TNPSC Thervupettagam

எறும்புகள் எப்படித் தகவல் தொடர்பு கொள்கின்றன?

March 1 , 2025 2 days 57 0

எறும்புகள் எப்படித் தகவல் தொடர்பு கொள்கின்றன?

  • எறும்புகள் என்றாலே சுறுசுறுப்பான உயிரினம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆர்க்டிக், அண்டார்டிக்கா தவிர, பூமியின் அனைத்துக் கண்டங்களிலும் வாழும் சிறிய உயிரினம் எறும்பு.
  • எறும்புகள் கூட்டம் கூட்டமாக ஒரு புற்றில் வாழ்கின்றன. அதில் ஒவ்வோர் எறும்புக்கும் ஒவ்வொரு வேலை என்கிற வகைப்பாடு இருக்கும். சில எறும்புகள் உணவு தேடுகின்றன. சில எறும்புகள் புற்றைப் பாதுகாக்கின்றன. மேலும் சில எறும்புகள் பராமரிப்பாளர்களாக இருக்கின்றன. ராணி எறும்பு முட்டைகள் இடுவதில் மட்டுமே கவனம் செலுத்தும். அனைத்துப் பணிகளும் சரிவர நடைபெற அவற்றுக்குள் உள்ள தகவல்தொடர்பு முறை உதவுகிறது.
  • 'பெரோமோன்கள்' என்கிற ரசாயனங்கள் எறும்புகளால் சுரக்கப்படுகின்றன. தகவல்தொடர்புக்கு இந்த ரசாயனங்கள் ஆதாரமாக இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு ஹொல்டோப்ளர் பி. மற்றும் வில்சன் இ.ஒ. ஆகிய விஞ்ஞானிகள், ’எறும்புகளின் தகவல்தொடர்பும் மூலக்கூறு சமிக்ஞைகளும்’ என்கிற தலைப்பில் ஆய்வு நடத்தினர். எறும்புகள் 10 முதல் 20 வெவ்வேறு வகையான பெரோமோன்களைச் சுரப்பதை அவர் கண்டறிந்தனர். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான செய்தி பரிமாற்றத்திற்குப் பயன்படுகின்றன.
  • எறும்புகள் உணவுக்கும் கூட்டுக்கும் இடையே நடக்கும்போது வயிற்றின் கீழ் உள்ள சிறப்புச் சுரப்பிகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகை பெரோமோன்களை வெளியிடுகிறது. இந்த பெரோமோன்கள், சுற்றுச்சூழல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து 30 நிமிடங்கள் முதல் 24 மணிநேரம் வரை நீடிக்கும். இது மற்ற எறும்புகளுக்கு உணவுக்கான பாதையைக் காட்டுகிறது.
  • 2010இல் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் முனைவர் குமார், ’தென்னிந்திய எறும்பு இனங்களின் தகவல்தொடர்பு அமைப்புகள்’ என்கிற தலைப்பில் ஆய்வு நடத்தினார். அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சிஞ்சிருக்கான் அல்லது தையற்கார எறும்பு (Oecophylla smaragdina) 5 வெவ்வேறு வகையான உணவு தேடல் மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
  • எறும்புகள் ஆபத்தை உணரும்போது, அவற்றின் மேல் தாடைக்கு அடியில் உள்ள சிறப்புச் சுரப்பிகளிலிருந்து 'எச்சரிக்கை பெரோமோன்களை' வெளியிடுகின்றன. இந்த பெரோமோன்கள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் புற்று முழுவதும் பரவக்கூடிய திறன்கொண்டவை. இது காற்றில் மிக வேகமாகப் பரவி, மற்ற எறும்புகளை உடனடியாக 'போர் நிலை'க்கு மாற்றுகின்றன. இந்த ரசாயனத்தை முகரும் எறும்புகள் உடனடியாக ஆபத்திலிருந்து வெளியேறுகின்றன. ஒரு சில எறும்புகள் விடும் இந்த எச்சரிக்கை பெரோமோன்கள் ஆயிரக்கணக்கான எறும்புகளை ஒரே நேரத்தில் காப்பாற்றும் திறன் கொண்டவை.
