- சராசரி அறிவுள்ள மனிதர்கள் என்ன செய்வதென்றே புரியாமல் உணர்ச்சியற்றவர்களைப் போல நடந்துகொண்டால், அப்படிப்பட்ட செயலுக்குப் பின்னால் ஏதோ ‘உள்நோக்கம்’ இருக்கிறது என்றே கருதுவேன்; மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது ஒன்றிய அரசு நடந்துகொள்ளும் விதம் அப்படித்தான் தெரிகிறது.
- பாரதிய ஜனதா அரசுதான் ஒன்றியத்திலும் இம்பாலைத் தலைநகரமாகக் கொண்ட மணிப்பூர் மாநிலத்திலும் ஆட்சி செய்கிறது. என்ன நடக்கிறது என்று கட்சித் தலைமைக்குத் தெரிவிக்க தகவல் தொடர்புகள் வலுவாக இருக்கின்றன. ஒன்றிய அரசுக்குத் தகவல் தெரிவிக்க ஆளுநர், மாநில அரசு, உளவுத் துறை, மக்கள் அமைப்புகள், ஊடகங்கள் என்று பல வழிகள் இருக்கின்றன.
இன அழிப்பா?
- மணிப்பூரில் இப்போது நடப்பது, இதற்கும் முன்னால் எப்போதாவது நடந்ததைப் போன்ற கை கலப்புகளோ – தீயிடல்களோ அல்ல; ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் கொலைச் செயல்களும் அல்ல, பாலியல் வல்லுறவுகளும் அல்ல; ஆதாயத்துக்காக நடத்தப்படும் சூறையாடல்களும் கொள்ளைகளும் அல்ல; இது என்ன என்பதைக் கூற வார்த்தைகளை மென்று விழுங்க வேண்டிய அவசியமே இல்லை – இது ‘இன அழிப்பின் தொடக்கம்’.
- இந்தியாவின் நிம்மதியைக் குலைப்பதற்காக, ‘இன அழிப்பு’ என்ற செயல் அரங்கேறத் தொடங்கி விட்டது. பெரும்பான்மைச் சமூகம் தனக்கு வேண்டாம் என்று கருதும் சமூகத்தை - அச்சுறுத்தி மிரட்டியோ, அடித்து விரட்டியோ, கொன்று குவித்தோ - வெளியேற வைக்கும் முயற்சிதான் ‘இன அழிப்பு’; இப்படிச் செய்து தாங்கள் வாழும் பகுதி முழுவதிலும் தங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே குடியமர்த்தச் செய்வதுதான் இதன் நோக்கம்.
- உலக வரலாற்றில் இதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது உலகப் போரின் போது ஆர்மீனியர்கள் இப்படித்தான் விரட்டப்பட்டனர், இரண்டாவது உலகப் போரின் போது ஐரோப்பிய யூதர்கள் இப்படித்தான் ஜெர்மானியர்களின் நாஜி வதை முகாம்களில் அடைக்கப் பட்டு விஷ வாயுக்கள் செலுத்தப்பட்டு கும்பல் கும்பலாகக் கொல்லப் பட்டனர், ஆப்பிரிக்க நாடுகளிலும் பழங்குடிகள் தங்களுக்கு வேண்டாத இனத்தவரை இப்படித்தான் குறிவைத்துக் கொன்று அழித்து வெளியேற்றினர்.
- மணிப்பூர் மாநிலத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் மூன்று பெரிய பழங்குடி இனங்கள் வசிக்கும் பகுதியாக அங்கீகரித்துள்ளது. அதன் எல்லைகள் வரையறுக்கப்பட்டவை. இதற்கு முன்னால் எழுதிய என்னுடைய கட்டுரைகளிலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மெய்தி சமூகத்தவர் பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர், சட்டப்பேரவையில் அவர்கள் பகுதிக்கு 40 பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன; குகி - சோம் இனத்தவர் நான்கு மாவட்டங்களில் வாழ்கின்றனர், அவர்களுக்கு 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. நாகர்கள் நான்கு மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர், அவர்களுக்கு 10 பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவரை, அவருடைய சமூகத்துடன் மட்டுமே அடையாளப் படுத்துவதே இங்கு மரபு. மெய்திகள்தான் மாநிலத்தை ஆளுகின்றனர்.
