TNPSC Thervupettagam

எல்லைப் பதற்றம் எப்போது தணியும்?

September 25 , 2020 1577 days 689 0
  • லடாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் அளவுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட மேலை நாடுகளின் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள் சிலவே.
  • தனது கடல் கடந்த அண்டை நாடுகளான ஜப்பான், தைவான், வியத்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா, புருனே போன்ற நாடுகளின் கடல் எல்லைகளில் அத்துமீறிக்கொண்டு தன்னை ராணுவரீதியாக வீழ்த்த முடியாத ஒரு சக்தியாக நிலைநிறுத்த சீனா முயன்றுகொண்டிருக்கிறது.
  • சீனா வழக்கமாக ஒரு வம்பரைப் போல்தான் வியத்நாமுடன் நடந்துகொள்கிறது. வியத்நாமின் கடல் எல்லைக்குள், அதன் கரைக்கருகில்கூட மீன்பிடிப் படகுகளும் பிற படகுகள், கப்பல்களும் செல்ல விடாமல் சீனா தடுக்கிறது.
  • 1979-ல் வியத்நாமை ஊடுருவ முயன்றபோது ஏற்பட்ட அவமானகரமான தோல்வி பற்றிய நினைவுகளை சீனா துடைத்தழிக்கப் பார்க்கிறது.

சீனாவின் எதேச்சாதிகாரம்

  • கடல் எல்லைகள் சார்ந்து சீனா முன்வைக்கும் எதேச்சாதிகார உரிமை கோரல்கள் சர்வதேசக் கடல் சட்டங்களை அத்துமீறுவதாக சர்வதேசத் தீர்ப்பாயம் ஒன்று கூறிய தீர்ப்பை சீனா நிராகரித்தது/ அத்துமீறியது.
  • சமீபத்தில், சீனப் படைகள் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டதையும் அதன் விளைவாக லடாக்கில் பதற்றம் ஏற்பட்டதையும் தொடர்ந்து சீனத் துருப்புகளின் நடமாட்டம் லடாக்கின் ராணுவரீதியில் முக்கியத்துவமும் பிரச்சினைக்குரியதுமான இடங்களில் காணப்பட்டது.
  • இந்த நகர்வுகள் குறித்த இந்தியாவின் அக்கறை இயல்பானதே. லடாக்கின் டெப்சாங்கில் சமீபத்தில் இந்தியாவுக்குச் சினமூட்டும் வகையில் சீனா நடந்துகொண்டது லடாக்கில் உள்ள ராணுவத்தின் தொடர்பு வலைப்பின்னலை, அதாவது டௌலத் பெக் விமான தளம், அதையடுத்து பாகிஸ்தான் தன்னுடைய எல்லை என்று கோரும் காரகோரம் கணவாய் வரை நீளக்கூடிய வலைப்பின்னலைப் பாதிக்கும்.
  • இந்த நகர்வுகளெல்லாம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. டெப்சாங்கில் சீனாவின் சமீபத்திய நகர்வுகள் இந்தியாவை வலுவான எதிர்வினை புரியும் கட்டாயத்துக்குத் தள்ளியிருக்கின்றன.
  • லடாக்கில் சீனாவை ஒட்டியிருக்கும் இந்திய எல்லைகள் சீனாவின் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகக்கூடியவை என்று இந்தியா கருதுகிறது.
  • மேலும், இந்தியாவும் உலகமும் கரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், சீனா இந்த நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறது.
  • இந்தப் பின்னணியில், லடாக்கில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த இந்தியா இடையறாமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.
  • இந்தக் கோடை காலம்தான் இந்தியாவின் எல்லையில் ஊடுருவி அதன் பரப்பைக் குறைக்கச் சரியான தருணம் என்று சீனா உணர்ந்தது.
  • லடாக்கில் உள்ள அதன் துருப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரிக்கப்பட்டது.
  • கடுமையான குளிர் காலம் நெருங்கிக்கொண்டிருந்ததால் லடாக்கில் உள்ள இந்தியப் படையினருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்படும் என்று சீனா முடிவுக்கு வந்தது, குறிப்பாக, கரோனா வைரஸால் கடுமையாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்.