  • ஓர் எறும்பு இறக்கும்போது, அதன் உடலில் ஒரு குறிப்பிட்ட வகை பெரோமோனைச் சுரக்கத் தொடங்குகிறது. இது ’மரண அடையாளம்’ என அழைக்கப்படுகிறது. மற்ற எறும்புகள் இந்த வேதிப்பொருளை முகரும்போது, அவை இறந்த எறும்பை எடுத்துப் புற்றைவிட்டு வெளியே கொண்டு செல்கின்றன. இதன் மூலம் நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. பெரோமோன்களுக்கு அப்பால், எறும்புகள் தொடுதல் மூலமாகவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இந்த முறை மற்றொரு முக்கியமான தகவல்தொடர்பு அமைப்பாகும்.
  • ஒவ்வோர் எறும்புப் புற்றும் தனித்துவமான மணம் அல்லது 'கியூடிகுலர் ஹைட்ரோகார்பன் சுவடு' கொண்டுள்ளது. எறும்புகள் சந்திக்கும்போது அவை தங்கள் கொம்புகளைப் பயன்படுத்தி ஒன்றை மற்றொன்று தொட்டு, இந்த வேதிப் பொருள்களைப் பரிசோதிக்கின்றன. ஒரே புற்றைச் சேர்ந்த எறும்புகள் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டிருக்கும், இது நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது. அதே நேரம் வேறுபட்ட மணம் கொண்ட எறும்புகளை எதிரிகளாகப் பார்க்கும்.
  • எறும்புகள் தங்கள் கொம்புகளைப் பயன்படுத்தி மற்ற எறும்புகளின் உடலில் பல்வேறு கோணங்களில் தட்டுகின்றன. இப்படிக் கொம்புகளால் செய்யும் தொடுதல் மூலம் 10 வெவ்வேறு வகையான தகவல்கள் பரிமாறப்படுவதாகக் கண்டறியப்பட்டது.
  • கொம்புகளால் தட்டும் வேகம், கோணம், அழுத்தம் ஆகியவை வெவ்வேறு செய்திகளைக் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வேகமான தட்டுதல் ’உடனடி உதவி தேவை’ என்பதைக் குறிக்கலாம், அதே நேரம் மென்மையான தட்டுதல் ’எல்லாம் நன்றாக உள்ளது’ என்பதைக் குறிக்கலாம்.
  • எறும்புகள் ஒன்றோடு மற்றொன்று உணவைப் பகிர்ந்துகொள்ளும் முறை ’ட்ரோபாலாக்ஸிஸ்’ எனப்படுகிறது. முதலில் ஓர் எறும்பு மற்றோர் எறும்பின் வாயைத் திறக்கத் தூண்டுகிறது. அதன் பின்னர் இரண்டாவது எறும்பு தனது வயிற்றில் சேமித்து வைத்துள்ள உணவின் ஒரு பகுதியை முதல் எறும்பின் வாயில் கக்குகிறது. உணவை மட்டுமன்றி ட்ரோபாலாக்ஸிஸ் மூலம் எறும்புகள் தங்கள் உடலின் உள்ளே உள்ள பெரோமோன்களையும் பகிர்ந்துகொள்கின்றன.
  • எறும்புகள் அதிர்வுகள் மூலமாகவும் தகவல் தொடர்பு கொள்கின்றன. இந்த முறை குறிப்பாக மண்ணுக்கடியில் வாழும் எறும்பு இனங்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. சில எறும்பு இனங்கள் தங்கள் உடலின் பகுதிகளை ஒன்றுடன் மற்றொன்று உரசி ஒலிகளை உருவாக்குகின்றன. இது ‘ஸ்ட்ரிடுலேஷன்' என அழைக்கப்படுகிறது. எறும்புகள் உருவாக்கும் இந்த ஒலிகள் பெரும்பாலும் 1-2 kHz அதிர்வெண் கொண்டவை. இவை மனிதக் காதுகளால் கேட்க முடியாதவை. ஆனால் மற்ற எறும்புகளால் உணர முடியும்.
  • ஆஸ்திரேலிய வேட்டை எறும்புகள் (Myrmecia pyriformis) போன்ற சில இனங்கள் தங்கள் வயிற்றைத் தரையில் தட்டி அதிர்வுகளை உருவாக்குகின்றன. மண்ணுக்கடியில் வாழும் எறும்புகள் அதிர்வுகளைப் பயன்படுத்தி 3 முதல் 7 மீட்டர் தூரம் வரை தகவல் அனுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அதிர்வுகள் மற்ற எறும்புகளுக்கு ஆபத்து அல்லது இரை இருப்பதைக் குறிக்கின்றன. குறிப்பாகப் பார்வைக் குறைவாக உள்ள எறும்பு இனங்களுக்கு முக்கியமான தகவல்தொடர்பு முறையாக உள்ளது
  • 2023இல் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் எறும்புகள் தனித்தனியாக இருப்பதைக் காட்டிலும் கூட்டமாகச் சேரும் போது சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்