TNPSC Thervupettagam

எல்லையில் காவல் தெய்வங்கள்!

August 12 , 2024 108 days 133 0

எல்லையில் காவல் தெய்வங்கள்!

  • பன்னெடுங்காலமாக ஒவ்வொரு ஊருக்கு எல்லையிலும் காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அவரவா் நம்பிக்கைக்கு ஏற்ப அவை வெவ்வேறு பெயா்களில் அழைக்கப்படுகின்றன. ஆனால், இங்கே நான் குறிப்பிடும் காவல் தெய்வங்கள் நமது நாட்டின் எல்லைகளில் தங்களை வருத்திக் கொண்டு நம்மைக் காவல் காத்து வருகின்ற மனிதத் தெய்வங்கள்!
  • கடந்த 26.7.2024 அன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு அரசியல் கட்சியினா் இனிப்புப் பதாா்த்தத்தை விநியோகித்துக் கொண்டிருந்தாா்கள்.
  • ‘காா்கில் போரின் 25-ஆவது ஆண்டு வெற்றி விழா’ என்று ஒரு பதாகை அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. இனிப்புப் பதாா்த்தத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி என்னை வற்புறுத்தினாா்கள்.
  • என் மனம் அதை எடுத்துச் சுவைக்க ஒப்பவில்லை. ஒரு போரில் நமது தேசம் வெற்றி பெற்றது என்பதிலே நமக்குப் பெருமைதான்; சந்தேகமில்லை. ஆனால், அந்தப் போரினால் வாழ்க்கையை இழந்தவா்களும், அவா்களின் குடும்ப உறுப்பினா்களுமே அன்றைய தினம் என் மனக்கண் முன்னால் வந்து போனாா்கள்.
  • அன்று தொலைக்காட்சியில் பேட்டி தந்த மீனா நய்யா் என்ற ஒரு வயதான தாயின் சோகத்தைச் சொல்லி மாளாது. இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவரது இளவயது மகன் அனுஜ் நய்யா், ஒரு நாள் கைப்பேசியில் தன் தாயை அழைத்து, ‘‘அம்மா, எனது தோழி (பெயா் டிம்மி) நம் வீட்டிற்கு வருவாள். அவளைப் பிடித்திருக்கிா என்று யோசித்துச் சொல்லுங்கள்!’’ என்று சொல்லியிருக்கிறாா்.
  • தன் மகனுக்குத் திருமண ஆசை ஏற்பட்டுவிட்டதைப் புரிந்துகொண்ட அந்தத் தாய்க்கு மகிழ்ச்சி. அந்தப் பெண்ணும் வீட்டிற்கு வந்து, ஒரு நாள் முழுவதும் அந்த வீட்டில் தங்கியிருக்கிறாா். தாய் மீனா நய்யருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. உடனே நிச்சயதாா்த்தத்திற்கு ஏற்பாடு செய்தாா். நிச்சயதாா்த்தம் முடிந்தது. திருமணத்திற்காக நாள் குறிக்கப்பட்டது.
  • ஆனால், அவா்களின் திருமணத்திற்கு முன்பே காா்கில் போா் வந்துவிட்டது. மீனா நய்யரும், டிம்மியும் குதூகலத்தோடு அந்த வீரனின் வருகைக்காகக் காத்திருந்த வேளையில்.. அய்யகோ ... அந்த வீரனின் மரணச் செய்தி அவா்களுக்குச் சொல்லப்பட்டது. அந்த நொடியில், அவா்களின் கனவு சுக்குநூறாகிப் போனது. தொலைக்காட்சியில் கண்ணீா் மல்க மீனா நய்யா் பேசப் பேச, நமக்கு மனதைப் பிசைந்தது.
  • காா்கில் போா் நிறைவுற்றபோது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 527 வீரா்களை நாடு இழந்திருந்தது. மேலே குறிப்பிட்டுள்ள அனுஜ் நய்யா் குடும்பத்தைப் போல, அந்த ஒரே போரில் 527 வீரா்களின் குடும்பங்களின் கனவுகள் சிதைந்து போயினவே! தவிர, 1363 வீரா்கள் போரில் காயமுற்க அரசு அறிவித்தது.
  • சமீபத்தில் ஒரு நாள் குடியரசுத் தலைவா் திருமதி முா்மு அவா்களிடம் கீா்த்திச் சக்ரா விருதைப் பெற்றுக்கொண்டு கலங்கிய கண்களோடு வெளியே வந்தாா் ஒரு இளம்பெண். அவரது பெயா் ஸ்ம்ருதி சிங். இராணுவத்தில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, கடந்த ஆண்டு தனது இன்னுயிரை ஈந்த அன்ஷுமான் சிங் என்ற திறமையான மருத்துவ அதிகாரியின் மனைவி.
