- இந்தியாவைப் பொறுத்தவரை இதழியல் துறை அரும்பாகி மொட்டுவிடத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு இதழாளர் என்பவர் செய்தி சேகரிப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் மட்டுமே இருந்ததில்லை.
- பெரும்பாலும், அவர் ஒரு எழுத்தாளராகவோ அல்லது அரசியல் செயல்பாட்டாளராகவோ அல்லது இரண்டுமாகவோ இருப்பார்.
- அந்த நீண்ட நெடிய மரபின் தொடர்ச்சியாக விளங்கியவர் மலையாளத்தின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான ‘மாத்ருபூமி’ நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எம்.பி.வீரேந்திரகுமார்.
- அரசியலராக, சமூகச் செயல்பாட்டாளராக, எழுத்தாளராக, தேர்ந்த நிர்வாகியாகத் தனது வாழ்க்கைப் பயணத்தில் அழுத்தமாக வெற்றிச் சுவடுகளைப் பதித்தவர். ஒரு இதழாளராகக் கருத்துச் சுதந்திரத்திலும் விழுமியங்களிலும் சமரசம் செய்துகொள்ளாதவர்.
- கேரளத்தின் பிரபலமான சமணக் குடும்பத்தில் பிறந்த வீரேந்திரகுமார், சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
- ஜெயப்ரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா ஆகியோரால் ஈர்க்கப்பட்டு 15 வயதில் அரசியலில் நுழைந்தார். அவருடைய தந்தை பத்ம பிரபா கவுடர் சோஷலிஸ்ட் கட்சித் தலைவராகவும் கேரள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்ததும் அவரது அரசியல் நுழைவுக்குக் கூடுதல் வாய்ப்பானது.
- நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்துக் கைதானவர். கேரள சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் வனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே அதிலிருந்து விலகிவிட்டார்.
- கோழிக்கோட்டிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
- முதல் முறை நிதித் துறை இணையமைச்சராகவும், இரண்டாவது முறை தொழிலாளர் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
- முதிர்ச்சிக் காலத்துக்காகக் காத்திருக்காமல் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை உடனடியாகப் பெறுவதற்குக் காரணம் அவருடைய முயற்சிகளே.
- கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆண்டுவந்த கேரளத்தில், கடைசி வரைக்கும் சோஷலிஸ்ட் கட்சிக்காரராகவே அவரது அரசியல் பயணம் இருந்தது. தன்னுடைய கடைசி நாட்களில் லோக்தந்திரிக் ஜனதா தளத்தின் கேரளத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
சூழலியர்
- வீரேந்திரகுமார் எழுதிய 15 மலையாள நூல்களுமே பல்வகைப்பட்டவை. பாபர் மசூதி இடிப்பு, உலக வர்த்தக நிறுவனத்துக்கான காட் ஒப்பந்தம், இந்தியாவின் அணு ஆயுதச் சோதனை ஆகியவற்றைக் கண்டித்து அவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகள் கண்டிருக்கின்றன.
- ஆளுமைகள் பற்றிய அவரது நினைவுக் குறிப்புகளும் பயண நூல்களும் குறிப்பிடத்தக்கவை. ‘ஹைமவதபூவில்’ என்ற தலைப்பிலான பயண நூல், தமிழில் ‘வெள்ளிப் பனிமலையின் மீது’ என்ற தலைப்பில் சிற்பி பாலசுப்பிரமணியத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
- ஏறக்குறைய ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூல், மலையாளத்தில் 20 பதிப்புகளைக் கண்டது. இந்தியிலும் ஆங்கிலத்திலும்கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
- இமய மலைத் தொடரிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுவந்த அனுபவமே இந்தப் பெரும் நூல். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புதான் அவரது பயண நூல்களின் முக்கிய நோக்கம்.
- அமேஸான் காடுகள், தன்யூப் நதிக்கரை சென்றுவந்த அனுபவங்களும் அப்படியே. உலக வரைபடத்தில் அவர் செல்லாத நாடுகள் மிகச் சிலவே.
- தனது பல்துறைப் பங்களிப்புக்காக 100-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். பத்திரிகைத் துறை தொடர்பாகத் தேசிய, உலக அளவிலான அமைப்புகள் பலவற்றிலும் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
- 1977-ல் வீரேந்திரகுமார் ‘மாத்ருபூமி’ நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, தொழிலாளர் பிரச்சினைகளால் அந்தப் பத்திரிகை தடுமாறிக்கொண்டிருந்தது.
- இரண்டு பதிப்புகள்தான் அப்போது வெளிவந்துகொண்டிருந்தன. இப்போது அதன் பதிப்புகள் 15. ‘மாத்ருபூமி’ வார இதழ், ‘கிருகலட்சுமி’ பெண்கள் இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. இப்போது பத்துக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவருகின்றன. பதிப்பகம், தொலைக்காட்சி, பண்பலை, இணையம் என்று அதன் எல்லை விரிந்தபடியே இருக்கிறது.
பத்திரிகைகளின் எதிர்காலம்
- அச்சு ஊடகங்களின் எதிர்காலம் குறித்து ஆரூடங்கள் கணிக்கப்படுகிற இந்த காலத்திலும் கடந்த ஆண்டில் தனது விற்பனையை ஆச்சரியப்படும் வகையில் அதிகரிக்கச்செய்து கேரளத்தில் அதிகம் விற்பனையாகும் நாளேடுகளில் முன்னணியில் இருந்தது ‘மாத்ருபூமி’.
