எழுத்து வீரர் கல்கி!
- ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரபலமான நாவலுக்காக இன்றைய இளைய தலைமுறைவரை பரவலாக அறியப்பட்டிருப்பவர் கல்கி என்று அறியப்படுகிற ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி. அவரது ஆளுமையையும் பங்களிப்பையும் இந்த ஒற்றைப் படைப்பில் ஒருபோதும் அடக்கிவிட முடியாது.
- எண்பதுகளில் என்னுடைய ஆய்வுக்காக ‘ஆனந்த விகட’னின் பழைய இதழ்களில் கல்கியின் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. வாசிக்க வாசிக்க என்னுள் எழுந்த உணர்வுகளை என்னாலேயே விவரிக்க முடியாது. அவருடைய எழுத்தின் வீச்சு எனக்கு முற்றிலும் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், அதிலிருந்த நேர்மை ஒரு தீக்கங்குபோல் என் சிந்தனையை உரசிக்கொண்டு போனது.
- ‘ஆனந்த விகட’னைத் தொடர்ந்து பழைய ‘கல்கி’ இதழ்களையும் வாசிக்க வேண்டியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் ‘கல்கி’ ராஜேந்திரன் வீட்டில் பழைய ‘கல்கி’ இதழ்களைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.
குடும்பஸ்தராக...
- ‘கல்கி’ ராஜேந்திரன் வீட்டுக்குப் போனபோது என் பாட்டியின் வயதை ஒத்த ருக்மிணி கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தேன். அப்போது கல்கி இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. கணவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அருகிலிருந்து, தன் செயல்களைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அவருக்குப் பிடித்தமானதைச் செய்துகொண்டிருந்தார் ருக்மிணி கிருஷ்ணமூர்த்தி.
- அவரது பொழுது கணவருடன்தான் தினமும் விடிந்தது. அந்த முதிர்ந்த வயதிலும் தானே வீட்டுவாசலில் கோலம் போடுவார். “கோலம் அவருக்கு மிகவும் பிடிக்கும். நான் கோலம் போட்டால் ஒரு கணம் நின்று ரசித்துவிட்டுப் போவார்” என்றார். தோட்டத்துப் பூக்களைத் தானே பறித்துச் சரம் தொடுத்து ஒளிப்படத்தில் இருக்கும் கணவருக்கு அணிவிப்பார்.
- “உங்களிடம் அவர் மிகவும் அன்பாக இருந்திருக்க வேண்டும், இல்லையா?” என்று கேட்டேன். “அன்பு மட்டுமில்லை... மிகுந்த மரியாதை கொடுத்தார். அவருடன் வாழ்ந்த காலம் என் வாழ்வின் பொற்காலம்” என்றார் ருக்மிணி. எங்கே, எந்த ஊரில் இருந்தாலும், எவ்வளவு வேலை இருந்தாலும் குடும்பத்தாருடன் ஏதோ ஓர் உரையாடலில் இருந்திருக்கிறார் கல்கி என்பது, மனைவிக்கும் மகளுக்கும் அவர் எழுதிக் குவித்த கடிதங்களிலிருந்து புரிகிறது. நமது சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து ஆழ்ந்து சிந்தித்து, அவர்களின் மேம்பாட்டை ஒரு லட்சியமாகவே கொண்டிருந்த ஒரு மனிதர் வேறு எப்படி இருந்திருக்க முடியும்?
பத்திரிகையாளராக...
- அந்தக் காலத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. நேரடி அனுபவத்துக்காகப் பல இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ரயில்களின் எண்ணிக்கை குறைவு. மேலும், அவை நத்தைபோல் ஊர்ந்து போகும். தங்குமிடத்திலும் வசதிகளை எதிர்பார்க்க முடியாது.
- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடும் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று நிகழ்வுகளை அப்படியே விவரிப்பார் கல்கி. ஒளிப்படங்கள்கூட அரிதாக இருந்த காலத்தில், அவருடைய எழுத்தின் வலிமை மாநாட்டுக்கு நேரில் போன அனுபவத்தை வாசிப்பவர்களுக்குக் கொடுத்துவிடும்.
