- செப்டம்பர் 1, 1956 அன்று பிறந்த இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசிக்கு இன்று 65-வது பிறந்த நாள். எல்ஐசி உலகிலேயே அதிக பாலிசிகளைக் கொண்ட நிறுவனம்.
- அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முதற்பெரும் பங்களிப்பைச் செய்துவரும் நிறுவனம். இந்தியாவின் பங்குச்சந்தை நிலைகுலையும்போதெல்லாம் அதைத் தாங்கிப்பிடிக்கும் நிறுவனம். அவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம், 1991-க்குப் பின்னர், எல்லாப் பொதுத் துறை நிறுவனங்கள் மீதும் கடும் விமர்சனங்களை வைப்பவர்கள்கூட புருவம் உயர்த்தி அண்ணாந்து பார்க்கும் நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது என்பதுதான்!
- எல்ஐசியின் பிறப்பானது இந்திய விடுதலையின் கனவு. 200 ஆண்டு இந்திய காப்பீட்டுத் துறை வரலாற்றில் சுதேசி எழுச்சியில் முகிழ்த்த இந்தியக் காப்பீட்டு நிறுவனங்கள், நவீன இந்தியாவின் நிர்மாணத்தில் எல்ஐசியின் பங்கு ஆகியன பெருமைமிகு அத்தியாயங்கள்.
காத்திருக்கும் சவால்கள்
- 64 ஆண்டுகளில் எல்ஐசியின் வளர்ச்சி, புதிய வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறது. பழுத்த மரம் நோக்கிக் கற்கள் வராமல் இருக்குமா? அந்நிய முதலீடுகளும், இந்தியத் தனியார் கைகளும் 32 ஆண்டுகளாகவே கற்களை வீசுகின்றன.
- 1983-ல் கொண்டுவரப்பட்ட, எல்ஐசியை ஐந்து கூறுகளாகப் போடுகிற சட்டவரைவில் தொடங்கி, 2015-ல் அந்நிய முதலீட்டு உயர்வு சட்டத் திருத்தம் வரை அடுத்தடுத்த அம்புகள்.
- ஆனாலும், இன்று வரை எல்ஐசி 100% அரசு நிறுவனமாகவே நீடிக்கிறது. இன்னமும், அந்நிய முதலீட்டுக்கு 49% வரையறை என்ற கடிவாளத்தோடுதான் இந்தக் காப்பீட்டுத் தொழில் தொடர்கிறது.
- ஆயினும் இந்திய மக்களின் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து பாதுகாப்பது இந்திய மக்களின் கடமை.
- 2020 நிதிநிலை அறிக்கையில், ‘எல்ஐசி பங்கு விற்பனை’ அறிவிக்கப்பட்டு அதற்கான ஆரம்ப வேலைகளை அரசு தொடங்கியுள்ளதை இந்தத் தருணத்தில் விவாதிக்க வேண்டும்.
- எந்த நியாயத்தின் அடிப்படையில் இதைச் செய்கிறார்கள்? அரசு நிறுவனங்களின் தனியார்மயத்துக்கு 25 ஆண்டுகளாக அரசு சொல்லிவரும் வழக்கமான ‘நியாயங்கள்’கூட எல்ஐசிக்குப் பொருந்தாது. வழக்கமாக அரசு இப்படி நான்கு காரணங்களைப் பல்லவியாகப் பாடும்.
பழைய பல்லவிகள்
- நட்டம்! இந்தக் கதையை எல்ஐசியிடம் யாரும் பேசவே முடியாது. ரூ.100 கோடி போட்ட அரசுக்குக் கடந்த ஓராண்டில் மட்டுமே ரூ.2,600 கோடி; ரூ.10,000 கோடிகளுக்கு நெருக்கமாக வரிகள்; நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம், குடிநீர் என ஆதாரத் தொழில் வளர்ச்சிக்குப் பல்லாயிரம் கோடிகள்; ரூ.100 கோடி மூலதனம் என்ற அடித்தளத்தில் உருவாகி இன்று ரூ.32 லட்சம் கோடி சொத்துகள் என்று நிற்கும் பெரும் நிறுவனம் அல்லவா அது!
- திறமையின்மை! இந்தப் பருப்பும் இங்கு வேகாது. 2016-ல் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, ‘கிரீடத்தை அலங்கரிக்கும் தங்க ஆபரணம்’ என்று எல்ஐசியை வர்ணித்தார். ஆயுள் காப்பீட்டுத் தொழிலில் சரக்கு என்பது ‘சத்திய’ங்களைக் காப்பாற்றுவதுதான். 42 கோடி பாலிசிகள் என்கிற மிகப் பெரும் வணிகத் தளத்தை வைத்திருக்கிற ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 98% பாலிசி உரிமப் பட்டுவாடா விகிதத்தையும் பராமரிக்கிறது என்பதைக் காட்டிலும் அதன் நிர்வாகத் திறமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்?
- நுகர்வோர் தெரிவு! இதுவும் இங்கே செல்லாது. 1999-லிருந்து காப்பீட்டுத் தொழிலுக்குள் வந்துள்ள 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் – பெரிய பெரிய அந்நிய, இந்திய தனியார்கள் கைகோப்போடு – வணிகக் களத்தில் இருக்கும்போதும், எல்ஐசியின் சந்தைப் பங்கு 75%. எனில் இதைவிட நுகர்வோர் திருப்திக்கு என்ன வேண்டும்!
