- மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பால் அவசியம். பாலில் கொழுப்புச் சத்து, புரதச்சத்து, தாதுச்சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருட்கள் உள்ளன.
- தீவிர பால் பெருக்குத் திட்டத்தின் மூலம் நம்நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 18.8 கோடி டன் பால் உற்பத்தி செய்து உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலாவதாகத் திகழ்கிறது.
- இதில் தமிழகம் நாள் ஒன்றுக்கு 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து நாட்டிலேயே நான்காவது மாநிலமாக இருக்கிறது.
- பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை நாம் பால் பவுடர், உலர் வெண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இன்று அந்நிலை மாறி, பால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நம் நாட்டில் பால் உற்பத்தி நிலை மேம்பட்டுள்ளது.
- அனைத்து வளர்ந்த நாடுகளும் பால் உற்பத்திக்கு பெரும்பாலும் கிராமங்களையே சார்ந்துள்ளன. ஆனால் பாலின் தேவை பெரிய நகரங்களில்தான் அதிகம்.
- எனவே கிராமங்களில் உற்பத்தியாகும் பால், தகுந்த முறையில் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு நகரங்களைச் சென்றடைய வேண்டும்.
- சாதாரணமாக மாட்டிலிருந்து கறக்கப்பட்ட பால் சுமார் மூன்று மணி நேரம் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். பால் உற்பத்தியாளர்கள் பாலை சுத்தமாக உற்பத்தி செய்வதுடன், பால் உற்பத்தி அதிகமுள்ள காலங்களில் தங்களிடமுள்ள உபரியான பாலினை வெண்ணெய், நெய், கோவா, பாலாடைக் கட்டி போன்ற பால் பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் அதிக லாபம் பெற வாய்ப்புண்டு.
- எல்லா வகையிலும் பயன்படும் உணவான பாலை, நல்ல முறையில் அதன் சத்துகள் கெடாதவாறு உற்பத்தி செய்ய வேண்டும். அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பசுவின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும்.
- மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி, பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் விரைவாக வளர்வதற்கு பால் நல்ல திரவப்பொருளாகும்.
நன்றியுடன் நினைவுகூர்வோம்
- பசுவின் மடியில் பால் சுரப்பது பல உடற்கூறு இயக்கங்களால் ஏற்படுகிறது. கன்று மடியில் ஊட்டுவதாலும், பசு தீவனத்தைப் பார்ப்பதாலும், பால் கறப்பவர் மடியைத் தடவி விடுவதாலும், நரம்புகள் மூலமாக சில ஹார்மோன்கள் தூண்டப்பட்டு பால் சுரக்கிறது.
- பால் கறப்பது ஒரு கலை. அனுபவமும், நல்ல திறமையும் பால் கறப்பதற்குத் தேவை. பால் கறக்கும்போது, கவனமாகவும், விரைவாகவும், மாட்டின் மடியிலுள்ள முழுப் பாலையும் பெறும்படியும் கறக்க வேண்டும்.
- பால் கறக்கும்போது, மாடுகளுக்கு எந்த விதத்திலும் சிரமமில்லாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இரைச்சல், பயமுறுத்தல், அடித்தல் போன்றவற்றால் பால் சுரக்கும் இயக்கங்கள் தடைபட்டு பால் சுரப்பு நின்று விடும்.
- பால் கறப்பவர் மாறினாலும், பால் அளவு திடீரென்று குறைந்துவிடும். பால் சுரக்க ஆரம்பித்தவுடன் எல்லாப் பாலையும் கறந்துவிட வேண்டும். விட்டால் பால் மடியிலேயே தங்கிவிடும்.
- கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்துக் கீழே இழுப்பதன் மூலம், பால் கறக்க முடியும். இம்முறையில் காம்புகளுக்கு ஒரே அளவான அழுத்தம் கிடையாது. மேலும் காம்பின் மேல் பக்கம் இதனால் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
- இம்முறையைக் காட்டிலும் மேற்கூறிய முறைதான் சிறந்தது. எனினும், சிறு காம்புகள் உள்ள மாடுகளிலும், பாலை கறந்து முடிக்கும்போதும், இம்முறையைக் கடைப்பிடிக்கலாம்.
- கறவை மாடுகளின் மடியில் கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆரோக்கியமான நோயற்ற மாடுகளில் இவ்வகையான கிருமிகள் எவ்விதக் கெடுதலும் செய்வதில்லை.
- பால் கறக்கும்போது முதலில் வரும் பாலினை நீக்கிவிட வேண்டும். கறவை மாடுகள் காசநோய், கருச்சிதைவு, அடைப்பான், மடி வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டிருக்கக் கூடாது.
- ஆரோக்கியமான, நோயற்ற மாடுகளாக இருப்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவது அவசியம்.
- மாடுகளின் உடலிலிருந்தும் அசுத்தங்கள் பாலில் சேர வாய்ப்புண்டு. ரோமம், மண், சாணம், வைக்கோல் போன்றவற்றுடன் சில கிருமிகளும் பாலில் சேரும்.
- மாடுகளை நன்கு தேய்த்து அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட உரோமம் காணப்பட்டால் அவற்றைக் கத்தரித்து நீக்கலாம்.
- குறுகிய வாயுள்ள பால் பாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம், காற்றால் பாலில் சேரும் அசுத்தங்களை ஓரளவு குறைக்க முடியம். சுற்றுப்புறம் அசுத்தமாகவும், காற்று அதிகமாக வீசும் இடமாகவும் இருந்தால் பாலில் அசுத்தம் எளிதில் கலந்து விடும்.
- பால் கறப்பவர் காசநோய், டைபாய்டு, தொண்டைப்புண், டிப்தீரியா, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் கறக்கும்போது, தும்முவதாலும், பேசுவதாலும், அவர் உடம்பிலுள்ள கிருமிகள் பாலில் சேர வாய்ப்புண்டு.
- பால் கறப்பவரின் கைகளிலுள்ள நகங்கள் நீண்டிருந்தால் அதில் சேர்ந்துள்ள கிருமிகள் மூலம் பால் அசுத்தம் அடையலாம். மேலும், பால் கறப்பவர் தனது கையை ஈரமாக்கியோ, பாலில் விரல்களை நனைத்தோ கறப்பதாலும் பாலில் அசுத்தம் சேரும். எனவே, ஆரோக்கியமானவர்கள் மட்டுமே பால் கறக்க வேண்டும். பால் கறப்பதற்கு முன், கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து, உலர்ந்த சுத்தமான துணியில் துடைத்த பின், பால் கறக்கத் தொடங்க வேண்டும்.
- பால் பாத்திரங்கள் மூலமாகவே அதிகமான அசுத்தங்கள் சேர்கின்றன. எனவே, பாலை கறப்பதற்கும், சேகரிப்பதற்கும், உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள் மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் ஒரே சீரான அமைப்புள்ளதாக இருத்தல் வேண்டும்.
- தனது ரத்தத்தைப் பாலாக தரும் மாடுகளை இந்த நாளில் அனைவரும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
- இன்று (ஜூன் 1) உலக பால் நாள்.
நன்றி: தினமணி (01 – 06 - 2021)