TNPSC Thervupettagam

எல்லை மீறும் ஊடகப் பிழைகள்

September 26 , 2023 472 days 317 0
  • பிரபல நடிகர்-இசையமைப்பாளரின் 16 வயது மகள் தற்கொலை செய்து கொண்டதை ஊடகங்கள் செய்தியாக்கிய விதம் பெரும்வருத்தத்தையும் கோபத்தையும் பல்வேறு தரப்பினரிடம் ஏற்படுத்தியுள்ளது. திரைத் துறைப் பிரபலங்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ காலமாகும்போது 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகள், யூடியூப் அலைவரிசைகள் உள்ளிட்டகாட்சி ஊடகங்கள் துக்க வீட்டு நிகழ்வு ஒவ்வொன்றையும் நொடிக்கு நொடி நேரலை செய்வது இதுமுதல் முறையல்ல; இறந்தவருக்கான கண்ணியத்தையும் அவருடைய குடும்பத்தின் அந்தரங்க உணர்வையும் துச்சமென மதித்துச் செயல்படுவதும் புதிதல்ல. ஆனால், இந்த முறை உயிரிழந்தவர் ஒருசிறுமி என்பதும் அவரது மரணம் ஒரு தற்கொலை என்பதும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அதிகரித்து இருப்பதோடு, இதற்குப் புதுப் பரிமாணங்களையும் இணைத்துள்ளன.

கைவிடப்படும் விதிமுறைகள்

  • இந்தச் சிறுமியின் இறப்புச் செய்தியைத் தமிழின் சில முன்னணி செய்தி அலைவரிசைகள் வெளியிட்ட விதமே பல வகைகளில் பிரச்சினைக்குரியது. முதலில் இந்தச் செய்தியை வெளியிட்டவர்கள் இறந்த சிறுமியின் பெயருக்குப் பதிலாக அவரது தங்கையின் பெயரை அவருடைய பெயராகத் தவறாகக் குறிப்பிட்டிருந்தார்கள். இது செய்திவெளியாகி சில மணி நேரம் கழித்துத்தான் தெரியவந்தது.
  • அனைவரையும் முந்திக்கொண்டு செய்திகளைத் தருவதற்கான அவசரத்தில் இறந்தவரின் பெயரைக்கூடச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறார்கள். பதின்பருவத்தில் சகோதரியை இழந்த அந்தப் பெண்ணுக்கு அதில் தன் பெயர் தவறுதலாக இடம்பெற்றது எவ்வளவு வலியை ஏற்படுத்தியிருக்கும்?
  • சில முன்னணிக் காட்சி, இணைய ஊடகங்கள் இந்தத்தற்கொலையைச் செய்தியாக்கிய விதமும் பிரச்சினைக்குரியது. பிரபலங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணம்தொடர்பான செய்திகள் பெற்றுத் தரும் கவன ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில், தற்கொலை தொடர்பான செய்தி வழங்கலுக்கான விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன.
  • 18 வயதுக்குஉட்பட்டவர் தற்கொலை செய்துகொண்டால் அவருடையபெயர், ஒளிப்படம் உள்ளிட்ட இறந்தவரின் அடையாளங்களைத் தெரிவிக்கக் கூடாது; தற்கொலைக்கான காரணத்தை ஊகத்தின் அடிப்படையில் சொல்லக் கூடாது; தற்கொலைக் கடிதத்தைக் காண்பிக்கவே கூடாது; இளைஞர்கள் - குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டால் அதை முதன்மைச் செய்தியாக வெளியிடக் கூடாது என தற்கொலைகளைச் செய்தியாக்குவது தொடர்பாகப் பல விதிமுறைகள் இருக்கின்றன.
  • தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பவர்கள், தற்கொலை தொடர்பான செய்திகளால் அந்த முடிவை நோக்கி உந்தப்படக் கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதுவும் பதின்பருவத்தினரின் தற்கொலைகளுக்குச் செய்திகளில் முக்கியத்துவம் அளிப்பது, அதே வயதில் இருக்கும் சிலரை அதேபோல் செய்யத் தூண்டும் ஆபத்தையும் உள்ளடக்கியது.
  • இதைப் பற்றி எல்லாம் துளிக்கூட அக்கறை இல்லாமல்தான் இந்தச் சிறுமியின் தற்கொலை தொடர்பான செய்திகள் அன்றைய நாள் முழுவதும் ஒளிபரப்பப்பட்டன. அவருடைய பெயர், ஒளிப்படம், குடும்பத்துடன் இருக்கும்ஒளிப்படம் ஆகியவை காண்பிக்கப்பட்டன. அவர் தற்கொலைக்கான காரணம் குறித்த புலன் விசாரணையிலும் சில ஊடகங்கள் இறங்கின.
  • பொதுவாக, திரைப்படப் பிரபலங்களின் குடும்பஉறுப்பினர்கள் இறந்துவிட்டால் செய்யப்படுவதுபோல், அன்றைக்கு அந்தச் சிறுமியின் சடலம் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் எடுத்துவரப்படுவது தொடங்கி இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரை அனைத்தையும் சில அலைவரிசைகள் ஒளிபரப்பின.
  • அஞ்சலி செலுத்த வந்தவர்களைச் சூழ்ந்துகொண்டு, இறந்த சிறுமி பற்றிய கேள்விகளால் நிருபர்கள் அவர்களைத் துளைத்தெடுத்தனர். அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீருடன் வெளியே வந்த ஒரு ஆசிரியையை வழிமறித்த செய்தித் தொலைக்காட்சி ஊடகர் ஒருவர், அவரிடம் விசாரணை நடத்துவதுபோல் கேள்விகளைக் கேட்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுக் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
  • இந்தச் சிறுமி மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த நடிகர் மாரிமுத்துவின் மரணத்தின்போதும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் கவலைக்குரியதாகவே இருந்தது. மாரிமுத்து நடித்துக்கொண்டிருந்த நெடுந்தொடரின் இயக்குநர், மாரிமுத்துவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்தபோது, “மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார்?” என்று ஓர் ஊடகர்கேட்டார். ஊடக விதிமுறைகள் மட்டுமல்ல, துக்க வீட்டில்கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நாகரிகத்தை மீறுவதற்குக்கூடச் சில ஊடகர்கள் தயங்குவதில்லை என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் காண்பிக்கின்றன.

