TNPSC Thervupettagam

எல்லார்க்கும் கல்வி தந்த ஏந்தல்

May 30 , 2022 800 days 454 0
  • எகிப்தின் நைல் நதிக்கு நிகராக அமைந்தது காவிரி வடிநிலம். 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, வளம் சார் வண்டல் சுமந்து வந்த காவிரி, தஞ்சை மக்களுக்கு அமைத்துக் கொடுத்த நெற்களஞ்சியம்தான் இந்த வடிநிலம்.
  • இதற்கு ஏற்புடையதாக அமைந்த மக்கள் வாழ்க்கை முறை வளநாடுகள் என்ற ஆட்சிமுறையையும் கொண்டிருந்தது. இந்த நாடுகள் மன்னனுக்கு படைவீரர்களைத் திரட்டித்தருவதற்கும்,  நிலவரிகளைத் திரட்டித் தருவதற்குமான பொறுப்பை ஏற்றிருந்தன. 
  • மன்னர்கள் நேரடியாக கிராமத்தில் வீரர்களைத் திரட்டும் உரிமையையும், நிலவரி திரட்டும் அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. இதனை ஒருவிதமான குடிமை சமூகம் என்றுதான் கூற முடியும். சுயமரியாதையோடு வாழ்ந்த இந்த மக்களிடம் சுயகௌரவம் சார்ந்த ஒருவிதமான முரட்டுத்தனமும் இருந்தது. 
  • வியாபாரம் செய்ய வந்த அந்நியரின் வருகைக்குப் பின்னர் நெல்லும் நெல் விளைந்த வயல்களும் தனது நூற்றாண்டு கால கெüரவத்தை இழந்தன. கடல் வணிகம் செய்யும் வியாபாரிகளும், வட்டித் தொழில் செய்பவர்களும் மட்டுமே செழிப்புற்றனர். பின்னர், ஏற்றுமதி வியாபாரமும் தொழில் துறையும் வளர்ச்சி அடைந்தன. 
  • இங்கிருந்த விவசாயிகளில் பலரும் ஆங்கில அரசுக்கு நிலவரிகட்ட முடியாமல் திண்டாடிப் போனார்கள். விவசாயிகளின் வீட்டுக் கதவுகளையும், உழவு மாடுகளையும் வருவாய் அதிகாரிகள் கவர்ந்து செல்ல, விவசாயிகளின் வைராக்கிய தற்கொலைகள் கூடுதலாயின.
  • இந்த நிலையில், கல்வியை தவிர வேறு எதனாலும் இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது என்று சிலர் கருதினர்.  நாடு விடுதலையடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1956இல் காமராஜரால் வழிகாட்டப்பட்டு ஐயா வீரையாவால் உருவாக்கப் பட்டதுதான் பூண்டி புட்பம் கல்லூரி. 1971 ஆண்டு துளசி ஐயா கல்லூரியின் பொறுப்பை ஏற்ற பின்னர், அரசுக் கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் எதுவும் பெறுவதில்லை என்ற உறுதியை நிர்வாகம் ஏற்றது. ஜாதி மதம் பாராமல் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
  • "நான் பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். எனக்கு கல்லூரியில் படிக்க ஆசை' என்று எந்த எளிய மாணவன் கல்லூரியில் வாசலில் நின்றாலும் அவனுக்கு அங்கு ஒரு இடம் காத்திருந்தது. வயலில் வேலை செய்து விட்டு சேறு படிந்த கால்களுடன் மாணவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். வெயிலில் உழுது உழுது கருகிப் போன அந்த கறுப்பு இளம் தலைமுறையை கைப்பற்றி அழைத்து செல்ல அந்த வெண்ணிற கதராடை அங்கேயே நாற்காலி போட்டு அமர்ந்து காத்திருந்தது. 
  • கிராம வாழ்வை மட்டுமே அறிந்திருந்த மாணவர்கள் கல்லூரிக்கு வந்து உலக வரலாற்றுப் பக்கங்களைப் படிக்கத் தொடங்கினர். 
  • தமிழ்நாட்டிலேயே தஞ்சை மண்ணில்தான் நிலக்குவியல் முறை கூடுதலாக இருந்தது. பெரும் நிலக்கிழார்களின் எண்ணிக்கையும் அதிகம். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆயினும் அவர்களில் பலர் இருந்த இடம் எதுவென்று தெரியாமலேயே போய்விட்டது. கல்விப் பணியால் பூண்டியின் பெயர் நிலைத்து நிற்கிறது. அதிலும் துளசி ஐயாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
