- இந்தியாவின் சாதி அமைப்புக்கும் இங்கு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட 'தர்மம்' தொடர்பான தத்துவங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 'சனாதன தர்மம்' எனும் சொல்லாடல் ஓர் உதாரணம். பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சனிக்கிழமைதோறும் எழுதும் கட்டுரைகளில், தர்மம் தொடர்பான தத்துவங்களை இங்கே அறிமுகப்படுத்துவதுடன் சமகால நோக்கிலிருந்து அவை பேசும் நியாயங்களை விசாரணைக்கும் உள்ளாக்குகிறார். சிறிய கட்டுரைகள். ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. சாதி குறித்துப் பேசும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.
- தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பல விரிவான அர்த்தங்கள் பல்வேறு காலங்களில் வழங்கப்பட்டுள்ளன. மிகப் பரவலான அர்த்தம் வாழ்வியல் நெறி. உயர் ஒழுக்கம். சமூக வழக்கில் பிறரிடம் காருண்யத்துடன் இருத்தல் என்று தமிழில் அதிகம் வழங்கப்படுவது உண்டு.
- அதாவது, ‘தான-தர்மம்’ என்று சொல்வதுபோல, அது தமிழில் ஈகையுடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. ‘தர்மம் தலை காக்கும்’ என்ற சொல்வழக்கு திரைப்பட தலைப்பாகவே தமிழில் வந்துள்ளது. ‘தர்மம் செய்யுங்க சாமி’ என்று யாசகம் கேட்பவர்கள் குரலெழுப்புவது உண்டு.
- சமூக சக வாழ்விற்கான நெறி பிறருக்கு உதவுதல் என்பதை உள்ளடக்கியதால் இந்தப் பொருள் ஏற்படுவதாகக் கருதலாம். தர்மத்திற்கு எதிர்ப்பதமான ‘அதர்மம்’ என்பது நெறி பிறழ்ந்த செய்கை. விதிகளுக்கு மாறாக நடப்பது.
- ஒவ்வொரு வாழ்வியல் நிலைக்கும் தர்மங்கள் உண்டு எனக் கூறப்படுவது உண்டு. பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஆண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பல்வேறு தொழில் செய்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் தர்ம நெறிகள் என்று கூறப்படுவது உண்டு.
- மனைவியை தர்மபத்தினி என்பார்கள். யுத்தத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் யுத்த தர்மம். தர்மத்தைக் காக்க நடத்தப்படும் யுத்தம் தர்மயுத்தம். இப்படி தர்மம் என்ற சொல்லின் பயன்பாட்டின் பட்டியிலை தொடர்ந்து நீடிக்கலாம். சுருக்கமாக, தெளிவாக எழுதுவது கட்டுரையாளரின் தர்மம் என்று கூறலாம். பொறுமையாக வாசிப்பது வாசகரின் தர்மம் எனலாம்.
ஆய்வுகள் கூறுவது என்ன
- இந்தியாவில் மிகுந்த சமூக தாக்கத்தை உருவாக்கிய தர்மம் வர்ண தர்மம்.
- சில முக்கிய ஆய்வாளர்களின் பார்வையில் இது வேத காலத்திற்குப் பிறகு, பெளத்த மதம் உருவான பிறகு உருவான ஒன்றாகும். உதாரணமாக பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டபைடல் (Alf Hiltebeitel,1942-2023) நீண்ட நாள் ஆய்விற்குப் பிறகு எழுதிய ‘தர்மா: இட்ஸ் ஏர்லி ஹிஸ்டரி இன் லா, ரிலீஜியன் அண்ட் நரேட்டிவ்’ (Dharma: Its Early History in Law, Religion and Narrative - New York: Oxford University Press, 2011) என்ற நூலில் மனுதர்ம சாஸ்திரம் வர்ண தர்மத்தையும், ஆசிரம தர்மத்தையும் வேறுபடுத்திக் காண்பதையும், ஒரு சில இடங்களில் இணைத்துப் பேசுவதையும் கூறுகிறார்.
