TNPSC Thervupettagam

எழுத்தறிவு இலக்கை எட்டுவது எப்போது

September 8 , 2023 491 days 283 0
  • உலக அளவில், இந்தியா ஒரு முதன்மைக் கல்வி மையமாக நீண்ட காலமாக விளங்கி வருகிறது. பொ.ஆ. (கி.பி.) 5-6ஆம் நூற்றாண்டிலேயே புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியுள்ளது.
  • இந்திய மண்ணில் உருவான அரசியல் அதிகாரங்களுக்கு ஏற்ப குருகுலக் கல்வி, பெளத்தக் கல்வி, அரபிக் கல்வி, ஐரோப்பியக் கல்வி எனப் பல கல்வி முறைகள் வேரூன்றி வளர்ந்துள்ளன. தற்போது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிஉள்ள சந்திரயான் 3, இந்தியாவின் நவீன அறிவியல் சார்ந்த கல்வி வளர்ச்சியை உலகுக்குப் பறைசாற்றியுள்ளது. இப்படி, இந்தியக் கல்வியின் பன்முகக் கூறுகளையும் பெருமிதங்களையும் பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளன.

கடமையும் பொறுப்பும்

  • மற்றொரு புறம், 21ஆம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெறாத மக்கள் அதிகமுள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் அனைவருக்கும் சம தரத்திலான கல்வி என்பது 75 ஆண்டு காலமாக அடைய முடியாத இலக்காக உள்ளது. நாட்டு மக்களில் இன்னும் 27% அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் பெறவில்லை; 35% பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் வாழ்கின்றனர்.
  • உலக எழுத்தறிவு நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், எழுத்தறிவு இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வெற்றிக்கான வழிகள் குறித்தும் பெரும் அக்கறையோடு உரையாட வேண்டியுள்ளது. உலகிலேயே இந்தியாவில் அதிகமான குழந்தைகள் வாழ்கிறார்கள். எனவேதான் எழுத்தறிவுக் கடமையும் பொறுப்பும் நமக்குக் கூடுதலாக உள்ளது.
  • பள்ளிக் கல்வியில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். தொடக்கக் கல்வியை முடிக்கும் குழந்தைகளில் சரிபாதியினர் வயதுக்குரிய அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவுத் திறன்களைப் பெற முடிவதில்லை என்பதைக் கல்வித் தர மதிப்பீட்டு ஆய்வுகள் உணர்த்துகின்றன. அரசால் நடத்தப்படும் இலவசப் பள்ளிகளை, வசதியுடைய பெற்றோர்கள் கனவிலும் நினைப்பதில்லை. தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்தான மிகுந்த அக்கறை கொண்டுள்ள பெற்றோர்கள் எப்பாடுபட்டேனும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.
  • சுமார் 9 கோடி இந்தியக் குழந்தைகள் கட்டணம் செலுத்தியே கல்வி பெறுகிறார்கள். இந்தியா உலகின் மிகப்பெரிய கல்விச் சந்தையாக மாறியுள்ளது. கல்விக்கென்று கடவுளை வணங்கும் நாட்டில், கல்வி ஒரு வியாபாரமாக மாறியிருப்பது வேதனைக்குரியது. 2009இல், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அதற்குப் பிறகும்கூட மழலையர் வகுப்பிலிருந்தே கல்வி வணிகம் தடையின்றி நடைபெற்றுவருகிறது.