  • ஒரு கட்டத்தில் கல்வி நிலையங்களில் கட்டாய நன்கொடை ஆட்சி செய்யத் தொடங்கியது. சுதந்திரத்தை ஒட்டிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அர்ப்பணிப்பு மிக்க கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை, மறுக்கப்பட்ட மக்களின் கல்விக்கு ஆற்றிய பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 
  • அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை சுதந்திரத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டன. புதிய சூழலில் இதைப் போன்ற பல புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தங்களின் கொள்கையை மாற்றிக் கொண்டு கட்டாய கட்டணத்தைப் பெற்றன. இது நாள் வரை "கல்விக்கு கட்டாயக் கட்டணம் இல்லை' என்ற கொள்கையை பூண்டி புட்பம் கல்லூரி மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் தான் துளசி ஐயா கல்வித் தந்தை என்று போற்றப்படுகிறார்.  
  • வடஅமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள கனடா, அமெரிக்கா முதலான நாடுகளுக்கு நான் சென்றபோது, பூண்டி கல்லூரியில் படித்த பலரை சந்தித்தேன். அவர்கள் அங்கு எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பூண்டி துளசி ஐயாவை நன்றியோடு நினைவுகூர்ந்தார்கள். பூண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தின் கோடுகள் உலக வரைபடம் முழுவதும் பரவி நிற்பதைப் பார்த்து வியந்து போனேன். 
  • துளசி ஐயாவை அறிந்து கொள்ளல் இன்றைய இளைய தலைமுறைக்கு அவசியமான ஒன்றாகும். மாளிகைக்குள் வாழ்ந்த எளிமை அவர். உண்மையான காந்தியவாதி. எல்லாம் இருந்தாலும் தனது குறைந்தபட்ச தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்ளும் குணத்தை அவர் கற்றிருந்தார். "அதற்கு மேல் எதையாவது நீ எடுத்துக் கொண்டால் அதன் பெயர் ஆடம்பரம்' என்றார். 
  • நேர்மை தவறாத உயர் வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர் துளசி ஐயா. தூய காற்றை போல, தூய நீரைப் போல வேறுபாடுகள் எதுவுமின்றி பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். 
  • ஐயாவின் முதுமைக் காலத்தில் அவருடன் மேடையில் பங்கேற்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. எளிமைக்கு உதாரணமான தோழர் ஜீவா குறித்து ஐயா பேசினார். பேசி முடித்தவுடன் ஐயாவிடம் "எங்கள் தலைவர் ஜீவாவின் எளிமையைப் பற்றி சொன்னது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது' என்றேன். அதற்கு அவர் "பெருந்தலைவர் காமராஜரிடம் நான்கு வேட்டிகள் இருந்தன. ஒரு வேட்டிக்கு மாற்று வேட்டி வேண்டாம் என்று பொது வாழ்வில் ஈடுபட்ட தலைவர் ஜீவாதானே' என்று கூறியது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது.
  • "கட்டணமில்லா கல்வி' என்று அறிவித்து, அதை முழுமையாக முதலில் செயல்படுத்திய நாடு சோஷலிச ரஷியாதான். இன்றும் எந்த சோஷலிச நாடும் கல்வியை விலைக்கு விற்பதில்லை. இதைப் போலவே ஜனநாயக நாடுகளும் கல்வியை விலைக்கு விற்கக் கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அது செயல்படுத்தப்படுவதில்லை. 
  • இந்தச் சூழலில் கல்வியை வணிகம் ஆக்கக் கூடாது என்பதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த ஐயாவை நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு பெருந்தொற்று காலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த ஐயாவின் அரிய பணியை, அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்வதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

நன்றி: தினமணி (30 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்