- வர்ண தர்மம் என்பது நால்வகை வர்ணத்தவரின் வாழ்வியல் தர்மத்தைக் கூறுவது; ஆசிரம தர்மம் வாழ்வின் நான்கு நிலைகளைக் கூறுவது. மனு தர்மம் வர்ணங்களை பிறப்பின் அடிப்படையில் வரையறுக்கிறது என்பதில் ஐயம் கிடையாது. பிராமணன், ஷத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணங்களும் இரு பிறப்புடயவை. சூத்திர வர்ணத்திற்கு இரு பிறப்பு கிடையாது. பிராமணர்களே பிற அனைத்து வர்ணத்தவரைவிட உயர்ந்தவர். ஒருவர் செய்யும் தொழில்கள் வர்ண பிறப்பின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்கிறது வர்ண தர்மம்.
- இந்தக் கருத்துகள் பல காலமாக பல வகைகளில் போதிக்கப்பட்டு, பிரசாரம் செய்யப்பட்டு ஜாதிய நடைமுறையாக சமூகத்தில் நிலைபெற்றுவிட்டது கண்கூடு. இதன் இரண்டு முக்கிய விளைபொருட்கள் ஜாதிய அகமணமுறை, ஜாதிய ஏற்றத்தாழ்வு. அதனால், சமத்துவத்தை சமகால மானுட தர்மமாக கருதுவோர் கடுமையாக எதிர்த்து நிராகரிப்பதாக வர்ண தர்மம் அமைகிறது.
சனாதனமும் தர்மமும்
- இந்த நிலையில்தான் சனாதனம் என்ற வார்த்தையை தர்மத்துடன் இணைத்துக் கூறும் வழக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சனாதனம் என்றால் அழிவற்றது, ஆதியும், அந்தமும் இல்லாதது. ஆங்கிலத்தில் ‘எடர்னல்’ (eternal) என்ற பொருள் உள்ளது.
- இப்படி அழிவற்றது என்ற பொருளில்தான் சனாதனம் என்று வேதங்களை, வைதீக மதத்தைக் கூறினார்கள். பின்னர் மதம் என்பதையும் தர்மம் என்று கூறினார்கள். இன்றளவில் இந்தியில் தர்ம் என்றால் மதம். அதனால் சனாதன தர்மம் என்றால் இந்து மதம் என்று வடநாட்டில் பொருள் கொள்வது சாத்தியம்.
- இவ்வாறு பொருள் தரும் வட இந்திய நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. இந்த நூல்களில் சனாதன தர்மம் என்பது இந்து மதமாகவும், வர்ண தர்மமாகவும் பொருள் தருவதைக் காணலாம். இதனால்தான் சனாதனம் என்றால் வர்ண தர்மம், ஏற்றத்தாழ்வு என்று புரிந்துகொள்வது சாத்தியமாகிறது.
- இந்து மதப் பற்றாளர்கள்தான் 'வர்ண தர்மம் சனாதனமா, அதாவது, மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட அழிவற்றதா?' என்பதைக் கூற வேண்டும். வர்ண தர்மம் வேத காலத்திற்கு பிற்பட்டது என்னும்போதே வர்ண தர்மம் வைதீக மதத்தின் இன்றியமையாத பகுதியல்ல என்று கூறலாமே!
- தர்மங்கள் நிரந்தரமானவையா?
- இப்போது சுவாரசியமான ஒரு கூற்றினை பார்க்கலாம். இதைக் கூறுவது யார், எந்த நூலில் கூறுகிறார் என்பதைப் பிறகு கூறுகிறேன்:
- “பெண்கள் முந்தைய காலங்களில் வீட்டினுள் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் கணவர்களையும், பிற உறவினர்களையும் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக உலவினார்கள்; அவர்கள் விரும்பியபடி வாழ்வை அனுபவத்தார்கள். அவர்கள் கணவர்களுக்கு உண்மையானவர்களாக இருக்கவில்லை; ஆனால் அது பாபமாக கருதப்படவில்லை. ஏனெனில் அக்கால நெறிமுறைகள் அந்த வாழ்க்கையை அனுமதித்தன. இன்றும்கூட பறவைகளும், மிருகங்களும் அப்படித்தான் வாழ்கின்றன… பெண்களை ஒரே ஒரு கணவனுடன் மட்டும் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் தீய வழக்கம் பிற்பாடுதான் தோன்றியது.”