தேவை நிதி ஒதுக்கீடு

  • தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், அது இன்று வரை கவனத்தில் கொள்ளப் படவில்லை. இந்தியாவில் 42% குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ந்துள்ளதாக 2019–2020 கல்வி ஆண்டின் UDISE புள்ளிவிவரம் கூறுகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களிலும் ஆங்கிலவழிக் கல்வி விகிதம் அதிகரித்துவருகிறது.
  • தனியார் ஆங்கிலவழிக் கல்வி விரிவாக்கத்தினால் இந்திய மொழிகளின் தேய்வும் தொடர்ந்துவருகிறது. 112 நாடுகளுக்கான ஆங்கிலப் புலமைக் குறியீட்டில் இந்தியா 48ஆவது இடத்தில் உள்ளது. தாய்மொழியில் எழுத்தறிவு பெறுவதை மதிப்பற்றதாகக் கருதும் மனப்பான்மை படிப்பறிவு பெற்ற மக்களிடம் மேலோங்கி வருவது கவலை அளிக்கிறது.
  • 2030க்குள் உலக நாடுகள் அனைத்தும் அடைய வேண்டிய 17 நிலைத்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) ஐ.நா. அவை 2015ஆம் ஆண்டு அறிவித்தது. அவற்றில் கல்விக்கான இலக்கும் அடங்கியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சம தரத்திலான கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றலை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என்னும் இலக்கை நாமும் அடைந்தே ஆக வேண்டும். ஆனால், இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை. தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல் என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான வரிச் சலுகைகள் கடந்த பத்தாண்டுகளில் பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், கல்வி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் இதேபோல் பெரிதாக அதிகரிக்கப்படவில்லை.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6% கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என 1966இல் டாக்டர் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைத்தது. தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந்துரைகளிலும் இது இடம்பெற்றுள்ளது. ஆனாலும் நமது நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை 2022–2023, கல்விக்கான மத்திய-மாநில அரசுகளின் மொத்த நிதி ஒதுக்கீடு 2.9% அளவிலேயே உள்ளதாகக் கூறுகிறது. போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் அனைவருக்கும் எழுத்தறிவு எனும் இலக்கை அடைவது எக்காலத்திலும் சாத்தியமில்லை.

தாய்மொழிக் கல்வி

  • ‘கடையரே கல்லாதவர்’ என்ற தமிழ்மறைக் கூற்று என்றைக்கும் பொருந்தக்கூடியது. கடையர்களைக் கடைத்தேற்றுவதற்குக் கல்வியைத் தவிர வேறு நல்வழி இல்லை. கல்வி அளிப்பதன் நோக்கம் இத்தோடு மட்டுமே முடிவதில்லை. சமூகக் கூட்டுணர்வு, சேர்த்து வாழ்தல் - உழைத்தல், அறிவைப் பகிர்ந்துகொள்ளுதல், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளுதல் போன்றவையும் கல்விச் செயல்பாட்டின் முதன்மைக் கூறுகளே.
  • தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் அடிப்படை எழுத்தறிவு-எண்ணறிவு சார்ந்த கல்வியே குழந்தைகளின் எதிர்காலக் கற்றல், அறிவாற்றல் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கிறது. குழந்தைகள் தாய்மொழியில் கற்கும்போது மட்டுமே எழுத்தறிவு இயல்பாக வளம்பெறும். இத்தகைய அம்சங்களைக் கருத்தில்கொண்டு எழுத்தறிவுத் திட்டங்கள் வடிவமைக்கப் பட வேண்டும்.
  • செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு நாளாக 1967முதல் அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. எழுத்தறிவு நாள் என்பதை மனித உரிமைகளையும் மனிதக் கண்ணியத்தையும் கடைப்பிடிக்கும் நாளாகக் கருத வேண்டும் என்று ஐ.நா. அவை வலியுறுத்தியுள்ளது. குழந்தைகளிடம் கட்டணம் ஏதும் பெறாமல் முழுமையான எழுத்தறிவு கொடுப்பதுதான் ஒரு குழந்தையின் கண்ணியத்தை மதிப்பதாக அமையும். எழுத்தறிவு பெறுவது மானுட அடிப்படை உரிமை என்பதன் பொருளும் இதுதான்.
  • எழுத்தறிவு கொடுப்பது கருணையல்ல. மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் அரசுகள் செய்ய வேண்டிய அடிப்படைக் கடமை. இத்தகைய ஜனநாயக உறுதிப்பாடும் அரசியல் அறமும் மிக அவசியமான ஒன்றாகும். கல்வியில் முன்னேறிய நாடுகளில் குழந்தைகளின் கண்ணியத்துக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கப்படுகிறது. உலகிலேயே அதிகமான குழந்தைகள் வாழும் நாடான இந்தியா, எழுத்தறிவுக் கடமையை ஆற்றுவதில் உலகின் முன்னோடியாக மாற வேண்டும். அதற்கான அடிப்படைகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
  • (செப்டம்பர் 8: சர்வதேச எழுத்தறிவு நாள்)

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்