- இந்தியாவின் பத்து முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ பத்திரிகையால் குறிப்பிடப்பட்ட எஸ்.என்.நாகராஜன் இடையறாது சிந்தித்தார்; தீவிரமாகச் சிந்தித்தார்; சமூக மாற்றத்துக்கான முயற்சிகளை ஒரு கணமும் தள்ளிப்போட முடியாது என்ற அவசரத்துடன், வேகத்துடன் சிந்தித்தார்.
- அந்தச் சிந்தனை எந்தத் தருணத்திலும் அவரை மடை திறந்தாற்போல சொற்பெருக்காற்ற வைத்தது. அவரிடம் கருத்தியல் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் கேள்வி எழுப்ப முயன்றவர்கள் அந்தக் காட்டாற்றில் மூச்சுத் திணறினார்கள்.
- அதன் வேகத்தில் தாவித்தாவிச் சென்று பல புள்ளிகளை இணைக்கும், சம்வாதத் தொனியில் பல தீர்மானகரமான உச்சரிப்புகளைச் செய்யும் அவரது பேச்சுமுறை பலரையும் அதிர்ச்சிக்கும் அயர்வுக்கும் உள்ளாக்குவது. அதே சமயம், ஈர்க்கவும் கூடியது.
- எஸ்என்என் என்ற பெயரை அவரது கட்டற்ற சிந்தனைப் பிரவாகத்திலிருந்து பிரிக்க முடியாது. அந்த வேகத்தை தேக்கிக் கருத்துகளை எழுத்தில் செதுக்கவோ, கோட்பாட்டாக்கம் செய்யவோ அவருக்கே இயலவில்லை.
- நண்பர்களின் வற்புறுத்தலே ஒருசில கட்டுரை ஆக்கங்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் சிந்தனைகள் நூலாக வடிவெடுக்கக் காரணம்.
- அவர் எழுத்துமே உரையாடல் தொனியில், சம்வாதத் தொனியில் அமைந்ததுதான். அவற்றில் கோட்பாட்டு முழுமையை எதிர்நோக்க முடியாது. தூண்டல்களும் தெறிப்புகளும் சவால்களும் மிகுந்திருக்கும்.
சிறப்பான சிந்தனைகள்
- எஸ்என்என் சிந்தனை முறையைப் புரிந்துகொள்ள சிந்தனையைக் குதிரையாக உருவகம் செய்வோம்.
- ஒருசிலர் நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரைகளைப் பழக்கிப் பந்தயங்களில் ஈடுபடுத்திப் பரிசுகளை வெல்வார்கள். ஒருசிலர் குதிரையில் ஏறிப் போர்க்களம் புகுவார்கள். சிலர் குதிரையில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வார்கள். சிலர் அதை வண்டிகளில் பூட்டிப் பொருட்களையோ மனிதர்களையோ ஏற்றி இழுக்கச் செய்வார்கள்.
- இவர்களிலிருந்தெல்லாம் மாறுபட்டுப் பழக்கப்படாத ஒரு முரட்டுக் குதிரையில் ஏறுபவர் அதன் மேலிருந்து கீழே விழாமல் இருப்பதற்கே முதலில் முயற்சிக்க வேண்டும்.
- அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதெல்லாம் பிறகுதான் செய்ய முடியும். ஒருசில சிந்தனையாளர்கள் இப்படி முரட்டுக் குதிரை சவாரி செய்பவர்கள்.
- அவர்கள் தீவிரமான அடிப்படைக் கேள்விகளை எடுத்துக்கொண்டு அவை கூட்டிச்செல்லும் திசையெல்லாம் காடுமேடுகளில் எல்லாம் பயணிப்பார்கள்.
- நாம் பெரியாரை இப்படி ஓர் உதாரணமாகக் கொள்ள முடியும். சாதி அடையாளத்தை இழிவானதாகக் கற்பிப்பது எப்படி சாத்தியமாகிறது, அதை எப்படி முறியடிப்பது என்ற கேள்வியின் மீதேறி வாழ்நாள் முழுவதும் பயணித்தவர் அவர்.
- பெரியாரின் பயணம் எந்தக் கருத்தியலுக்குள்ளும் அடைபடாமல், எந்த அதிகார பீடத்தாலும் தடுக்கப்படாமல் முடிவற்ற பாய்ச்சலாக ஓயாத கேள்விகளாக உக்கிரமாக வெளிப்பட்ட வண்ணம் இருந்தது.
- அந்தக் கேள்விகள் அனைத்து நிறுவனச் சொல்லாடல்களுடனும் கருத்தியல்களுடனும் முரணுற்று நிற்பதால் இத்தகைய சிந்தனை முறையை எதிராடல் சிந்தனை (agonistic thinking) என்று அழைக்கிறார்கள்.
காலடித் தடமாக மாறலாம்
- அதிகாரத்தையும் ஆற்றல்களையும் ஒருசில புள்ளிகளில் குவிக்காமல் மக்களிடமே பகிர்ந்தளிக்கும் சமூக அமைப்புக்கான வழி எது என்ற கேள்வியின் மீதே எஸ்என்என் பயணித்தார் என்று எனக்கு படுகிறது.
- அது முதலீட்டிய உற்பத்தி முறை, நவீன இயந்திரமயமான அறிவியல் தொழில்நுட்பம், ‘மேற்கத்திய’ இயங்கியல், அறிதல் முறை எனப் பல்வேறு அம்சங்களைக் கேள்வி கேட்கவும், அதற்கான மாற்றுகளைப் பல்வேறு பண்பாட்டு மூலகங்களில் தேடவும் அவரைச் செலுத்தியது.