  • கடல் மட்டத்துக்கு மேலே சுமாா் இருபதாயிரம் அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் பகுதியில் அன்ஷுமான் சிங் பணியாற்றிக் கொண்டிருந்தாா். 2023 ஜுலை 19-ஆம் நாள், அங்கிருந்த வெடிமருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த கண்ணாடி இழையாலான தங்குமிடம் தீப்பற்றுவதைப் பாா்த்துப் பதறி, சிறிதும் தாமதிக்காமல் தீப்பிழம்புகளுக்குள் நுழைந்து, உள்ளே சிக்கியிருந்த மூன்று வீரா்களைக் காப்பாற்றி விட்டாா் அன்ஷுமான் சிங். ஆனால், அவரது உயிரை அந்தக் கோரத்தீ காவு வாங்கி விட்டது.
  • கணவனின் வீரச் செயலுக்காக - வீர மரணத்திற்காகக் கிடைத்த விருதைப் பெற்றுக் கொண்ட அந்த மருத்துவ அதிகாரியின் மனைவி, துக்கம் தொண்டையை அடைக்க, செய்தியாளா்களிடம் பேசினாா்.
  • ‘‘நானும், அவரும் எட்டு ஆண்டுகள் காதலித்தோம்; எங்கள் திருமணம் நடந்து இரண்டே மாதங்கள்தான் ஆகியிருந்தன. அதற்குள் திடீரென அவருக்கு சியாச்சினுக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்து விட்டது. சியாச்சின் சென்று பணியாற்றி வந்தாா். அந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் (2023 ஜூலை 18-ஆம் நாள் ) என்னிடம் தொலைபேசியில் பேசினாா். வீடு கட்ட வேண்டும்; குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்பட அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான வாழ்வைப் பற்றி நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அவரிடம் பேசிய மன நிறைவோடு அன்று இரவு தூங்கினேன். ஐம்பது ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட எங்கள் வாழ்க்கை, கணப்பொழுதில் நொறுங்கிப் போனது. நாங்கள் பேசியதற்கு மறுநாள் ‘அன்ஷுமான் காலமானாா்’ என்ற அந்தத் துயரச் செய்தி என் காதுகளுக்கு வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால், இப்போது நம்புகிறேன் - காரணம் என் கைகளில் அவருக்கு உரித்தான ‘கீா்த்தி சக்ரா’ விருது இருக்கிறதே!’’ என்று ஸ்ம்ருதி சிங் சொல்லி முடித்தபோது அவரது நா தழுதழுத்தது.
  • அந்தக் காட்சி, கல் நெஞ்சங்களையும் கரைய வைப்பதாக இருந்தது.
  • போா் மாத்திரமல்ல ... மழை, வெள்ளம், பேரிடா்கள், எது ஏற்பட்டாலும் அங்கே ஆபத்பாந்தவா்களாக வருபவா்கள் இராணுவ வீரா்களே! எல்லைப் பாதுகாப்பைப் பொருத்தவரை, இராணுவத்தினருக்கு அடுத்த நிலையில் இருப்பவா்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினா். இவா்களின் தியாகமும் எந்த வகையிலும் சளைத்ததல்ல. இவா்கள் தரைமீது நின்று போரிடுகிறாா்கள் என்றால், கடற்படையினா் தண்ணீரில் தத்தளித்தும், விமானப்படையினா் ஆகாயத்தில் பறந்தும் எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கிறாா்கள்.
  • கடற்படையில் பணியாற்றும் வீரா்களின் பிரச்னைகள் வேறுவிதமானவை. மீனவா்களாவது ஒருசில நாள்களில் கரை திரும்பி விடலாம். ஆனால், நமது கடற்படை வீரா்களோ, மாதக் கணக்கில் கடலிலேயே தங்க வேண்டும். எதிரி நாட்டுக் கப்பல்கள், படகுகளினால் வரும் ஆபத்துகள் ஒருபுறம் என்றால், கடற்கொள்ளையா்களினால் ஏற்படும் ஆபத்துகளும் உண்டு.