பிழை குறித்த கவலையின்மை

  • மாரிமுத்து மறைவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் இறந்துவிட்டதாகச் சமூக ஊடகங்களில் வெளியான வதந்தியின் அடிப்படையில், முன்னணித் தமிழ் செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அடுத்த சில நிமிடங்களுக்குள் வேறு சிலசெய்தித் தொலைக்காட்சிகளும் சில இணைய ஊடகங்களும் இந்தப் பிழையான செய்தியை வெளியிட்டுவிட்டன.
  • இது போலிச் செய்தி என்பது சற்று நேரத்தில் உறுதியாகிவிட்டது. ஒருவரின் மரணம் குறித்த செய்தியைஉறுதிப்படுத்திக்கொள்வதற்கான எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள், உண்மை தெரிந்தவுடன் அந்தத் தவறான செய்திகளுக்கான இணைய இணைப்புகளையும் காணொளிகளையும் நீக்கிவிட்டன. தவறான செய்தி வெளியிடப்பட்டதற்கான தடயங்கள் அழிக்கப்பட்டன.
  • ஆனால், தவறுகளிலிருந்து பெரும்பாலானோர் பாடம் கற்பதாகத் தெரியவில்லை. இந்த மாதத் தொடக்கத்தில் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர் வளர்மதி இறந்த செய்தியை அந்நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் விஞ்ஞானியும் திட்ட இயக்குநருமான வளர்மதி இறந்துவிட்டதாகத் தவறாகச் சில அச்சு ஊடகங்களும் அவற்றின் இணைய தளங்களும் முதலில் வெளியிட்டுவிட்டன. செய்தியை முந்திக்கொடுக்கும் அவசர நோய்க்கூறு சில அச்சு ஊடகங்களுக்கும் தொற்றிவிட்டதாகத் தெரிகிறது.
  • உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்ததாகச் சொன்ன ஒரு மாதத்துக்குள், இறந்த பெண்ணின் பெயரைத் தவறாகத் தெரிவித்த அவலம் நேர்ந்திருக்கிறது. தவறானஇறப்புச் செய்திகளை வெளியிடுவது, இறந்தவர் தொடர்பான தவறான தகவல்களைத் தருவது போன்றவற்றைத் தவிர்ப்பதற்கான எந்த அடிப்படை நெறிமுறைகளோ, அக்கறையோ பலரிடம் இல்லை. இத்தகைய தவறுகள் எவ்வளவு மோசமான தாக்கத்தை விளைவிக்கக்கூடியவை என்பது குறித்த புரிதலும் இல்லை.

