எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை எல்லோருக்கும் கிடைப்பது எப்போது?
- இந்தியாவில், புற்றுநோய் பாதிப்புகளும் எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகத் தேசியப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இவ்வகைப் பாதிப்புகளுக்கு குழந்தைகள் அதிகம் உள்ளாவதாகத் தெரிகிறது. பயனாளிக்கு உரிய விழிப்புணர்வு இருந்து, தேவையான மருத்துவச் சிகிச்சைகளும் உரிய நேரத்தில் கிடைக்குமானால், இந்தப் பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
எலும்பு மஜ்ஜை என்பது எது?
- ஓர் எலும்பானது வெளியிலிருந்து பார்ப்பதற்கு இரும்புக் கம்பி போன்று கடினப் பொருளாகத் தெரிந்தாலும், அதன் மையத்தில் குழல் போன்ற ஒரு பகுதியும் (Medullary cavity) உள்ளது. இதில் ‘எலும்பு மஜ்ஜை’ (Bone marrow) உள்ளது. இது மென்மையான திசுக்கூழ். எலும்பு மஜ்ஜையில் ‘சிவப்பு மஜ்ஜை’, ‘மஞ்சள் மஜ்ஜை’ என இரண்டு வகை உண்டு. சிவப்பு மஜ்ஜை ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை உற்பத்திசெய்கிறது. மஞ்சள் மஜ்ஜை கொழுப்பைத் தன்னிடம் சேமித்துவைக்கிறது. எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் (Stem cells) இருக்கின்றன. இவைதான் உடல் செல்கள் அனைத்துக்கும் ஆதார செல்கள். இவை வளரும்போது பல்வேறு திசுக்களின் செல்களாகப் பிரிந்து, வெவ்வேறு உறுப்புகளை உருவாக்குகின்றன. புற்றுநோய் உள்ளிட்ட ஏதாவது ஒரு நோயின் தாக்குதலால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படுமானால், அப்போது ஆரோக்கியமான ஸ்டெம் செல்களை அது உருவாக்காது. ரத்த அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். உடலின் பிற உறுப்புகளும் இதனால் செயலிழக்கும். இந்தச் சூழலில், ஆரோக்கியமான நபரிடமிருந்து எலும்பு மஜ்ஜையைப் பெற்று, பாதிக்கப்பட்ட நபருக்குச் செலுத்தப்படும் சிகிச்சை முறைக்கு ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ (Bone Marrow Transplantation) என்று பெயர்.
மஜ்ஜையைப் பாதிக்கும் நோய்கள்:
- எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் உற்பத்தியாகாமல் போவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் தெளிவான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், நெருங்கிய உறவில் திருமணம் புரிவது மரபணு சார்ந்த எலும்பு மஜ்ஜை நோய்களுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்யும் போக்கு குறைந்துவரும் தற்காலத்திலும், எலும்பு மஜ்ஜை நோய்கள் அதிகரிப்பதற்குக் கடுமையான காற்று மாசு, ஞெகிழிப் பயன்பாடு, அசுத்தமான சுற்றுப்புறச் சூழல் போன்றவை காரணமாகின்றன என்று கணிக்கப்பட்டுள்ளது. ரத்தப் புற்றுநோய், நிணநீர்ப் புற்றுநோய், ‘மல்டிபிள் மைலோமா’, தலசீமியா, அரிவாள் செல் ரத்தசோகை, ஏபிளாஸ்டிக் ரத்தசோகை, தன்னுடல் தாக்கு நோய், பரம்பரை ரத்தக்கோளாறுகள், மரபணுக் கோளாறுகள் போன்றவற்றுக்கு ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ தேவைப்படுகிறது.
உதவிக்கு வரும் நவீனத் தொழில்நுட்பம்:
- ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை கொடுத்து, எலும்பு மஜ்ஜையில் சிதைவடைந்திருக்கும் செல்கள் முழுவதுமாக அழிக்கப்படும். அதன் பின்னர், கொடையாளரின் ஒரு கிலோ உடல் எடைக்கு அதிகபட்சம் 20 மி.லி. ரத்தம் வீதம் சேகரிக்கப்படும். இது எலும்பு மஜ்ஜை சேகரிப்பின்போது அவருக்கே திருப்பிச் செலுத்தப்படும். அவரிடமிருந்து எலும்பு மஜ்ஜை சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரிக்கப்பட்டு, நோயாளிக்குச் செலுத்தப்படுகிறது. சில கொடையாளரின் புற ரத்த ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டு, நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படுவதும் உண்டு. அவை உடலுக்குள் நுழைந்த இரண்டு வாரத்துக்குள் புதிய செல்களைத் தோற்றுவித்துவிடும். முன்பு புற்றுநோய் இருந்த இடத்தில் இந்தப் புது செல்கள் உட்கார்ந்துகொள்ளும். எலும்பு மஜ்ஜை செய்யும் ரத்த அணுக்கள் உற்பத்தி உள்ளிட்ட இயல்பான செயல்கள் தொடங்கிவிடும். இதன் பலனாக, நோய் விலகிவிடும். இந்தச் செயல்முறை ‘மாற்ற மரபுக்கூறு’ (Allogeneic) எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை எனப்படுகிறது. சில நோயாளிகளுக்குச் சொந்த ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுவதும் உண்டு. இவர்களுக்கு இடுப்பு எலும்பிலிருந்து மஜ்ஜை சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்படும். இந்தச் செயல்முறைக்கு ‘சுயதான எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ (Autologous bone marrow transplantation) என்று பெயர்.