- அதற்கு இசைந்த இயற்கை வேளாண்மை போன்ற களங்களில் செயல்பட வைத்தது. அவரது சிந்தனை இழைகளில் குறிப்படத்தக்க ஒன்று ‘மேற்கத்திய’ இயங்கியல் என்று அவர் அழைத்த ஹெகலிய இயங்கியல் மீதான விமர்சனம். அது கார்ல் மார்க்ஸ் செய்த விமர்சனங்களிலிருந்து வேறுபட்டது.
- ஹெகலிய இயங்கியலின் அடிப்படை அம்சம் புலன் உணர்வுக்கும் (sense certainty), புரிந்துணர்வுக்கும் (self-certainty) உள்ள உறவுதான்.
- வேண்டும் என்றே துணிந்து மிக எளிமையாகச் சொன்னால் புலன் உணர்வு தரும் ஒரு தகவல், புலன் உணர்வு தரும் இன்னொரு தகவலை மறுக்கிறது. ஆனால், புரிந்துணர்வு இரண்டையும் இணைத்துத் தனக்கான இயங்குதளத்தைக் காண்கிறது.
- இதுவே சுயத்தின் உறுதிப்பாடு. இந்தச் சுய உறுதிப்பாட்டில் புலன் உணர்வுகள் கடக்கப் பட்டு விடுகின்றன. விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் வளிமண்டலத்தின் ஈர்ப்பு விசையைக் கடந்தவுடன் எரிபொருள் கலன் கழன்று விழுவதைப் போல புலன் உணர்வு தன் முக்கியத்துவத்தை இழக்கிறது.
- இந்தக் கடத்தலை ஜெர்மன் மொழியில் ’அவ்ஃபபென்’ (aufheben) என்றும், ஆங்கிலத்தில் ’சப்லேஷன்’ (sublation) என்றும் கூறுவார்கள்.
- பரவலாக இதை ‘தீஸிஸ்’ (thesis) என்பதும், ‘ஆன்டி-தீஸிஸ்’ (anti-thesis) என்பதும் ‘சிந்தெஸிஸி’ல் (synthesis) கடக்கப்படுவதாகக் கூறுவார்கள்.
- இந்தச் செயல்பாடு விரிவுகொள்ளும்போது புரிந்துணர்வு பொதுமையாக்கப்படுவதில் வன்முறை தொடங்குகிறது.
- வித்தியாசங்கள் வேறுபாடுகளாக உள்வாங்கப்பட்டு முரண்பாடாகச் சிந்திக்கப்பட்டு அந்த முரண்பாட்டைக் கடக்கப் பொதுக்கருத்து உருவாகும்போது வித்தியாசங்களின் இயல்பான சக இருப்பு மறுதலிக்கப்படுகிறது.
- ஹெகலிய இயங்கியலின் இந்த முரண்களைக் கடந்த உறுதிப்பாட்டின் தேவை சமூக, அரசியல் இயக்கங்களிலும் தலைமையின் அதிகாரத்தை நிறுவின.
- அதிகார மையத்தின் சிந்தனையின் சுய உறுதிப்பாட்டிலிருந்து விலகுபவர்கள் எதிரிகளாகக் கணிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதும் அழிக்கப்படுவதும் நிகழ்ந்தது.
- அறிவியலில் அவதானிப்பிலிருந்து ஊகம், ஊகத்தை சரிபார்க்க பரிசோதனை என்பது மாறி, பரிசோதனையிலிருந்து உறுதிப்பாடு, அதிலிருந்து செயல்பாடு என்று இயற்கையின் மீதான ஆக்கிரமிப்பு துவங்கியது.
- இத்தகைய முரண்பாட்டு உருவாக்கம், முரண்பாட்டைக் கடந்த உறுதிப்பாடு என்ற இயங்கியலில் மாவோ பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு என்று பிரித்ததை எஸ்என்என் முக்கியமான நகர்வாகக் கண்டார்.
- மற்போர் விளையாட்டில் மோதுபவரை வெல்ல வேண்டுமே தவிர, கொல்லக் கூடாது. இது எதிராடல்தானே (agonism) தவிர, எதிர்ப்பாடல் (antagonism) இல்லை.
- இது போன்றது நட்பு முரண்பாடு. இயங்கியல் இவ்வாறு பன்மையுறும்போதுதான் அதிகார மையங்களின் சுய உறுதிப்பாட்டை, அதன் வன்முறையைக் களைய முடியும். எஸ்என்என் அன்பு என்பதை அதற்கு மிகவும் அவசியமான பாதையாகக் கண்டார் என்று தோன்றுகிறது.
- எஸ்என்என் போல அடிப்படைக் கேள்விகளிலேயே பயணித்த சிந்தனையாளர்கள் நெருப்பைப் போன்றவர்கள்.
- நெருப்பைப் பயன்படுத்தி நாம் உணவு சமைக்க வேண்டுமே தவிர, நெருப்பையே உண்ண முடியாது.
- எஸ்என்என் ஆழ்வார்களின் மெய்யுணர்வையும், மார்க்ஸின் அறவியல் நோக்கையும் தொடர்புபடுத்தினார் என்றால், நம்மில் ஆர்வமுள்ளவர்கள்தான் அந்த தொடர்புகளின் சாத்தியங்களை ஆராய வேண்டும்.
- அதிலிருந்து நம் புரிதலுக்கும் செயல்பாட்டுக்கும் பயன் விளையுமானால் அது மானுட விடுதலை என்னும் பரந்த நிலப்பரப்பின் மற்றொரு காலடித் தடமாக மாறலாம்.
நன்றி: தினமணி (28 – 05 - 2021)