நம்பிக்கை தரும் எதிர்வினைகள்

  • நடிகர்-இசையமைப்பாளரின் மகள் தொடர்பான ஊடகங்களின் செயல்பாட்டுக்கு எதிராகக் கடுமையான விமர்சனமும் கண்டனங்களும் எழுந்தது கவனிக்கத்தக்கது. இதையடுத்து, முன்னணி யூடியூப் அலைவரிசை நிறுவனம் ஒன்று, இனிமேல் பிரபலங்களின் துக்க வீட்டு நிகழ்வுகளை நாங்கள் செய்தியாக்க மாட்டோம் என்றும் அதிகாரபூர்வ இரங்கல் கூட்டங்கள், அஞ்சலி நிகழ்ச்சிகளை மட்டுமே செய்தியாக வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளது.
  • தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் ஊடகத்தினர் சுயகட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும்; அரசு இதைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் ஊடகங்களின் செயல்பாட்டைக் கண்டித்திருப்பதோடு, துக்க வீடுகளில் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் ஊடகங்கள் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற எதிர்வினைகள் மாற்றம் குறித்த நம்பிக்கையை விதைக்கின்றன; ஆனால், இது மட்டும் போதாது.

அணுகுமுறை மாற்றம்

  • செய்திகளை உடனடியாகக் கொடுப்பதைவிட, சரியாகக் கொடுப்பதே தலையாய கடமை என்பதை ஊடகத் துறையில் உள்ள அனைவரும் உணர வேண்டும். பிரபலங்கள் வீடுகளில் மரணம் நிகழும்போது இறந்தவர்களைப் பிரபலம் அல்லது பிரபலத்தின் உறவினராகப் பார்க்காமல் மனிதராகப் பார்த்து, இறந்தவருக்கு உரிய கண்ணியத்துக்கும் உறவைப் பறிகொடுத்தவர்களின் துக்கத்துக்கும் மரியாதை அளிக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • மக்களும் செய்திகளை நுகர்வதிலும் பிறருடன் பகிர்ந்துகொள்வதிலும் அவசரம் காண்பிக்காமல் சரியானசெய்திகளை மட்டுமே தரும் ஊடகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை ஆதரிக்க வேண்டும். தவறு செய்யும் ஊடகர்களைக் கட்டம்கட்டி சமூக ஊடகங்களில் வசைபாடுவதைவிடச் செய்திகளை வழங்குவோரும் அவற்றை நுகர்வோரும் செய்தி, ஊடகம் ஆகியவை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் மட்டுமே மாற்றங்களைக் காண முடியும்.
  • தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், அதிலிருந்து விடுபட கீழ்க்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம்: தமிழ்நாடு அரசின் உதவி எண்: 104 (24*7)
  • சிநேகா தொண்டு நிறுவனத்தின் உதவி எண்: 044 2464 00 60

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்