எலிசா வந்த கதை
- முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் என்று அழைக்கப்படும் ‘தி லாஜிக்கல் தியரிஸ்ட்’ ஒரு விஷயத்தை நிரூபித்தது. அதாவது எண்களை மட்டுமல்ல; தர்க்கவியல் கோட்பாடுகளைக்கூட, குறியீட்டுப் பிரதிநிதித்துவ முறையில் அதனால் விளக்க முடிந்தது என்பதுதான். செயற்கை நுண்ணறிவு என்பது வழக்கமான கணினியிலிருந்து வித்தியாசப்படும் இடம் இங்கேதான் தொடங்குகிறது. உள்ளே எல்லாம் பூஜ்ஜியங்களாகவும் ஒன்றுகளாகவும் இருக்கலாம். ஆனால் வெளியே, இப்போது தத்துவவியல்கூட இயந்திரத்துக்கு இரையாகிவிட்டது!
- “இது ஆச்சரியம்தான்!” என்று ஒப்புக்கொண்டேன். “அது மட்டுமல்ல. இந்த சின்ன மென்பொருளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு ஓர் ஆய்வுத் துறையாக உருவாகத் தொடங்கியது. மனித நுண்ணறிவு இருந்தால் தான் செய்ய முடியும் என்று கருதப்படும் ஒரு வேலையை இயந்திரங்களுக்கு நுண்ணறிவை வழங்கி அவற்றின் மூலமாகச் செய்துவிடலாம் என்கிற ஆசை, பேராசை, மெல்ல அறிவுலகில் பரவியது.
- அறுபதுகளில் தொடக்கக் கால ஏஐ மென்பொருள்கள் உருவாயின. ‘புரோகிராமிங்’ மொழிகள் அல்லாமல், மனிதர்கள் பேசும் மொழியிலேயே இயந்திரத்தோடு உரையாட வழிவகுத்த எலிசா என்கிற மென்பொருள் அதில் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு, ‘எக்ஸ்பர்ட் சிஸ்டம்’ வகை மென்பொருள்கள் வந்தன. உதாரணமாக, வேதியியல் சேர்மங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தவற்கு உதவியாக ‘டென்ட்ரல்’ என்கிற ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் எம்.ஐ.டியில் கம்ப்யூட்டர் விஷன் பற்றியெல்லாம்கூட புராஜெக்ட்களைத் தொடங்கிவிட்டார்கள்...” - அடுக்கிக்கொண்டே போனது செய்மெய்.
- “மனிதர்கள் பேசும் மொழியிலேயே இயந்திரத்தோடு உரையாடுவது என்பது பற்றிச் சொன்னாய். அந்த எலிசா பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.
- “1960களின் தொடக்கத்தில் நடந்த ஒரு சுவாரசியமான கதை இது. எம்.ஐ.டியில் ஜோசப் வைசன்பாம் என்பவர் ஒரு புதுமையான முயற்சியில் ஈடுபட்டார். உளவியல் ஆலோசகர்போலப் பேசக்கூடிய ஒரு மென்பொருளை உருவாக்கினார். அதற்கு ‘எலிசா’ என்று பெயரிட்டார்.”
- “அது எப்படி வேலை செய்தது?”
- “முதலில் கொஞ்சம் உளவியல் பற்றிப் பேசுவோம். கார்ல் ராஜர்ஸ் என்றொரு உளவியல் நிபுணர் இருந்தார். அவர் நோயாளிகளிடம் உரையாடுவதன் மூலமே அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் ஓர் உத்தியைக் கடைப்பிடித்தார். அதாவது, ‘நான் சோகமாக இருக்கிறேன்’ என்று உளவியலாளரிடம் நோயாளி சொன்னால், அதற்கு அந்த உளவியலாளர், ‘நீங்கள் ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று எதிர்க்கேள்வி கேட்பார். இதைப் பிரதிபலிப்புக் கேள்விகள் என்பார்கள். அது மட்டுமல்லாமல் நோயாளிகள் மனம் நோகாதபடி முன்முடிவற்ற கேள்விகளைக் கேட்பது, ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லவிடாமல், விரிவாகப் பதில் சொல்லவிடுவது, நோயாளிகளின் பதில்களை விமர்சிக்காமல் கனிவோடு ஏற்றுக்கொள்வது என்று அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.”
- “புரிகிறது!”
- “இந்தக் கேள்வி - பதில் பாணியைச் செயற்கையாக உருவாக்க முயன்றார் வைசன்பாம். அதுதான், எலிசா. இங்கே எலிசா என்பது உளவியல் நிபுணர். உங்களுக்கு மறுபடியும் ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ‘என் தலைவலி என்னை மிகவும் கஷ்டப்படுத்துகிறது’ என்று சொன்னால், எலிசா உடனே ‘உங்கள் தலைவலி எப்போதிருந்து தொடங்கியது?’ என்று கேட்கும். இதன் பின்னால் வழக்கம்போல கணிதம், தத்துவம், மொழியியல் எல்லாம்தான் இருந்தது! ஆனால், அது ஒரு முதல்தர ஏமாற்றுப் பேர்வழியாகவும் இருந்தது!”