- இதைப் படித்தால் தீவிர பெண்ணியவாதி பேசுவதுபோலத் தோன்றும். ஆனால், இவ்வாறு கூறியது குந்தி தேவியின் கணவன் பாண்டு. மகாபாரதம் ஆதி பர்வத்தின் உட்பகுதியான சம்பவ பர்வத்தில் இது இடம்பெறுகிறது. பி.சி.ராய் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதம் ஹோலிபுக்ஸ் என்ற வலைத்தளத்தில் கிடைக்கிறது. அதில் முதல் வால்யூமில் பக்கங்கள் 283, 284 ஆகியவற்றில் இந்தக் கூற்றினை விரிவாகக் காணலாம்.
- இது எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்படுகிறது என்றால் ரிஷி ஒருவர் மான் வடிவத்தில் தன் இணையுடன் புணரும்போது பாண்டு அம்பெய்து கொன்றுவிடுகிறான். அதனால் அந்த ரிஷி பாண்டு தன் மனைவிகளுடன் உறவுகொண்டால் இறந்துவிடுவான் எனச் சபித்துவிடுகிறார். அதனால் பாண்டு குந்தியிடம் பிறருடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றுத் தரும்படி கூறுகிறான். குந்தி மறுக்கிறாள். அப்போது குந்தியிடம் இவ்வாறு மண வாழ்க்கைக்கான தர்மங்கள் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது என்று விளக்குகிறான் பாண்டு.
- தொடர்ந்து எப்போது பெண்களின் இவ்வாறான சுதந்திர வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்பதையும் கூறுகிறான் பாண்டு. உத்கலர் என்று ஒரு முனிவர். அவர் மகன் சுவேதகேது. ஒரு நாள் ஒரு பிராமணர் சுவதகேதுவின் தாயை வற்புறுத்தி கூட்டிச் செல்கிறார். சுவேதகேதுவுக்கு கோபம் வருகிறது. அவன் தந்தை உத்கலர் மகனிடம், “இதற்கு நீ கோபிக்க க் கூடாது. இதுதான் சனாதன தர்மம்” என்று கூறுகிறார். அதை ஏற்றுக்கொள்ளாத சுவேதகேதுதான் ஒரு பெண்ணுக்கு ஒருவருடன் மட்டுமே உறவு இருக்க வேண்டும் என்று விதிமுறையை ஏற்படுத்திவிடுகிறான்.
- அதேசமயம், ஒரு பெண் கணவன் விரும்புப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான். இதனைச் சுட்டிக்காட்டும் பாண்டு, என் விருப்பப்படியும் பழைய தர்மத்தை அனுசரித்தும் நீ மற்றவருடன் கூடி எனக்கு பிள்ளை பெற்றுக் கொடுக்கலாம் என்று கூறி குந்தியைச் சம்மதிக்க வைக்கிறான். ஹில்டபைடலும் அவரது நூலில் குந்திக்கும், பாண்டுவிற்கும் நடந்த இந்தத் தர்மம் குறித்த விவாதத்தைப் பரிசீலிக்கிறார்.
- உத்கலர் தன் மனைவி பிறருடன் உறவுகொள்வதை சனாதன தர்மம் என்று குறிப்பிடுவது கருதத்தக்கது. இதன் பொருள் என்னவென்றால் எது சனாதன தர்மம் என்பதே காலத்திற்குக் காலம் மாறுபடுவது என்பதுதான். மகாபாரதம் தர்மங்கள் குறித்த சிந்தனைக்கான முக்கிய நூலென்றால், அதில் சனாதனம் என்பதே காலத்திற்குக் காலம் மாறுவது என்று கூறப்பட்டிருப்பது முக்கியமான அம்சமாகும்.
நன்றி: அருஞ்சொல் (11 - 11 – 2023)