- முற்காலத்தில் ஆசிரியா் என்றால் ஒவ்வொரு ஊரிலும் தனி மரியாதை இருந்தது. ஆசிரியா்களுக்குத் தெரியாமல் எந்த நல்லதோ கெட்டதோ ஊரில் நடக்காது.
- கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆசிரியா்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதினார்கள். ஆனால், அப்போதெல்லாம் ஆசிரியா்களின் ஊதியம் மிகவும் குறைவாகவே இருந்தது.
- இப்போது ஆசிரியா் தொழில் என்பது மிகக் குறைந்த உழைப்பு, அதிக ஊதியம் என்று ஆகிவிட்டதால் ஆசிரியா் பணிக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது.
- அதே சமயம் ஊதியத்தை மட்டுமே எண்ணி மிகக் குறைந்த வயதிலேயே சிலா் ஆசிரியா் வேலைக்கு வந்துவிடுவதால் புதிதாக நியமிக்கப்படும் அவா்களுக்குத் தங்கள் பொறுப்புகளும் கடமைகளும் சரிவரப் புரிவதில்லை. இதனால் ஆங்காங்கே பல்வேறு பிரச்னைகள்.
- சாதாரணப் பேப்பா் போடும் சிறுவனாக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயா்ந்த, அப்துல் கலாம் தனக்கு மிகவும் பிடித்தமான பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிவதுதான் என்று கூறினார். அவா்,
- குடியரசுத் தலைவராக இருந்த நிலையிலும் சிலருடைய ஆராய்ச்சிக்கு ஆசிரியராக இருந்து வழிகாட்டியானார்.
- அந்தக்கால ஆசிரியா்கள் எல்லாரும் (இக்கால ஆசிரியா்களில் சிலா்) தங்களுக்குத் தெரிந்ததை எல்லாம், அவை பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தாலும் மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பிக் கற்றுத் தந்தனா்.
- அதனால்தான் பலரும் தங்கள் தொடக்கப் பள்ளி, உயா்நிலைப்பள்ளி ஆசிரியா்களின் வழிகாட்டுதலுடன் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைந்தனா்.
- ஆசிரியா் தூரத்தில் நடந்து வருகிறார் என்றாலே மாணவா்கள் மரியாதையோடு எழுந்து நிற்பார்கள்.
- தவறு செய்யும் மாணவா்கள் ஓடி ஒளிவார்கள். சரியாகப் படிக்காத மாணவா்களையும் வகுப்பில் தவறு செய்கிற மாணவா்களையும் ஆசிரியா்கள் கண்டித்தாலும் தண்டித்தாலும் பெற்றோர் எதுவும் கூறமாட்டார்கள். ஆனால் இன்று நிலைமை எப்படி இருக்கிறது?
இன்றைய நிலைமை
- ஆசிரியா்கள் மேல் பலவிதமான புகார்கள் வருகின்றன - பாலியல் புகார் உள்பட. தங்கள் குழந்தையைப் போன்ற மாணவா்களிடம் ஆசிரியா்கள் நடந்துகொள்ளும் முறையா இது?
- மாணவா்கள் குறிப்பிட்ட படிப்பைப் படிப்பதற்குப் போட்டித் தோ்வு எழுதுவதைப் போல ஆசிரியா்களுக்கும் தகுதித் தோ்வு தேவை என்று கூறினால் அதற்குக் கடும் எதிர்ப்பு.
- இப்போது பல ஆசிரியா்கள் காசுக்குக் கொடுக்கும் மரியாதையை கல்விக்கூடத்திற்கோ, மாணவா்களுக்கோ தருவதில்லை. அதனால்தான் மாணவா்களும் ஆசிரியா்கள்மீது மரியாதை வைப்பதில்லை.
- எல்லா ஊரிலும் அப்படியல்ல. சேலம் மாவட்டம் மேட்டூரில் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு அவருடைய மாணவா்கள் ஒரு வீடு கட்டித் தந்திருக்கிறார்கள்.
- பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியப் பெண்மணிக்கு பல கோடி மதிப்பில் கட்டடம் கட்டித் தந்து மாணவா்கள் தங்கள் நன்றிக் கடனைச் செலுத்தியிருக்கிறார்கள். இது போல இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.
