‘நெடுஞ்செழியன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள வழிவகுத்தது.

  • சீனுவாசன் என்ற இவரது தம்பி இப்படியே ‘இரா.செழியன்’ ஆகி தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.

அண்ணாவைப் போல தம்பிகள்

  • அண்ணா எப்படியோ தம்பிகளும் அப்படியே என்று நகர்ந்த காலகட்டம் அது. அண்ணாவைப் போலவே ‘எம்..’ படித்தவர்களில் நெடுஞ்செழியனும் ஒருவர்.

  • இலக்கணம், இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பரந்த வாசிப்புகொண்ட நெடுஞ்செழியன், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் போன்றவற்றையும் கரைத்துக் குடித்திருந்தார்.

  • பிரசங்கம் செய்வதற்காக அல்ல; வைதீகத்துக்கு எதிரான வாதங்களுக்கான சான்றுகளை உருவி அடிப்பதற்குத்தான்.

  • திருப்பூரில் திராவிடர் கழகக் கூட்டத்துக்குப் பிறகுதான் நெடுஞ்செழியனின் பேச்சு எல்லோர்க்குமானது.

  • கூட்டம் ஆர்ப்பரிக்கும் பேச்சுக்குச் சொந்தக்காரர் என்றாலும், பேச்சைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்; பல வார்த்தைகள் சாமானியர்க்குப் புரியாது. “நெடுஞ்செழியன்... நாலரைக் கட்டைத் தமிழ் குறையணும். பாமரருக்கும் புரியும் தமிழ்ல பேசணும். நீ பேசுறது பண்டிதர்களுக்குத்தான் புரியும்” என்றார் பெரியார்.

  • பண்டிதர்களுக்கான சரக்கை சாமானியர்க்கான மொழியில் பேசலானார் நெடுஞ்செழியன்.

  • திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும் அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம்.

  • ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலரே. திமுகவுக்கு முதல் மேயர் கருணாநிதியின் உழைப்பால் கிடைத்திருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலரே.

  • ஆனால், தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடைய செயல்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அண்ணா எண்ணியதன் விளைவே நாவலருக்கு வந்த பதவி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  • மக்கள் மனதில் அண்ணாவே நீக்கமற நிறைந்திருந்தார். அதே சமயம், கட்சியில் எல்லோரும் செயல்படுவதற்கான இடமும் இருந்தது.

நேருவுக்குக் கறுப்புக் கொடி

  • நெடுஞ்செழியன் ஒன்றும் பெயருக்குப் பொறுப்பில் இருப்பவராக இல்லை. கழகத்தின் சட்டதிட்டத்துக்குப் புறம்பாக நடந்த தாராபுரம் கிளைக் கழகத்தையே கலைத்தார்.

  • சென்னை மற்றும் நெல்லை மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலக்கி வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய ஒன்றியத்தின் ஒப்பில்லா பிரதமர் நேரு சென்னை வந்தபோது, அவருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக் கொடி காட்டியதும் அவரது தலைமையில்தான்.

  • திமுகவின் முதல் வரிசைத் தலைவர்களிடையே அவருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ஆனால், தொண்டர்களிடமும் மக்களிடமும் அவர் எப்போதும் இரண்டாமவராகவே பார்க்கப்பட்டார்.

  • அண்ணா மறைந்தார். ஆற்றல்மிகு கருணாநிதி முதல்வரானார். கட்சித் தலைமை நெடுஞ்செழியனிடம் இருந்தது.

  • ஏற்கெனவே நெடுஞ்செழியனின் முதல்வர் கனவைக் கலைத்த எம்ஜிஆர், “கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே தலைமையே வேண்டும்; கட்சித் தலைமை ஒருவரிடமும், ஆட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சீர்குலைந்தது.

  • அந்த நிலை திமுகவுக்கு வரக் கூடாது என்பதால்தான் இதைக் கூறுகிறேன்” என்று சொல்லி, நண்பர் கருணாநிதியைக் கட்சித் தலைமை நோக்கி நகர்த்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்துக்குத் தள்ளினார்.

  • திமுகவில் தலைவர் என்ற பதவி இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அதாவது, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவே நீடித்தார்; ஆனால், அவருக்கு மேல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது; அதில் கருணாநிதி அமர்ந்தார். ஆக, அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர், கருணாநிதிக்கு அடுத்த நிலைக்குப் போனார்.
    சீக்கிரமே மனம் கசந்தார். மதிமுக - மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் – கட்சியைத் தொடங்கினார்.

  • திமுகவில் இருந்தபோது, எம்ஜிஆர் நீக்கத்துக்கு வலுவாகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நெடுஞ்செழியன். நகைமுரணாக, எம்ஜிஆரின் அதிமுகவிலேயே பின்னர் தன்னை இணைத்துக்கொண்டார்.

  • இப்போது எம்ஜிஆருக்கு அடுத்த நிலையில் அமர்ந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த இடத்தில் அமர நெடுஞ்செழியனின் இடம் அப்படியே நீடித்தது; ஆம், அவர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் அமர்ந்தார்.

தமிழும் கண்ணியமும்

  • வரலாற்றில் ‘இரண்டாமவர்’ என்பது முக்கியத்துவம் பெறாத இடம் என்றாலும், முக்கியமான இடம். ‘முதலாமவர்’ எல்லாமுமாகத் திகழ ‘இரண்டாமவர்’ உறுதுணையாக இருக்க வேண்டும்.

  • விசுவாசம் முக்கியம். ‘முதலாமவர்’ வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைத்திடக் கூடாது; அதே சமயம், அவருக்கான மனசாட்சியாகவும், அமைப்பையும் அவரையும் இணைக்கும் பாலமாகவும் அவர் இருக்க வேண்டும்.

  • தன்னுடைய பணியைப் பெருமளவில் திறம்படச்செய்தார் நெடுஞ்செழியன். தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவோ வலிகளைச் சுமந்தாலும், திராவிட இயக்கத்தின் மீதான பற்று அவரை உறுதிபடக் கோத்திருந்தது. தமிழ் உயிர்ப்பான உந்துவிசையாக இருந்தது.

  • அதனால்தான், அதிமுகவில் இருந்து மறைந்தாலும் தன் அஞ்சலிக் குறிப்பில் திமுக தலைவர் கருணாநிதி இப்படி எழுதினார்: “நாவெல்லாம் தமிழ் மணக்க/ செவியெல்லாம் தமிழ் மணக்க/ சிந்தையெல்லாம் தமிழ் மணக்க/ அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்/ தன்மான இயக்கத்தின் தூண்/ சாய்ந்துவிட்டதே என/ தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்/ அவர் புகழ் வாழ்க!/ அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க!”

  • இன்று திமுக, தன்னுடைய இரண்டாவது பொதுச்செயலாளருக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறது. அடுத்தது, அதிமுகவும் தனது முன்னோடிக்கு விழா எடுக்கும் என்று நம்பலாம்.

  • அரசியல் களத்தில் எதிரிகளாக நிற்கும் இரு கட்சிகளும் புகழஞ்சலி செலுத்தும் வாழ்க்கை முன்னோடிகளைத் தாண்டிய எல்லோருக்கும் வாய்க்கவில்லை. நெடுஞ்செழியனுக்கு வாய்க்கக் காரணம், அவருடைய தமிழும் கண்ணியமும்!

 

நன்றி: தி இந்து (10-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்