- அக்குழுமத்தின் ‘தொழில்வார்த்தா’ பத்திரிகைதான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் தொழில் வர்த்தகத் துறைக்கான இதழ்.
- மாத்ருபூமியின் மருத்துவ இதழான ‘ஆரோக்யமாசிகா’வும் தேசிய அளவில் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது.
- இவற்றின் எண்ணிக்கையும்கூட கடந்த ஆண்டில் அதிகரித்திருக்கிறது. மலையாளப் பத்திரிகையான ‘மாத்ருபூமி’யின் வெற்றி வெறும் வணிக வெற்றி மட்டுமல்ல; கேரளச் சமூகத்தின் அறிவார்ந்த செயல்பாடுகளோடும் கலாச்சார முன்னேற்றத்துடனும் நெருங்கிப் பிணைந்தது!
- ஒரு எழுத்தாளர் அலுவலக எழுத்தராக இருப்பதே உத்தமம், பத்திரிகையாளராவது அவரது இலக்கியப் பயணத்துக்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்று தமிழ்ச்சூழலில் தொடர்ந்து ஒரு அறிவுரை வழங்கப்பட்டுவருகிறது. மலையாளச் சூழலில் இது போன்ற ஒரு அறிவுரை அபத்தமாகவே கணக்கில் கொள்ளப்படும்.
- மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான எம்.டிவாசுதேவன் நாயர், தன்னுடைய மிக முக்கியமான படைப்புகளை ‘மாத்ருபூமி’ வார இதழ் ஆசிரியராக இருந்தபோதுதான் எழுதினார்.
- பத்திரிகையாளராக பணியாற்றிக்கொண்டே திரைக்கதைகளை எழுதவும், திரைப்படங்களை இயக்கவும்கூட அவர் அனுமதிக்கப்பட்டார். ‘மாத்ருபூமி’ நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதுதான், எம்.டி.வி.யின் இலக்கியப் பயணத்துக்கான தொடக்கமாக அமைந்தது.
- அதனால்தான் வீரேந்திரகுமாரின் மரணத்தைத் தனது தனிப்பட்ட இழப்பு என்று எம்.டி.வாசுதேவன் கூறுகிறார்.
- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, சச்சிதானந்தன் ஆகியோரின் இரங்கல் குறிப்புகளிலும் சக எழுத்தாளனை இழந்துவிட்ட துயரமே மேலோங்கி நிற்கிறது.
- மலையாளத்தின் சமகால எழுத்தாளர்கள் பலரும் ‘மாத்ருபூமி’யின் சித்திரைச் சிறப்பிதழ்களால் கவனம் பெற்றவர்களே. 15 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட சிறுகதைப் போட்டியை கரோனா நேரத்தில் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியிருக்கிறது ‘மாத்ருபூமி’.
கரோனாவும் மாத்ருபூமியும்
- நெருக்கடியான இந்தக் கரோனா காலகட்டத்தில் வீரேந்திரகுமார் தலைமையிலான ‘மாத்ருபூமி’யின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று.
- வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்குத் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது அவர்களுக்குத் தங்களது இதழ்களும் புத்தகங்களும் கொண்ட அன்பளிப்பை அளித்தது ‘மாத்ருபூமி’.
- ஊரடங்கு நிலையிலும், வாசகர்கள் கேட்டுக்கொண்ட புத்தகங்களை அவர்களின் வீடுகளுக்கே கொண்டுபோய்ச் சேர்த்துவருகிறது ‘மாத்ருபூமி புக்ஸ்’.
- நாடு முழுவதும் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கின்போதே கேரள அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் கே.எம்.ஆப்ரஹாம் தலைமையில் 17 பேர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்து அறிக்கை பெற்றது.
- கண்மூடித்தனமான ஊரடங்கு பொருளாதாரச் சிக்கலில் கொண்டுபோய்ச் சேர்க்கும், நோய்ப்பரவல் இல்லாத இடங்களில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும் என்று அந்தக் குழு அறிக்கை அளித்தது.
- கேரள அரசுக்கு அந்த நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகளைத்தான் இன்று நாடு முழுவதும் சற்று காலதாமதமாகப் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன.
- அந்த நிபுணர் குழுவில் ‘மாத்ருபூமி’யின் மற்றொரு பங்குதாரரும் வீரேந்திரகுமாரின் மகனும் கல்பேட்டா தொகுதி எம்எல்ஏவுமான ஷ்ரேயம்ஸ்குமாரும் ஒருவர்.
- பத்திரிகைகளின் பணி செய்தி சொல்வது மட்டுமல்ல, நெருக்கடியான நேரங்களில் மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் வழிகாட்டுவதும்தான்.
- மாரடைப்பால் மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்வர் காணொலி வாயிலாக நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டார் வீரேந்திரகுமார். ‘செவியறிவுறுத்தும்’ இதழியல் மரபுக்கு அவரது வாழ்வும் பணிகளும் ஒரு முன்னுதாரணம்.
நன்றி: தி இந்து (01-06-2020)