- நான் படித்தவற்றிலிருந்தும் எனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்தும் தெரிந்தபடி, மணிப்பூர் மாநில பள்ளத்தாக்கில் இப்போது ஒரு குகி - சோம் இனத்தவரும் கிடையாது, குகி - சோம் இனத்தவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், ஒரு மெய்தியும் கிடையாது. இதில் அரசு ஊழியர்களும் அடங்குவர். மணிப்பூருக்குச் சென்று வந்த பாபு வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் - மலைப் பகுதியில் மெய்தி கிடையாது, பள்ளத்தாக்கில் குகி கிடையாது, திட்டவட்டமான, இனம் சார்ந்த புவியியல் பகுதியாக மணிப்பூர் பிளவுபட்டு விட்டது - என்று கூறியிருக்கிறார்.
- வன்செயல்கள் காரணமாக இரு சமூகத்தவர்களும் அவரவர் சமூகம் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதிக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவிட்டனர். முதல்வரும் அமைச்சர்களும் தங்களுடைய இல்லங்களில்கூட தங்க முடியாமல் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று அங்கிருந்துதான் நிர்வாகத்தைத் தொடருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் நிலையில் எந்த அமைச்சரும் இப்போது இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகளின் அதிகாரமெல்லாம் அவர்கள் இப்போது இருக்கும் பகுதியைத் தாண்டி செல்லுபடியாகவில்லை.
- மணிப்பூர் மாநில காவல் துறையை இரு சமூகத்தவருமே இப்போது நம்பவில்லை. ராணுவத்தை அரசு, செயல்பட விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இவற்றின் விளைவாக மே 3க்குப் பிறகு கொலையும் தீயிடல்களும் சூறையாடல்களும் பாலியல் வல்லுறவுகளும் தொடர்கின்றன. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தரும் தகவல்களை யாரும் நம்புவதில்லை. பெண்கள்தான் இந்த மோதல்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை அச்சுறுத்தவும் அவமானப்படுத்தவும் பாலியல் வன்முறைகளும் கூட்டுப் பாலியல் வல்லுறவுகளும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், கார்கில் போரில் நாட்டுக்காகப் போரிட்ட ராணுவ அதிகாரியின் மனைவி.
- இனரீதியாக மக்களைப் பிரித்து வெளியேற்றும் செயல் தொடங்கிவிட்டால் அது அப்படியே நின்றுவிடாது, பிற பகுதிகளிலும் தொடரும். ‘மிசோரம் மாநிலத்தில் வாழும் மெய்திகள் உயிரோடு இருக்க விரும்பினால் வெளியேறிவிட வேண்டும்’ என்று அங்குள்ள ஓர் அமைப்பு மிரட்டல் விடுத்திருக்கிறது. அதையடுத்து அரசு பாதுகாப்பு தருவதாக உறுதி கூறியும் 600க்கும் மேற்பட்ட மெய்திகள் மிசோரத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.
அறியாமையா, செயலற்றத்தன்மையா?
- பொது இடத்தில் பலரும் பார்த்திருக்க இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மே 4 சம்பவம், மணிப்பூரின் இன்றைய நிலை என்ன என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. பெரிய கும்பல் தங்களை இழுத்துச் சென்றபோது அருகிலிருந்து காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர் என்று அந்தப் பெண்களில் ஒருவர் கூறியிருக்கிறார். மே 18ஆம் நாள்தான் அவர்களால் காவல் துறையிடம் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய முடிந்தது. இன்னொரு அறிக்கை ஜூன் 21இல் பதிவு செய்யப் பட்டது.
