TNPSC Thervupettagam

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் எழுத்து தரும் விழிப்புணர்வு

November 8 , 2024 66 days 102 0

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் எழுத்து தரும் விழிப்புணர்வு

  • பொருளாதாரம், சமூகவியல், அரசியல், பண்பாட்டியல் முதலான பல்துறைகளில் புலமை பெற்று, சர்வதேசக் கல்விப் புலத்தில் தமிழ்நாட்டு அரசியல் பண்பாடு குறித்துக் கவனம் ஈர்க்கக்கூடிய ஆய்வுகளையும் உரையாடல்களையும் ஆங்கிலத்தில் எழுதிவந்தவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழ்நாட்டு அரசியல் பண்பாடு குறித்து நடைபெற்ற ஆய்வுகளிலும் உரையாடல்களிலும் அயல் புலமையாளர்களின் குரல்களே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், தமிழ்நாட்டின் குரலாக எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஒலித்தார். அவரின் இந்த இடத்தை இன்றுவரை யாரும் நிரப்ப முடியவில்லை.

திராவிட இயக்க ஆதரவு ஆய்வாளரா?

  • திராவிட இயக்க ஆதரவு ஆய்வாளர் என்கிற பிம்பம் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மீது உண்டு. அவர் திராவிட இயக்கத்தைப் பரிவோடு, அதன் இருப்பின் நியாயப்பாட்டை எடுத்து விளக்கினார் என்பது உண்மைதான். ஆயினும் பல நேரம் திராவிட அடையாள அரசியல் ‘விடுதலை நோக்கு’ பண்பை இழந்து, வழக்கமான நிலைபெற்ற அதிகார அடையாள அரசியலாக உருமாறிவரும் போக்கு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
  • அவர் மறைவதற்கு ஓராண்டுக்கு முன்னர், சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையும் ‘காட்சிப்பிழை’ இதழும் இணைந்து ‘தமிழ் சினிமா 100’ கருத்தரங்கை இரண்டு நாள்கள் நடத்தின. இக்கருத்தரங்கில்தான் முதன்முதலில் எம்.எஸ்.எஸ்.பாண்டியனை நேரில் பார்த்தேன்.
  • அவருடைய ஆய்வுரையைக் கேட்டேன். அவருடைய ஆய்வுப் புலமை பிரமிப்பையும் புத்துணர்வையும் ஊட்டுவது. அந்த ஆய்வுரை தேச ஒற்றுமை குறித்த மத்திய அரசாங்க ஆவணம் ஒன்றை ஆர்வமூட்டும் வகையில் குறுக்கு விசாரணை செய்து, ‘தமிழ்ப் பண்புக் கூறுகள் கொண்ட சினிமா’வின் இருப்பையும் செயல்பாட்டையும் எடுத்து விளக்கியது.

தவிர்க்க இயலாத நூல்கள்:

  • எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஏராளமாக எழுதிக் குவித்தவர் என்று சொல்ல முடியாது. உண்மையில், குறைவாக எழுத விரும்பியவர் போலத் தோன்றுகிறது. தன்னுடைய ஆய்வுநோக்கையும் ஆய்வுச் சட்டகங்களையும் முடிவுகளையும் அவற்றை விவரிக்கும் எழுத்துகளையும் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டே இருந்தார். இதனால் கணிசமான கட்டுரைகளை எழுதியிருந்தபோதிலும், அதிகமான நூல்களை வெளியிடவில்லை.
  • அவர் உயிருடன் இருந்தபோது மூன்று நூல்களும், மறைந்த பிறகு ஒரு நூலும் வெளியாகி உள்ளன. ‘The Image Trap: M G Ramachandran in Films and Politics’ (1992), ‘Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present’ (2007), ‘The Strangeness of Tamil Nadu: Contemporary History and Political Culture in South India (2020)’ ஆகிய மூன்று நூல்களும் சமகாலத் தமிழ்நாட்டு அரசியல் பண்பாட்டை விளங்கிக்கொள்வதற்குத் தவிர்க்க இயலாத நூல்கள்.

அடையாளங்களும் அரசியல் மொழிகளும்:

