TNPSC Thervupettagam

எழுத்துகளும் விருதுகளும்

December 29 , 2023 359 days 326 0
  • இலக்கிய உலகில் அங்கீகாரம் வேண்டியிருப்பது இன்று நேற்றல்ல. சங்க காலம் முதலே ஆரம்பித்தது. ‘இரவலர் புரவலை நீயும் அல்லை!’ எனச் சங்க கவிஞர் பெருஞ்சித்திரனார், அரசன் வெளிமானை நோக்கிப் பாடுகிறார்.
  • பரிசில் பெறுவது முந்தைய காலம். விருது பெறுவது இந்தக் காலம்.
  • விருதோடு இணைந்து பிறந்த ஒன்றும் உள்ளது. அது, சர்ச்சை. பிரிக்க முடியாதது என்கிற பட்டியலில் சேர்க்க வேண்டியவை விருதும் சர்ச்சையும்.
  • விருது எனக் கட்டுரையைத் தொடங்கியபோதே நீங்கள் கணித்திருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்பட்ட உயரிய விருதுகளை ஒரு பருந்து கண்ணோட்டத்தில் பார்ப்போம். (சர்ச்சைகள் பக்கம் போக வேண்டாம்!)

சாகித்திய அகாதமி விருது

  • 1954 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது 24 மொழிகளில் அளிக்கப்பட்டு வருகிறது.
  • இந்தாண்டுக்கான தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் தேவிபாரதிக்கு அறிவிக்கப்பட்டது. (அறிவிப்பு வெளியாகும் முன்னரே அவருக்குத்தான் விருது என்கிற செய்தி பரவி பேசுபொருளானது தனிக்கதை!)
  • நீர்வழிப்படூஉம்நாவலுக்காக விருது பெற்ற தேவிபாரதி என்று அறியப்படுகிற .ராஜசேகரன், 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவர்.
  • நிழலின் தனிமை’,  ‘நட்ராஜ் மகராஜ்உள்ளிட்ட நாவல்களும் காந்தியின் இறுதி நாளை மையமிட்ட சிறுகதையான  ‘பிறகொரு இரவுஉள்ளிட்ட கதைகளும் அவரைத் தமிழ் வாசகப் பரப்பில் கவனத்துக்குரியவராக மாற்றியுள்ளது.

ஜேசிபி விருது

  • இந்திய எழுத்தாளர்களின் நேரடி புனைவு அல்லது அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட புனைவு நூலுக்கு வழங்கப்பட்டு வரும் ஜேசிபி நிறுவனத்தின் இந்த விருது 2018-ல் தொடங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டுக்கான ஜேசிபி விருது தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின்ஆளண்டாப் பட்சிநாவலின் மொழிபெயர்ப்பானஃபயர் பேர்ட்நூலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதினைப் பெறும் முதல் தமிழ்ப் படைப்பு என்கிற பெருமையும்  ‘ஆளண்டாப்பட்சிநாவலுக்கு உண்டு. இதற்கான விருது தொகை ரூ.25 லட்சம். மொழிபெயர்ப்பாளருக்குக் கூடுதலாக ரூ.10 லட்சம் ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும்.
  • இந்த விருதினை முந்தைய வருடங்களில் மலையாள எழுத்தாளர்கள் பென் யாமின், எஸ்.ஹரீஷ், ஜெயஸ்ரீ களத்தில் உள்ளிட்டோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது

  • தமிழ் எழுத்தாளர் சி.எஸ். லக்ஷ்மி அவர்களுக்கு, டாடா வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது இந்தாண்டு அளிக்கப்பட்டது. சி.எஸ். லக்ஷ்மி என்றால் தமிழ் வாசகர்களுக்குத் தெரியாது. எழுத்தாளர் அம்பை என்றால் புரிந்துவிடும்.
  • அம்பை எழுதியசிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவைசிறுகதை தொகுப்புக்காக 2021-ல் சாகித்திய அகாதமி விருது அளிக்கப்பட்டது.
  • 50 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தில் பணியாற்றும் அம்பை, இந்த விருதுக்கு முழு தகுதியுடையவர் என அவரது வாசகர்களால் புகழப்பட்டார்.  ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’,  ‘வீட்டின் மூலையில் சமையலறைஉள்ளிட்ட கவனிக்கத்தக்க படைப்புகளை எழுதியவர், அம்பை.
  • மஹாஸ்வேதா தேவி, எம்.டி.வாசுதேவன் நாயர், கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கு முந்தைய ஆண்டுகளில் இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி சம்மான் விருது

  • இந்தியாவின் 22 மொழிகளில் சிறந்த உரைநடை மற்றும் கவிதைக்கான விருதான சரஸ்வதி சம்மான் விருது, இந்தாண்டு தமிழ் எழுத்தாளர் எஸ்.சிவசங்கரியின் சூர்ய வம்சம் என்கிற தன்வரலாற்று நூலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள் என இவரது எழுத்து பங்களிப்பு மிகப் பெரியது.