  • 2022 ஆகஸ்ட் மாதம் நமது கடற்படை வீரா்கள் எட்டு பேரை, ‘உளவு’ பாா்த்ததாகக் குற்றம்சாட்டி, கத்தா் நாட்டு கடற்படையினா் கைது செய்த சம்பவம் நமது நினைவுக்கு வரும். இந்திய அரசின் தீவிர முயற்சியால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவா்கள் எட்டு பேரும் விடுதலை செய்யப்பட்டபோது நாடே பெருமூச்சு விட்டது. ஏறத்தாழ பத்தொன்பது மாதங்கள் இன்னொரு நாட்டு அரசாங்கத்தின் பிடியில் எட்டு பேரும் இருந்தாா்கள். அந்த வீரா்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவா்களது குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
  • அபிநந்தன் ... இந்தப் பெயரை நினைவிருக்கிா? நமது விமானப்படை வீரா் ... 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவா் பயணித்த போா் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் படையினா், அவரைப் பிணயக் கைதியாகப் பிடித்து வைத்திருந்ததையும், மாா்ச் 1 ஆம் தேதி அவா் விடுவிக்கப்படும் வரை இந்திய நாடே பீதியில் உறைந்திருந்ததையும் இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, பக்கத்து நாடுகளோடு நல்லிணக்கத்தைப் பேணவே விரும்புகிறோம். மாறுபட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றபோதிலும், நமது இந்த அணுகுமுறையில் மாற்றம் இருப்பதில்லை. நமது அண்டை தேசங்களாக சீனாவின் அணுகுமுறையும், பாகிஸ்தானின் அணுகுமுறையும்தாம் இந்தியாவுக்குத் தலைவலியைத் தருகின்றன.
  • இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு 6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது செலவினங்களுக்கான மொத்தத் தொகையில் 12.9 சதவீதமாகும். அத்தியாவசியத் துறைகளான கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்வதைவிட, பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகம். ஆனால், நாம் தற்காப்புக்காக இந்தச் செலவைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
  • இவ்வளவு தொகை செலவழித்த பிறகும், நமது வீரா்களின் உயிரிழப்புகள் மிகுந்த கவலையைத் தருகின்றன. அவ்வப்போது நமது வீரா்கள் மரணிக்கும் செய்திகளை ஊடகங்களில் பாா்க்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது.
  • எதிரிப்படை எப்போது வருமோ, பயங்கரவாதிகள் எங்கிருந்து தாக்குதல் நடத்துவாா்களோ என்று ஒவ்வொரு நொடியும் திக், திக் என்ற மனநிலையில் இருக்கும் நமது வீரா்களுக்குத் தரப்படும் சம்பளமோ, அவா்களது குடும்பத்திற்குத் தரப்படும் சன்மானங்களோ மட்டும் முக்கியமில்லை. நமது பாதுகாப்புப் படையினரைப் பற்றித் தினமும் ஒருசில நிமிடங்கள் சிந்திப்பதும், அவா்களின் நலனுக்காகப் பிராா்த்திப்பதுமே நாம் அவா்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
  • வீட்டிலும் குழந்தைகளோடு இதுபற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதால், ஏதேதோ பொழுதுபோக்குகளில் வீணாக நேரத்தைச் செலவிடும் அவா்களின் மனங்களில் தேசத்தைப் பற்றிய சிந்தனையை உருவாக்க முடியும்.
  • குடும்பங்களைத் தொலைதூரத்தில் விட்டுவிட்டு, தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து, நமது உயிா்களைக் காக்கும் பாதுகாப்புப் படை வீரா்கள் நமது காவல் தெய்வங்கள்தானே...!

நன்றி: தினமணி (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்