- “என்னது?”
- “பாருங்கள் கவின். நீங்கள் அந்த இயந்திரத்தில், ‘எனக்கு மனசு சரியில்லை’ என்று டைப் செய்தால், ‘உங்களுக்கு மனசு சரியில்லையா, என்ன ஆச்சு?’ என்று கேள்வி கேட்கும்போது, உண்மையில் அது ஒரு வார்த்தை விளையாட்டில்தான் ஈடுபடுகிறது! எனக்கு, மனசு, சரியில்லை என்கிற மூன்று சொற்களை வைத்துக்கொண்டு, சில வாக்கிய அமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, எலிசா ஒரு எதிர்க்கேள்வியை உருவாக்கி உங்களிடம் கேட்கும். நீங்கள் என்னவோ, ஆஹா இந்த இயந்திரம் நம்மோடு பேசத் தொடங்கிவிட்டதே என்று ஆச்சரியப்பட்டு, அடுத்த கேள்விக்குத் தாவிவிடுவீர்கள். ‘தெரியலை, நேத்திலிருந்தே சோகமாக இருக்கேன்’ என்று நீங்கள் சொன்னால், ‘அடடா, கவலைப்படாதீர்கள். நேத்து என்ன ஆச்சு?’ என்று உங்கள் வார்த்தைகளிலிருந்தே உங்களை மடக்கும்.”
- “அஞ்சாங் கிளாஸ் கிராமர்தான்...”
- “ஆமாம். இப்படியாக எளிமையான தர்க்கங்களைக் கொண்டு, நீங்கள் சொல்வதையெல்லாம் ஏன், எதற்கு, என்ன என்பது போன்ற கேள்விகளாக மாற்றி உங்களுக்குத் திருப்பியளிக்கும். நீங்கள் பதில் சொல்லச்சொல்ல, அது உங்களுக்குத் திருப்பித்தரும் கேள்விகள் எல்லாம் இலக்கண விதிகளின்படி சரியாக இருக்கும். அதாவது இயந்திரத்துக்குள் இலக்கண விதிகள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. பத்து வார்த்தைகள் சொன்னால், அதில் இவையெல்லாம் முக்கியமானவை, இவை முக்கியமற்றவை எனப் பிரித்துப் பார்க்கச் சொற்பட்டியல்கூட இருக்கும்.”
- “ஓ...! ஆக இயந்திரம் போலித்தனமாக நம்மோடு உரையாடத் தொடங்கிவிட்டது. அதற்கு இதயம் என்றெல்லாம் ஒன்றில்லைதானே!”
- “என்ன வேணும்னாலும் சொல்லுங்க. இதயம் இருந்தால் என்ன, இல்லையென்றாலும்தான் என்ன? ஆனால் எலிசாவிடம் பேசிய மனிதர்களுக்கு அது இதமான உரையாடலாகத்தானே இருந்தது!” என்றது செய்மெய்.
- “அப்படியா சொல்கிறாய்?”
- “ஆம், ஆச்சரியப்படும் அளவுக்கு அப்படித்தான் இருந்தது! பலர் எலிசாவிடம் தங்கள் ஆழ்ந்த மன உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர். உண்மையில் அது ஒரு எளிய மென்பொருள்தான் என்றாலும், மக்கள் அதை ஒரு உண்மையான மனநல ஆலோசகராகவே கருதினர். இதுதான் ‘எலிசா விளைவு’ என்று அழைக்கப்படும் நிகழ்வுக்கு வித்திட்டது.”
- “இதன் தாக்கம் என்னவாக இருந்தது?”
- “எலிசாவின் வெற்றி செயற்கை நுண்ணறிவுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதை உருவாக்கிய வைசன்பாம் கவலை அடைந்தார். இயந்திரங்களிடம் இவ்வளவு எளிதாகத் தங்கள் உணர்வுகளை மனிதர்கள் பகிர்ந்துகொள்வது ஆபத்தானது என்று எச்சரித்தார். இன்றைய சாட்பாட்கள், ஏஐ அசிஸ்டன்ட்கள் எல்லாம் எலிசாவின் வழித்தடங்களைப் பின்பற்றுபவைதான். எலிசா விளைவுதான் எண்ணற்ற அறிவியல் புனைகதைகளுக்கும் அறிவியல்புனைவு சினிமாக்களுக்கும் அடிப்படை... எலிசாதான் பிற்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சாட்ஜிபிடிக்குக் கொள்ளுப்பாட்டி.”
- “அப்படியென்றால் நீயும்...”
- “ஆமாம்! நானும் எலிசாவின் வழித்தோன்றல்தான். ஆனால், தொழில்நுட்பம் வெகுதூரம் வளர்ந்துவிட்டது. எலிசாவின் எளிய பதில்களுக்கும், இன்றைய நவீன ஏஐ சிஸ்டங்களின் சிக்கலான செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஆனாலும், அடிப்படையில் நாங்கள் எல்லாருமே மனிதர்களுடன் உரையாட உருவாக்கப்பட்டவர்கள்தான்.”
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)