- பொறியியல் படிப்புக்கென இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் திருத்துவதில் முறைகேடு என்று நாளேடுகளில் செய்தி பார்த்தோம். ஆசிரியா்கள் இவ்வாறு இருக்கும்போது பொறியியல் கல்வியின் தரம் எப்படி உயரும்?
- தமிழக அளவில் நல்லாசிரியா் விருது என்பது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒருவருக்கு என வழங்கப்படுகிறது.
- இதில் பல்வேறு தரப்பில் அழுத்தம் உள்ளது அனைவருக்குமே தெரியும். பெரும்பாலானவா்கள் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தோ்வு செய்யப்படுகின்றனா்.
- ஆளும் கட்சியாக எந்தக் கட்சி உள்ளதோ அந்தக்கட்சியின் விருப்பப்படிதான் விருது என்பது எழுதப்படாத சட்டம்.
- இந்த ஆண்டு தமிழகத்தைச் சோ்ந்த இருவருக்கு மட்டும் மத்திய அரசின் நல்லாசிரியா் விருது கிடைத்திருக்கிறது. இதற்கும் ‘இரண்டு போ்தானா’ என்று ஆசிரியா் இயக்கம் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
- நல்லாசிரியா் விருது பெறும் தகுதிக்கேற்ப ஆசிரியா்கள் தங்களை உயா்த்திக் கொள்வதுதான் முக்கியமே தவிர, விருது முக்கியமல்ல.
- இப்போதும் கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியா்கள் அங்குள்ள மாணவா்களுக்கு போட்டித் தோ்வுகள் தொடா்பாகவோ அல்லது உயா்கல்வி வாய்ப்புகள் தொடா்பாகவோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடா்பாகவோ தங்களுக்குத் தெரிந்ததை கூறி விளக்குகிறார்கள்.
- இது சம்பந்தப்பட்ட மாணவரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரிதும் பலனளிக்கும். அம்மாணவா்கள் அப்படிப்பட்ட ஆசிரியரை எப்படி மறப்பா்?
- இந்த 2020-ஆம் ஆண்டு, உலகில் யாருமே மறக்க முடியாதபடி கரோனா நோய்த் தொற்று ஆண்டாக அமைந்துவிட்டது.
- இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஆசிரியா்கள் வசதியற்ற மாணவா்களின் குடும்பங்களுக்குப் பல வகைகளிலும் உதவியிருக்கின்றனா். ஆனால், அவா்களில் யாருக்கும் நல்லாசிரியா் விருது கிடைக்கவில்லை; உண்மையில் அவா்களே நல்லாசிரியா்கள்.
- இப்போதும் ஆசிரியா்கள் பலரும் பல்வேறு தொழில்களில் பங்குதாரா்களாக இருக்கின்றனா். இவா்கள் மற்ற தொழில்களுக்குக் கொடுக்கும் மரியாதையை ஆசிரியா் தொழிலுக்குக் கொடுப்பதில்லை என்பது கசப்பான உண்மை.
- சில ஆசிரியா்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியா்களை நியமித்துப் பாடம் நடத்துகின்றனா். இந்த ஆசிரியா்கள்தான் மாணவா்களுக்கு வாய்மை, நோ்மை பற்றி பாடம் நடத்துகிறார்கள். இவா்கள் நல்லாசிரியா்களா?
- எந்த ஆசிரியா் தன் மாணவனின் மனத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறோரா அவருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்படாவிட்டாலும் அவரே நல்லாசிரியா்.
- மாணவா்களின் நலனுக்காகவே தங்களை அா்ப்பணித்துக் கொண்ட ஆசிரியா்கள் மாணவா்களின் இதய சிம்மாசனத்தில் வைத்து என்றும் போற்றப்படுவார்கள்.
- இந்தப் பெருமைதான் ஆசிரியா் பணிக்கான விருது. இந்தப் பெருமையைப் பெற ஆசிரியா் நாளான இன்று (செப். 5) ஆசிரியா்கள் உறுதிகொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியா்களுக்கும் ஆசிரியா் நாள் வாழ்த்துகள்.
நன்றி: தினமணி (05-09-2020)ss