சீனா கையாண்ட வழிமுறை

  • தனது நோக்கங்களை அடைய சீனா மேற்கொண்ட வழிமுறை இதுதான்: வடக்கு லடாக்குக்குச் செல்லும் சாலைகளைத் துண்டித்து, அதன் மூலம் ராணுவரீதியில் முக்கியத்துவம் கொண்ட் டௌலத் பெக் ஓல்டி விமானநிலையம், காரகோரம் கணவாய் போன்றவற்றுக்கான இந்தியாவின் அடிப்படைப் பொருள்கள் விநியோகங்களைத் தடுத்து நிறுத்துவது.
  • கூடவே, சூஷுலிலிருந்து பாங்காங், கல்வான் படுகைகள் வரை ஒட்டுமொத்தப் பகுதியின் உயரமான இடங்களின் கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் பெறவும் சீனா முயன்றது.
  • முக்கியமான இடங்களில், இந்தியத் துருப்புகள் குன்று உச்சிகளை ஆக்கிரமித்திருந்ததால் சீனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
  • காரகோரம் கணவாயிலோ அல்லது அதற்கு அருகிலோ சீனப் படைகள் இருப்பதென்பது இமயமலைக்குக் குறுக்காக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மற்றுமொரு தொடர்பை ஏற்படுத்திவிடும்.
  • இது நம் தொடர்பு வலைப்பின்னலுக்கும் சியாச்சென் பனியாறு பகுதிக்கு அருகில் உள்ள நம் படைகளுக்கும் பெரிய ஆபத்தைக் கொண்டுவந்துவிடும்.
  • அதுபோன்ற நகர்வானது இந்தியாவிடமிருந்து வலுவான எதிர்ப்பைச் சந்திக்கும். சீனா புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். லடாக்கின் காரகோரம் கணவாயில் பாகிஸ்தானுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள சீனா மேற்கொள்ளும் எந்த முயற்சியும் எதிர்க்கப்படும் என்பதையும், அப்படிப்பட்ட நகர்வு சீனத் தலைவர்களுக்கு வெளியுறவுரீதியிலும் ராணுவரீதியிலும் மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.
  • காரகோரம் கணவாய் தனது எல்லைப் பகுதியில் இருப்பதாகவும், ஜம்மு & காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வடமேற்கு எல்லை அது என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.

இந்தியாவுக்குத் தலைவலி

  • சீனாவுடன் 1993-லும் 1996-லும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுஎன்று குறிப்பால் உணர்த்துகின்றன.
  • நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் புதிய இடங்களை எதேச்சாதிகாரமாக வரையறுக்க இந்த ஒப்பந்தங்களை சீனா பயன்படுத்துகிறது. இந்தியாவின் மேற்கு, கிழக்கு எல்லைகளின் குறுக்காகத் தங்கள் நில எல்லைகளை வரையறுக்கவும் விஸ்தரிக்கவும் சீனா கடந்த 17 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டுவருவதால் மேற்கண்ட ஒப்பந்தத்தின் கூறுகள் இந்தியாவுக்குத் தலைவலியாக மாறியுள்ளன.
  • 1990-களின் தொடக்கத்தில் நமது பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்ததால், சீனாவுடனான நமது எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்ற கவலை இயல்பாகவே காணப்பட்டது.
  • நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் ஊடாகச் செல்லும், சீனாவுடனான நமது எல்லைகளை வரையறுக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட நாம் முடிவெடுத்தோம்.
  • எனினும், இந்தியாவுடனான சீனாவின் எல்லைப் பகுதிகளை வரையறுக்கும் இந்த எல்லைக் கோட்டை ஒருபோதும் வரையறுக்கவோ விவரிக்கவோ சீனா வேண்டுமென்றே முயலவில்லை.