ராம்நாத் கோயங்கா விருது

  • தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்குழுமத்தின் சார்பில் அளிக்கப்படும் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது, தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு இந்தாண்டு அளிக்கப்பட்டது. (அதிக விருதுகள் பெறும் எழுத்தாளர்!)
  • விருதும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் அவரது இலக்கிய பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையில் அளிக்கப்பட்டது.
  • எழுத்தாளர்கள் அனிருத் கனிஷெட்டி, தேவிகா ரெகே ஆகியோருக்கும் இந்தாண்டு விருதும் தலா ரூ.1 லட்சம் தொகையும் அளிக்கப்பட்டது.

கி.ரா. விருது

  • கோவையின் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றான விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் மற்றும் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பெயரிலான கி.ரா. விருது இந்தாண்டு எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
  • விருதுடன் பரிசுத் தொகை ரூ.5 லட்சம் படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
  • எஸ்.வி.ஆர் என்று அறியப்படும் எஸ்.வி. ராஜதுரை, மார்க்ஸியம், பெரியாரியம் சார்ந்த நூல்களை தொகுத்தும் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ளார். எழுத்து மட்டுமின்றி சமூக மாற்றங்களுக்கான செயல்களையும் முன்னெடுத்துள்ளார்.

விஷ்ணுபுரம் விருது

  • விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் அளிக்கப்படும் இந்த விருது 2010 முதல் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்தாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது, எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான கேடயமும் ரூ.5 லட்சம் விருதுத் தொகையும் சேர்ந்தது இந்த விருது.
  • யுவன் சந்திரசேகர், தனது எழுத்துகளின் வழியாக மாற்று மெய்மை என்கிற வடிவத்தைத் தொடர்ச்சியாக பரிசோதித்து பார்த்தவர்.  ‘வெளியேற்றம்’,  ‘குள்ளச்சித்தன் சரித்திரம்உள்ளிட்ட நாவல்களின் மூலமாகவும் ஜென் கவிதைகள் மொழிபெயர்ப்பு மூலமாகவும் அறியப்பட்டவர்.

நோபல் பரிசு

  • இலக்கியம் உள்பட ஆறு பிரிவுகளில் உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 1901-ல் நிறுவப்பட்டது.
  • உலகம் முழுவதுமிருந்து எழுத்தாளர்கள் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளருக்குத் தங்கப் பதக்கமும் 1 மில்லியன் அமெரிக்க டாலரும் ( ஏறத்தாழ ரூ.8 கோடி) பரிசாக அளிக்கப்படும்.
  • 2023-க்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோசேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரது நாடகங்கள் மற்றும் உரைநடைகள் மிகப் புகழ்பெற்றவை. கடந்த ஆண்டு புக்கர் பரிசின் இறுதி பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் எழுத்தாளர்கள், ஸ்வீடிஷ் அகாதமி/ பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள்/ முந்தைய நோபல் விருதாளர்கள்/ எழுத்தாளர் அமைப்பின் தலைவர்கள் ஆகியோரால் பரிந்துரைக்கப்படுவார்கள்.
  • மிகத் தெளிவாக அகாதமியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சேதி, எழுத்தாளர்கள் விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. அதாவது, எழுத்தாளர்கள் தாங்களாகவே தங்களை விருதுக்குரியவராகப் பரிந்துரைக்க வேண்டிய சூழல் அங்கு இல்லை.

புக்கர் பரிசு

  • ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அயர்லாந்து அல்லது இங்கிலாந்தில் பதிப்பித்து வெளியிடப்பட்ட நாவல்களுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.53 லட்சம்) தொகை மற்றும் விருது அளிக்கப்படும்.
  • 2023-க்கான புக்கர் பரிசு, ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் எழுதிய  ‘ப்ராபெட் சாங்’ (தீர்க்கதரிசியின் பாடல்) என்கிற நாவலுக்கு அளிக்கப்பட்டது. அழுத்தம் நிறைந்த சமூகம் குறித்து பேசுகிற டிஸ்டோபியன் வகைமாதிரியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்துக்குப் புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.

பன்னாட்டு புக்கர் பரிசு

  • 2005-ல் தொடங்கப்பட்ட இந்தப் பரிசு, புக்கர் பரிசுக்கு இணையான ஒன்று. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட நாவல்களுக்கு அளிக்கப்படுகிறது.
  • தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடுக்கப்பட்ட விருது அதன் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை என அளித்து வருகிறார்கள். புக்கர் பரிசின் அதே விருது தொகை தான் இங்கும். எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
  • 2023-ம் ஆண்டுக்கான பன்னாட்டு புக்கர் பரிசு, பல்கேரியன் எழுத்தாளர் ஜியார்ஜி கோஸ்போடினோவ் எழுதியடைம் செல்டர்நாவலுக்கு அளிக்கப்பட்டது. மொழிப்பெயர்ப்பாளர் ஏஞ்சலா ரோடெல் உடன் இந்தப் பரிசை அவர் பெற்றார். நினைவுகள், காலம், சிதைந்த மனம் பற்றியது இந்நாவல்.

நன்றி: தினமணி (29 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்