- ஆப்பிரிக்காவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டு "குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்ட 20 சிவிங்கிப் புலிகளில் 7 புலிகள் உயிரிழந்தபாது வனவிலங்கு ஆர்வலர்கள் அûடந்த வேதனைக்கு அளவே இல்லை. அந்த சிவிங்கிப் புலிகள் குட்டிகளை ஈன்றதால் இப்போது எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்று அரசு தீர்மானித்தது. அதனடிப்படையில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண், 3 ஆண்), தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண்) கொண்டுவரப்பட்டன. பல்வேறு காரணங்களால் ஒன்றன்பின் ஒன்றாக 7 சிவிங்கிப் புலிகள் இறந்த போது, கடுமையான விமர்சனமும், வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும் எழுந்தன.
- ஏற்கெனவே "ஜ்வாலா', "ஆஷா' என்று பெயரிடப்பட்ட சிவிங்கிப் புலிகள் குட்டிகளை ஈன்றிருக்கும் நிலையில், இப்போது "காமினி' என்கிற சிவிங்கிப் புலி "குனோ' தேசியப் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்றிருக்கிறது. அதனால் இப்போது மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் பருவநிலைக்கும், சூழலுக்கும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் பழகிவிட்டன என்று தெரிய வருகிறது.
- வனங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதிலும், அதன் காரணமாகப் பல்லுயிர்ப் பெருக்கம் நிலை பெறுவதிலும் சிறுத்தைகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சிவிங்கிப் புலிகள் எண்ணிக்கையைப் போலவே, சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சூழலியல் வல்லுநர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
- 2018இல் இந்தியாவில் 12,852 ஆக இருந்த சிறுத்ûதகளின் எண்ணிக்கை 2022-இல் 8% அதிகரித்து 13,874 என்கிற எண்ணிக்ûகயை எட்டியிருப்பதாக சுற்றுச்சூழல் அûமச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆûணயம் ஐந்தாவது தடவையாக சிறுத்தைகள் கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறது. இந்திய வன விலங்குகள் நிறுவனமும், மாநிலங்களின் வனத் துறையும் இந்தக் கணக்கெடுப்பில் இணைந்திருக்கின்றன.
- முந்தைய கணக்கெடுப்பை போலவே புலிகள் காணப்படும் 20 மாநிலங்களிலும், நான்கு புலிகள் பாதுகாப்புப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. புலிகள் சரணாலயப் பகுதிகளில்தான் பெரும்பாலான சிறுத்தைகள் வாழ்கின்றன. புலிகளைப் போலல்லாமல், அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு வெளியேயும் அவை காணப்படுகின்றன. நகரங்களிலும், கிராமங்களிலும் நீர்நிலைகளை ஒட்டிய பண்ணைத் தோட்டங்களிலும், அடர்ந்த புற்கள் இருக்கும் பகுதிகளிலும், முள் காடுகளிலும்கூட அவை காணப்படுகின்றன.
- விஞ்ஞான அடிப்படையில் நவீன கணக்கெடுப்பு முறைகள் கையாளப்படுவதால், இந்தக் கணக்கெடுப்பு ஏறக்குறையத் துல்லியமானது என்று கூறப்படுகிறது. மத்திய இந்தியாவிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது என்றால், ஏனையபகுதிகளில் எண்ணிக்கை சற்று குறைந்தும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆண்டொன்றுக்கு 1.08% எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- மிக அதிகமான சிறுத்தைகள் எண்ணிக்கை மத்தியப் பிரதேசத்தில் (3,907) காணப்படுகிறது என்றால், மகாராஷ்டிரம் (1,985), கர்நாடகம் (1,879), தமிழ்நாடு (1070) உள்ளிட்ட மாநிலங்களில் சிறுத்தைகள் கணிசமான அளவில் காணப்படுகின்றன. அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் சேர்த்து சிறுத்தைகளின் எண்ணிக்கை 150% அதிகரித்து 349 என்கிற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
- உத்தரகண்ட் மாநிலத்தில், சிறுத்தைகள் வேட்டையாடப்படுவதால், அவற்றின் எண்ணிக்கை 22% குறைந்திருப்பதாகக் கணக்ùகடுப்பு தெரிவிக்கிறது. அந்த மாநிலத்தின் ராம்நகர் பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைகிறது என்றால், புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
- இந்தக் கணக்கெடுப்புக்காக வனத் துறை அலுவலர்கள் புலி, சிறுத்தை அடையாளங்களைத் தேடி 6,41,449 கி.மீ. பயணித்திருக்கிறார்கள். 32,803 இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலம் 4,70,81,881 புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. புலிகள், சிறுத்தைகள் நடமாடும் என்று எதிர்பார்க்கப்படும் 70% பகுதிகள் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன.
- சிறுத்தைகள் கிராமங்களுக்குள்ளும், ஏன் நகரங்களிலும்கூட ஊருக்குள் நுழைந்து இரை தேடுவதும், ஆங்காங்கே மனிதர்களைத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது என்பது உண்மை. சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவை மனிதர்களின் வாழ்விடங்களில் நுழைகின்றன என்பது தவறான கருத்து. இதற்கு, அவற்றின் வாழ்விடங்களான அடர்ந்த காடுகளும், வனங்களும் ஆக்கிரமிக்கப்படுவதும், போதிய இரை கிடைக்காமல் இருப்பதும்தான் காரணங்கள்.
- புலிகள் சரணாலயங்கள்தான் சிறுத்தைகள் அதிக அளவில் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவற்றின் இனப்ùபருக்கம் நடைபெறுவதற்கும் உதவுகின்றன. புலிகள் போலல்லாமல், சிறுத்தைகள் சரணாலயங்களுக்கு வெளியேயும் காணப்படுவதால், அவற்றைப் பாதுகாப்பதும், அவற்றால் மனிதர்களுக்கும், அவர்களது வளர்ப்பு மிருகங்களுக்கும் பாதிப்பு இல்லாமல் இருப்பதும் அவசியமாகின்றன.
- காடுகள் அழிக்கப்படும்úபாதும், ஆக்கிரமிக்கப்படும்போதும், மரங்கள் இல்லாமல் சிறுத்தைகளுக்குப் போதிய பாதுகாப்பு அகன்று விடுகிறது. இரை கிடைப்பதிலும், குடிநீர் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அவை ஊருக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
- நம்மைப் போலவே, வன விலங்குகளுக்கும் பூமியில் வாழும் உரிமை உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது!
நன்றி: தினமணி (28 – 03 – 2024)