- காவல் துறையினரிடம் அளித்த புகாரில் தன்னைத் தாக்கியவர்கள் யாரென்று அடையாளம் தெரியும் என்றும் அவர்களில் ஒருவர் தன்னுடைய சகோதரருக்கு நண்பர் என்றும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். 75 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட காவல் துறை ஆணையர், மாநிலக் காவல் துறைத் தலைவர், தலைமைச் செயலாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ‘அமெரிக்கா வாழ் மணிப்பூர்வாசிகளின் சங்கம்’ அளித்த கடிதத்துக்குப் பிறகே ‘தேசிய மகளிர் ஆணையம்’ அதுபற்றி விசாரிக்குமாறு மாநிலத் தலைமைச் செயலாளருக்கும் காவல் துறைத் தலைவருக்கும் ஜூன் 19இல் தகவல் தெரிவித்தது.
- ஆனால், அதற்குப் பிறகு எதையும் அது செய்யவில்லை. ‘தேசிய மனித உரிமைகள் ஆணையம்’ இந்தச் சம்பவங்கள் குறித்து கண்டுகொள்ளவே இல்லை. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரிவிக்க பல்வேறு தகவல் தொடர்புகள் தனக்கிருந்தும், இரு பெண்கள் தொடர்பான சம்பவமே தனக்குத் தெரியாது என்று மாநில முதல்வர் பிரேன் சிங் கூறியிருக்கிறார். அந்தச் சம்பவம் தொடர்பான காணொலி ஜூலை 19இல் வெளியாகி, பரவிய பிறகே தொடர்புள்ள அனைவரும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தொடங்கினர். அரசமைப்புச் சட்ட சீர்குலைவு இதுவில்லை என்றால், நாம் அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் உள்ள பிரிவு 355, 356 இரண்டையுமே நீக்கிவிடலாம்.
- அசாம் மாநிலத்தின் நெல்லி என்ற இடத்தில் 1983இல் நடந்த படுகொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்திருக்கிறது. இருப்பினும் ஜூலை 20 முதல் ஆளுங்கட்சித் தரப்பும் எதிர்க்கட்சிகளும் மணிப்பூர் நெருக்கடி குறித்து அவையின் எந்த விதிகளின் கீழ் விவாதம் நடத்துவது என்பதில் இணக்கமாகச் செல்ல முடியாமல் இருக்கிறது. மணிப்பூர் நிலவரம் தொடர்பாக அவையில் அறிக்கையோ விளக்கமோ அளிக்கமாட்டார் பிரதமர் என்பதில் அரசுத் தரப்பு உறுதியாக இருக்கிறது.
- இந்த விவகாரத்தில் நிலவும் தேக்க நிலையானது, ‘செயல்படும் தன்மையை இழந்துவிட்டது நாடாளுமன்றம், மக்களுடைய பிரச்சினைகளை விவாதிக்கத்தான் அது இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படமுடியாமல் தோற்றுவிட்டது’ என்ற முடிவுக்கே வர வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது.
புதைந்துவிட்ட நம்பிக்கைகள்
- நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடங்கிவிட்டது, மாநில அரசு தனக்குரிய கடமையைச் செய்யத் தவறிவிட்டது, அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்த ஒன்றிய அரசு விரும்பவில்லை, இன அழிப்பு தொடங்கிவிட்டது, வன்முறை ஓயவில்லை – இதற்கும் மேல் இந்த நாடு எதையெல்லாம் தாங்க வேண்டும்?
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நம்மிடையே நிலவும் பல இன, பல மத, பல கலாச்சார, பல மொழி நாடாக இந்தியாவை நாம் உருவாக்குவோம் என்று நம்முடைய நாட்டை உருவாக்கிய தலைவர்களும் தாய்மார்களும் கொண்டிருந்த நம்பிக்கை இன்றைக்கு மலை போல குவிந்து விட்ட இடிபாடுகளில் சிக்கிப் புதையுண்டுவிட்டது.
நன்றி: அருஞ்சொல் (31 – 07 – 2023)