  • சமகாலத் தமிழ்நாட்டு வெகுமக்கள் அரசியலில் நிலவும் அடையாளங்கள் பற்றியும் அவை எவ்வாறு அரசியல் மொழியையும் அரசியல் இசைவையும் உற்பத்தி செய்து, அதிகாரத்தை நிறுவுகின்றன என்பதையும் அவருடைய ஆய்வுகள் சிறப்பாக வரைந்து காட்டுகின்றன. தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றுடன் மற்றொன்று மோதிக்கொள்ளும் ஆரியர், திராவிடர், ஆதி திராவிடர் ஆகிய அடையாள உருவாக்கங்களையும், அவற்றை உருவாக்கிய சமூக-அரசியல் குழுமங்களின் மோதல்களையும் அவர் விளக்கியுள்ளார்.
  • இந்த அரசியல் அடையாளங்கள் ஆதி காலத்திலிருந்து தொடர்ந்து இருப்பவை என்று கருதும் போக்கு நம்மிடையே வலுவாக உள்ளது. ஆனால், இந்த அரசியல் அடையாளங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தென்னகத்தில் / தமிழ்நாட்டில் சமூகக் குழுமங்களிடையே அரசியல் தளங்களிலும் அறிவுத் தளங்களிலும் நடந்த மோதல்களில் தோன்றி, உள்ளடக்கம் பெற்று, நிலவிவருகின்ற உணர்வுகள் மட்டுமே. இதனை மிக ஆழமாகவும், எவ்வித மலினப்படுத்தல்களும் இன்றி உணர்த்துகிறார்.
  • காலனிய காலத்தில் நிலவிய பிராமணக் குழும ஆதிக்க நிலையை எதிர்த்துதான், ‘திராவிடம்’ என்கிற அடையாளத்தின் வாயிலாக புதிய எதிர்ப்பு அரசியல் விமர்சன மொழியைப் பிராமணரல்லாதார் கட்டமைத்தனர். இந்த அரசியல் மொழியின் மூலம் உருவாக்கிய பேச்சுகள் மூலம் பொதுவெளியை மறு உருவாக்கம் செய்தனர். இதன் மூலம் பிராமண அரசியல் மொழியை அதிகாரம் இழக்கவைத்தனர்.
  • இப்போது அதிகாரம் பெற்றுள்ள பிராமணரல்லாதார் சமூகக் குழுமத்தின் ‘திராவிட’ அரசியல் மொழியை, தலித்களின் எதிர்ப்பு அரசியல் மொழி விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. வழக்கமாக நிலைபெற்ற அதிகாரத்தில் உள்ள அரசியல் மொழி, அதிகாரமற்றவர்களின் அரசியல் மொழியை எவ்வாறு கையாளுமோ, அதுபோன்றே திராவிட அரசியல் மொழிவழி சிந்திப்போர் தலித்களின் விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை விமர்சனபூர்வமாக எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் இன்றைக்கு தலித் ஆதரவை வலுவாக வெளிப்படுத்தும் திராவிட இயக்க அரசியல் சிந்தனைப் போக்குகள் உரம்பெற அவர் பங்களிப்பு செய்துள்ளார்.
  • இந்த அடையாள அரசியல் போக்கில் பிராமண அதிகாரத்துக்கு எதிராகப் பிராமணரல்லாதவர்கள் திராவிட அடையாளத்தையும் அரசியல் மொழியையும் உருப்படுத்திய அதே காலக்கட்டத்தில், அதே அதிகாரத்துக்கு எதிராக பூர்வ பௌத்தர், ஆதி திராவிடர் ஆகிய அடையாளங்களையும் அரசியல் மொழியையும் தலித்கள் உருப்படுத்தினர்.
  • தலித் அடையாளங்களும் அரசியல் மொழியும் ஏன் பொதுவானதாக ஆக முடியவில்லை, அதிகாரம் பெற இயலவில்லை என்கிற கேள்வி எஞ்சி நிற்கின்றது. இக்கேள்விக்கு அயோத்திதாசர், கமலநாதன் ஆகியோரின் அடையாள அரசியல் மொழியில் விலக்கும் பண்பும் பொற்காலக் கற்பிதங்களும் உள்ளன என்பதைப் பதிலாக முன்வைக்கின்றார். ஆயினும் ராஜ் கௌதமன் எழுத்துகளின் வழியாக தலித் அடையாள அரசியல் மொழியில் உள்ள உயிரோட்டமான விடுதலை உணர்வையும், காத்திரமான விமர்சனப் பண்பையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அடையாளங்களின் எதிர்காலம்:

  • இந்த அரசியல் அடையாளங்களின் எதிர்காலம் என்ன? சுயமரியாதை உணர்வு ஊட்டிய அரசியல் அடையாளங்கள்கூட ஒருநிலையில் சுயமரியாதையை இழக்கவைத்து அடிமைப்படுத்தும் வகையினங்களாக மாறிவிடும் தன்மையைக் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எடுத்துக்காட்டி வந்துள்ளார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுதான் எம்.ஜி.ஆர் குறித்த அவருடைய ஆய்வு. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருபெரும் பிம்பங்கள் திராவிட அடையாள அரசியலின் வழியாகவே சுயமரியாதை உணர்வை மிகவும் கேலிக்குரியதாக ஆக்கியதாக அவரது ஆய்வு சுட்டுகிறது.
  • காட்டாற்று வெள்ளம்போலச் சமகால அரசியல் உரையாடல்களில் தன்னிலை இழந்த அடையாளங்களாக நாம் அடித்துச் செல்லப்படுகின்றோம். அடையாளங்கள் குறித்த வியப்பும் இகழ்ச்சியும் நம் ஒவ்வொருவரையும் துன்புறுத்துகின்றன. ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ (புறநானூறு, 192) என்கிற கணியன் பூங்குன்றனாரின் ‘திறவோர் காட்சி’யை, சமகாலத் தமிழ்நாட்டு அரசியல் குறித்த எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் எழுத்துகள் வழங்குகின்றன.
  • 10.11.2024 - எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் 10ஆம் ஆண்டு நினைவுநாள்

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்