ஒப்பந்தங்கள்

  • தெளிவாக இந்தியாவுக்கு உட்பட்டதாக இருக்கும் நிலப்பரப்பில் ஒவ்வொரு முறையும் சீனா ஊடுருவும்போது தாங்கள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவல் நிகழ்த்தவில்லை என்று அவர்கள் கூறுவதற்கான முகாந்திரத்தை 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தித் தந்தன.
  • நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுஎன்று 1993, 1996 ஒப்பந்தங்களில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சீனாவில் எல்லைக்குட்பட்ட பரப்பில் இருக்கிறது என்று சீனா கூறிக்கொள்கிறது.
  • மேலும், ‘நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுஎங்கே இருக்கிறது என்பதற்குத் தாங்கள் புதிதாக அளிக்கும் எந்தவொரு விளக்கத்தையும் இந்தியா மதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதில் சீனர்கள் ஒருபோதும் களைப்படைந்ததில்லை.
  • சீனர்களைப் பொறுத்தவரை எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகள் என்றால், அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
  • உண்மையில் நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுஎங்கே இருக்கிறது என்று சீனா எதேச்சாதிகாரமாகவும் ஒருதரப்பாகவும் முன்வைக்கும் உரிமைகோரலுக்கு இந்தியாவின் அடிபணிதல் என்பதே பேச்சுவார்த்தைகள் என்பதற்கு அவர்களின் அர்த்தம்.
  • இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையின் தீர்வுக்கான அரசியல் நெறிமுறைகள், வழிகாட்டும் நெறிமுறைகள்தொடர்பான ஒப்பந்தத்தைப் பிரதமர்கள் மன்மோகன் சிங்கும் வென் ஜியா பாவோவும் 2005-ல் செய்துகொண்டார்கள்.
  • இரண்டு பிரதமர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர்: எல்லையானது நன்கு வரையறுக்கப்பட்ட, எளிதில் அடையாளம் காணத்தக்க இயற்கையான புவியியல் அம்சங்களின் வழியே இருக்க வேண்டும், இந்த எல்லையானது இரு தரப்புகளாலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.
  •  எல்லையைப் பற்றிய தீர்வு காணும்போது இரு தரப்புகளும் எல்லைப் பகுதிகளில் குடியேறி, நிரந்தரமாகத் தங்கிவிட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • சீனா, தான் மதிப்பதாகக் கூறிக்கொள்ளும் நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இடங்களையும் வரம்புகளையும் தெளிவாக வரையறுக்க மறுக்கிறது.
  • வலுவான வரலாற்று அடிப்படையின்றி இந்திய நிலப்பரப்புகள் மீது எதேச்சாதிகாரமாக உரிமைகோருவதன் மூலம் இந்த எல்லைக் கோட்டின் குழப்பமான வரையறையைத் தனக்குச் சாதகமாக அது பயன்படுத்திக்கொள்கிறது. சிறுகச் சிறுக ஆக்கிரமித்துக்கொள்வதால் சலாமி நறுக்குதல்என்று இது சரியாக வர்ணிக்கப்படுகிறது.

நாம் தவறிய இடம்

  • எல்லை விவகாரத்தில் சீனாவுடனான நமது அணுகுமுறையின் ஒட்டுமொத்த அடித்தளமும் 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் சார்ந்தது.
  • தங்களை அந்த இரண்டு ஒப்பந்தங்களோடு பிணைத்துக்கொண்ட சீனா, இந்தியாவை ஏதும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. எது எல்லை என்பதைத் தெளிவாக வரையறுக்காமல் எல்லைப் பகுதியில் சமாதானமும் அமைதியும் ஏற்படுத்துவதைத் தனது நோக்கமாக சீனா குறுக்கிக்கொண்டுவிட்டது.
  • சீனாவின் ஒட்டுமொத்த தேசிய சக்திஅதிகரிப்பதையும் அதன் ஆக்கிரமிப்பு ஆசைகளையும் வைத்துப் பார்க்கும்போது, நாம் தவறிய இடம் இதுதான் என்பது தெரிகிறது.
  • இந்தியாவுடனான தனது மேற்கு எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற சீனாவின் விருப்பங்கள், அரசியல், வெளியுறவுத் துறை, பொருளாதாரம், கலாச்சாரம், ராணுவம், அணு ஆயுதங்கள் போன்றவற்றில் அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவு போன்றவை நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தங்கள் ஆகும்.
  • இந்தியாவை குறைந்த செலவில் கட்டுப்படுத்துவதற்கானசீனாவின் ஆயுதம் மட்டுமே பாகிஸ்தான். இந்தச் சூழலில் அமைதி, பரஸ்பர சமத்துவம் போன்றவை அடிப்படையில் சீனாவுடனான நீண்ட கால உறவு என்பது இன்னும் வெகு தொலைவில் உள்ள இலக்காகவே தோன்றுகிறது.

நன்றி: தி இந்து (25-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்