- இந்தத் துறை இந்தியாவின் மூலை முடுக்குக்கும் செல்ல வேண்டும்! இப்படியும் யாரும் பேச முடியாது. ஏனெனில், காப்பீட்டுத் துறையைக் குக்கிராமத்தினருக்கும் கொண்டுசெல்லும் அன்றைய பிரதமர் நேருவின், அன்றைய நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக்கின் கனவை இன்றும் நிறைவேற்றிவருவதில் எல்ஐசி முன்னணியில் நிற்கிறது.
- 10,000 மக்கள்தொகை மட்டுமே கொண்ட இந்தியாவின் 3,867 ஊர்களில் 3,367 ஊர்களுக்கு எல்ஐசி அலுவலகங்கள் விரிந்துள்ளன. எல்ஐசி தரும் உரிமப் பட்டுவாடாவின் சராசரித் தொகை ரூ.1.75 லட்சம்.
- ஒரு தனியார் நிறுவனத்தின் சராசரி உரிமப் பட்டுவாடா தொகை ரூ.15 லட்சம். அப்படியென்றால், சாமானியர்களுக்கும் காப்பீட்டுப் பரவலைக் கொண்டுசேர்ப்பது எல்ஐசி தவிர யார்?
புதிய கண்டுபிடிப்புகள்
- முதலாவது, பங்குச்சந்தையில் உள்ள சில்லறை முதலீட்டாளர்களுக்கு எல்ஐசி பங்கு விற்பனை முடிவு பயனளிக்குமாம். இந்திய நாட்டின் பங்குச்சந்தையில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் 4 கோடிப் பேர்.
- அதாவது, இந்திய மக்கள்தொகையில் 3%-கூட இவர்கள் கிடையாது. ஆக, 42 கோடி பாலிசிதாரர்களின் நலனைக் காட்டிலும் இந்த 4 கோடி பேரின் நலன்கள் முக்கியமா என்று அரசு சொல்ல வேண்டும்.
- சரி, அதுவாவது 4 கோடிப் பேரா என்றால், அதுவும்கூட உண்மையாக இருக்கப்போவது அல்ல என்பதையே முந்தைய அனுபவங்கள் சொல்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களான ஜிஐசி ரீ, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்கு விற்பனை 15% வரை செய்யப்பட்டன.
- அவற்றில் இன்றைய பங்குடமையில் சில்லறை முதலீட்டாளர்கள் கைகளில் எவ்வளவு உள்ளன? ஜிஐசி ரீயில் சில்லறை முதலீட்டாளர் கைகளில் இருப்பது 1.6%. நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் 0.83%. இதுதான் உண்மை.
- இரண்டாவது, பங்கு விற்பனை வழி வெளிப்படைத்தன்மை மேம்படுமாம். எல்ஐசியின் கணக்குகள் ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன.
- பொதுமக்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் இணையதளம் வாயிலாக அதன் வணிகம் தொடர்பிலான தகவல்கள் தரப்படுகின்றன. வேறென்ன வெளிப்படைத்தன்மை வேண்டும்?
- 1988-ல் செபி உருவாக்கப்பட்டது. 1992-ல் ஹர்ஷத் மேத்தா, 2001-ல் கேதன் பரேக், 2009-ல் இராமலிங்கராஜூ, 2013-ல் நேசனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச், 2018-ல் நீரவ் மோடி... இந்த மோசடிகள் எல்லாமே செபியினுடைய மூக்கின் கீழே நடந்தவைதானே.
இரு எதிரிகள்
- தொடர் நிதிப் பசியில் ஆழ்ந்திருக்கும் இந்திய அரசு எதையெல்லாம் விற்பது என்று துடிக்கிறது.
- குறைந்தது ரூ.1 லட்சம் கோடியாவது எல்ஐசி பங்கு விற்பனை வழி கிடைக்கும் என்பதே இந்தக் கணக்குகளின் மையம். அரசின் நிதிதிரட்டலில் ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்க எல்ஐசி பங்குகளைச் சந்தைக்கு இழுக்கிறார்கள்.
- அடுத்த காரணம், தனியாரின் நீண்ட கால ஆசை, திட்டம், அரசியல். லாபகரமான தொழில்களிலிருந்து அரசாங்க நிறுவனங்களை வெளியேற்றித் தம் கைக்குள் கொண்டுவர அரசை அழுத்துவது; அதற்கு ஆட்சியாளர்கள் துணைபோவது.
- இந்த இரண்டு எதிரிகளும் எல்ஐசியை உக்கிரமாக இன்று பார்த்திருக்கின்றன.
- எல்ஐசி ஒவ்வொரு சோதனையிலிருந்தும் வெற்றிகரமாக வெளிவருவதற்குக் காரணம், இந்திய மக்களுடனான அதன் பிணைப்பே.
- ‘மக்கள் சேமிப்பு, மக்கள் நலனுக்கே’ என்ற நோக்கத்தைச் செயலாக்கிவந்திருப்பதால் எப்போதுமே மக்கள் எல்ஐசியைத் தங்கள் பிடியிலிருந்து அதை நகர்த்தும் எந்த முயற்சியையும் எதிர்வினைகளால் தகர்த்திருக்கிறார்கள்.
- எல்ஐசியின் ஊழியர்கள், முகவர்கள் படை பொதுச் சமூகத்தோடு இதைப் பிணைப்பதில் முன்னணியில் நிற்கிறது. ஆக, ஒருபுறம் எல்ஐசி மக்களைக் காக்கிறது, மறுபுறம் மக்கள் எல்ஐசியைக் காக்கிறார்கள். இந்தப் பந்தம் என்றும் தொடர வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது!
நன்றி: தி இந்து (01-09-2020)