- முன்பெல்லாம் பயனாளியின் எலும்பு மஜ்ஜைக்குள் ஸ்டெம் செல்களை ஊசி மூலம் நேரடியாகச் செலுத்தும் செயல்முறைதான் இருந்தது. இப்போது ‘ஹோமிங்’ (Homing) முறைப்படி ரத்தக்குழாய்க்குள் ஸ்டெம் செல்களைச் செலுத்தினாலே, அவை எலும்பு மஜ்ஜைக்குள் நுழைந்துவிடும். இந்த நவீனத் தொழில்நுட்பம் ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’யை எளிதாக்கிஉள்ளது.
பிரச்சினைகள் என்ன?
- நடைமுறையில், நாட்டில் ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’க்குக் கடும் தட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்களைக் கணக்கெடுத்தால், அது 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை வரும்; தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் வரை இருப்பார்கள். ஆனால், இந்தியாவில் மொத்தமே 11 ஆயிரம் பேருக்கும், தமிழகத்தில் ஆயிரம் பேருக்கும்தான் ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகைப் பாதிப்புகளில் தலசீமியா நோய் முக்கியமானது. இந்தியாவில் ஆண்டுதோறும் 12 ஆயிரம் புதிய தலசீமியா நோயாளிகள் பிறக்கிறார்கள் என்றால், இவர்களில் 30% பேருக்கு மட்டுமே ‘எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை’ கிடைக்கிறது. இன்னொரு கணக்குப்படி, 2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில், நாடு மொத்தத்திலும் 960 பேருக்குத்தான் இந்தச் சிகிச்சை கிடைத்திருக்கிறது. இதற்குக் காரணம், சாமானியர்களால் இந்தச் சிகிச்சைக்கான செலவை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதுதான். சாதாரணமாக, ஒரு நோயாளிக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இதற்குச் செலவாகிறது. சில சமயங்களில் ரூ.40 லட்சம் வரைகூடச் செலவாகலாம். அடுத்த காரணம், எலும்பு மஜ்ஜையைத் தானமாக வழங்கத் தகுதியான கொடையாளர்கள் கிடைப்பது சிரமம். நோயாளி - தானமளிப்பவரின் ரத்த அணுக்கள் குறைந்தது 50% மரபணுப் பொருத்தத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
அனைவருக்கும் சிகிச்சை சாத்தியமா?
- தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2018இல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை தொடங்கப்பட்டது. இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இச்சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இச்சிகிச்சை வசதி கிடைக்கிறது. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற்ற சில தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மருத்துவமனைகளிலிருந்து இச்சிகிச்சைக்குப் பயனாளிகளைப் பரிந்துரை செய்வதும் உண்டு. இச்சிகிச்சைக்கான செலவை ‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ ஏற்றுக்கொள்கிறது என்றாலும், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அரசு வழங்கும் பணம் போதுமானதாக இல்லை எனக் கூறி, நோயாளிகளிடம் மீதிப் பணத்தைக் கோருகின்றன.
- மேலும், தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையைத் தவிர, வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இச்சிகிச்சை இலவசமாகக் கிடைக்காததால், தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமப்புறங்களில் இருந்து வரும் சாமானிய நோயாளிகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்துச் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. நோயாளிகள் மருத்துவமனையில் 30 முதல் 50 நாள்களுக்கு மேல் செலவிட வேண்டியிருப்பதால், தங்கள் அன்றாட வேலையைச் சார்ந்து வாழ்வதற்கு மிகவும் கடினமாக உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள தொலைதூரப் பகுதி மக்களுக்கும் இச்சிகிச்சையின் தேவை அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பிற மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மருத்துவ வசதியைத் தொடங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. தமிழக அரசு இதைக் கவனிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 08 – 2024)