தேச நலன்:
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு மூன்று முறை சிறை சென்றவர் கல்கி. உயர்ந்த கல்வியைப் பெற்றுப் பணிவாழ்வில் சிறப்புற விளங்கிவந்த நிலையில், அவர் சிறை சென்றார். சிறை அனுபவத்தால் அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. சிறு வயதிலிருந்தே நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் உடையவர் கல்கி. தன்னையும் பிறரையும் வேறுபடுத்திக் காட்டும் இந்தப் புற அடையாளங்களைச் சிறைவாசத்துக்குப் பிறகு தவிர்த்துவிட்டார்.
- ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பார்த்தபோது அதிலும்கூட அவருடைய காந்திய சிந்தனைகள் பளிச்சிட்டதாக உணர்ந்தேன். புத்த விஹாரத்தை மதித்துக் காக்கும்படி கைகூப்பி வேண்டிக்கொள்ளும் அருள்மொழிவர்மனும், நாட்டைத் துண்டாடக் கூடாது என்று ஆவேசமாகப் பேசிய ஆதித்த கரிகாலனும் வெறும் சோழர் கால அரசியலை மட்டும் பேசவில்லை.
திராவிடம் குறித்த புரிதல்:
- தேச நலனையும், காந்திய விழுமியங்களையும் வலிமையாக முன்வைத்த கல்கி, தமிழ்நாட்டில் அப்போது செழித்து வளர்ந்துகொண்டிருந்த திராவிட இயக்கத்தையும் கூர்ந்து கவனித்தார். தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும் கல்கியின் அறிவாற்றலும் பரந்த சிந்தனையும் திராவிட சித்தாந்தத்தைச் சரியான கோணத்தில் புரிந்துகொண்டு, பிறருக்கும் புரியவைத்தன. இதன் மூலம், அவருடைய எழுத்தின் ஆற்றலுக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்ந்துகொண்டது.
தீண்டாமைக்கு எதிரான யுத்தம்:
- ஆரம்ப காலத்திலிருந்தே சாதி வேற்றுமைகள் குறித்துத் தனது கருத்துகளை வலிமையாகப் பதிவுசெய்திருக்கிறார் கல்கி. முக்கியமாக, தீண்டாமைக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தியிருக்கிறார். அதற்கான கடும் எதிர்ப்பையும் சந்தித்திருக்கிறார்.
- “உயர் ஜாதிக்காரர்கள் தங்கள் பழைய பெருமையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, இனிமேலும் பிடிவாதமாக இருப்பதில் அர்த்தமில்லை. விரைவில் ஜனநாயகம் மலரத்தான் போகிறது. தலைமைப் பொறுப்பில் ஜாதி வித்தியாசமின்றி எவர் வேண்டுமானாலும் ஆட்சிப் பொறுப்புக்கும் அதிகாரப் பதவிகளுக்கும் வரத்தான் போகிறார்கள். ஆகவே, ஜாதி இந்துக்கள் தாங்கள்தான் உயர்வானவர்கள் என்ற எண்ணத்தை இப்போதே கைவிடுவது நல்லது” என்று நயமாக எடுத்துரைக்கிறார்.
- பிறர் உணர்வுகளைப் புண்படுத்தாமலேயே கூர்மையான கருத்துகளை முன்வைக்க, அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வு அவருக்குக் கைகொடுத்தது. கசப்பும் துவேஷமும் தவிர்த்த ஒரு நடுநிலைவாதியாகவே அவர் தொடர்ந்து இயங்கினார். அவர் நடத்திய சமூக அறப்போருக்கு இப்போதும் தேவை இருக்கிறது. சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு மாமனிதர் கல்கி.
- செப்டம்பர் 9 - எழுத்தாளர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் 125ஆவது பிறந்தநாள்
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 09 – 2024)