- ‘வளர்ந்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்காவிட்டால், பெரும்பாதக விளைவுகள் ஏற்படும்’ என்று உலக வங்கியின் சமீபத்திய ‘உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை’ எச்சரிக்கிறது. பிரிட்டனின் அரச குடும்பமே இதன் தொடக்கப்புள்ளி. மனிதர்களைப் பண்டமாக்கி, வியாபாரம் செய்து, அதில் குவித்த மூலதனச் செல்வமே, மேற்குலக நாடுகளின் மொத்த மூலதனக் குவிப்புக்கு அடிப்படை.
- அடிமை வர்த்தகம், காலனி ஆதிக்கம், இயற்கை வளச் சூறையாடல், இனப்படுகொலைகள், ராணுவ மேலாதிக்கம், உழைப்புப் பகுப்பு ஆகியவையே இன்றைய வளர்ந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில், உற்பத்தித் தொழில்துறை நிலைநிறுத்தப்படக் காரணமாக இருந்தவை.
அரச குடும்பமும் அடிமைகளும்
- முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடுகள் எனப் பொருளாதாரரீதியாக இரு கூறுகளாக உலகம் பிளவுபட்டதற்கு அடிமை வர்த்தகமும் அதன் முதலீடுகளுமே அடிப்படை. பொ.ஆ. (கி.பி.) 1660-களில்அடிமை வர்த்தகம் தொடங்கப்பட்ட காலத்தில், பிரிட்டன் அரச குடும்பத்தின் வர்த்தகமாகவே அது இருந்தது.
- ‘ராயல் சாகச வர்த்தக நிறுவனம்’ என்ற பெயரில் அடிமை வர்த்தகத்தை அரச குடும்பமே முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பின்னாட்களில், ‘ஆப்பிரிக்காவிற்கான ராயல் கம்பெனி’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இன்று உலக வர்த்தக அமைப்பும் புதிய தாராளவாதமும் முன்மொழியும் ‘சுதந்திர வர்த்தகம்’ என்ற தடையற்ற வணிகக் கோட்பாட்டு முழக்கம், பிரிட்டன் அரச குடும்பத்துக்கு எதிரான ஆங்கிலேய வர்த்தகர்களுடைய போராட்டத்தின் முழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பின மக்கள் அமெரிக்க, கரீபிய நாட்டுத் தோட்டங்களுக்கு அடிமைகளாக ஏற்றுமதி செய்யப்பட்டனர்.
- இதன் தொடர்ச்சியே கொலம்பஸ், மெகல்லன், வாஸ்கோட காமா போன்றோர் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா எனப் புதிய நாடுகளைக் கண்டறிய முடிந்தது. இது தொழிற்புரட்சிக்கு இட்டுச்சென்றது. 16, 17ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்தோங்கிய அடிமை வர்த்தகம், ஆப்பிரிக்கச் சமூகத்தை அழித்தது; அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளை அழித்தொழித்தது. கரீபிய நாடுகளில் தோட்டத் தொழில்கள் வளரக் காரணமாக அமைந்தது. சர்க்கரை, புகையிலை, காப்பி, கோகோ, பருத்தித் தோட்டங்கள் அடிமைகளைக் கொண்டு லட்சக்கணக்கான ஏக்கர்களில் வளர்க்கப்பட்டன. இந்தத் தோட்டங்களில் உற்பத்தியான பொருட்களை விற்க, உலகின் முதல் பெரும் சந்தைகள் உருவாகின.
- இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் எனப் பல நாடுகள் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தாலும், அதன் ஆதி அடிப்படை பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே அடிமை ஒழிப்புச் சட்டங்கள் படிப்படியாக ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்பட்டன. இதன் பின்னர், அடிமைகள் வேலைசெய்ய மறுத்தனர்.
- இதற்கு மாற்றாக, இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளிலிருந்து உழைப்பாளிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று, அடிமைகளைப் போல் வேலை வாங்கியதிலும் அரச குடும்பத்துக்குப் பெரும் பங்குண்டு. இங்கிலாந்து போன்ற அடிமைகளைக் கொண்டிருந்த நாடுகளின் தீவுகளில் இருந்த மக்களில் சராசரியாக 80% வரை அடிமைகளாக இருந்தனர்.
வரலாற்றுப் பிழை
- இங்கிலாந்தில் 1833இல் ‘அடிமை ஒழிப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. அப்போது விடுதலை செய்யப்பட்ட ஏழு லட்சம் அடிமைகளுக்கு ஒரு பைசாகூட இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆனால், அடிமைகளின் முதலாளிகள் 4,000 பேருக்கு, 20 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் இழப்பீடு வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய தேசிய வருமானத்தில் இது 5%. இங்கிலாந்து ஈட்டிய செல்வத்தில், அரச குடும்பத்துச் சொத்தின் இன்றைய மதிப்பு 28 பில்லியன் பவுண்டுகள். (1 பில்லியன் = 100 கோடி; 1 பவுண்டு = 91 ரூபாய் (இன்றைய மதிப்பில்)).
- இவ்வளவு பணத்துக்கு எந்த வரியும் கிடையாது. கடந்த 300 ஆண்டுகளில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நடத்திய போர்கள், இனப்படுகொலைகள், அடிமை வர்த்தகம், இயற்கை வளச் சூறையாடல், தேசிய வருமான அபகரிப்பு எல்லாம் அரச குடும்பத்தின் பெயரில்தான் நடைபெற்றன. குறிப்பாக, தொழிற்புரட்சிக்குப் பின்னர், “காலனி நாடுகளிலிருந்து ஒரு ஆணியைக்கூடக் கொள்முதல் செய்யக் கூடாது. அங்குள்ள மூலப்பொருட்கள் மட்டுமே இங்கிலாந்து வர வேண்டும்” எனக் காலனி நாடுகளை விற்பனைச் சந்தைகளாக மாற்றி லாபம் கொழித்தது.
- காலனி நாடுகளின் பண்டப் பரிவர்த்தனைகள் அனைத்தும் தக்க வரி செலுத்தி, இங்கிலாந்து வழியாகவே செல்ல வேண்டும். எந்தவிதத் தொடர்பும் இல்லாத பொருட்களுக்கும் வரி மேல் வரி வாங்கிச் செல்வம் கொழித்ததிலும் அரச குடும்பத்துக்குப் பங்கிருக்கிறது. இப்போது காலனி ஆதிக்கம் இல்லை. சமீபத்தில் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டு கால ஆட்சிக்கு முந்தையது என்பதால், இந்தக் கொடுமைகளுக்கும் அரசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனலாம்.
- ஆனால், குடியாட்சிகளின் உலகில்தானே அரசி வாழ்ந்தார். எனினும், “இவையெல்லாம் தவறு, வருந்துகிறோம்” என்று ஒரு வார்த்தைகூட அவர் கூறவில்லை. கொடிய அடிமை முறை, இனப்படுகொலைகள் பற்றி 70 ஆண்டுகளில் எப்போதாவது அவர் வாய்திறந்திருக்கிறாரா, மன்னிப்பு கோரியிருக்கிறாரா?
அரசிக்குப் பொறுப்பில்லையா?
- கடந்த காலத் தவறுகளுக்கு அவர் என்ன செய்ய முடியும் என்ற வாதங்கள் தவறானவை. நீண்ட, நெடிய முடி ஆட்சியின் தொடர்ச்சியான அவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. 1920 முதல் 1963 வரை இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த கென்யா, 1963இல்தான் விடுதலை பெற்றது. ‘முவ் முவ்’ என்ற கென்ய விடுதலைப் போராட்டப் புரட்சியை மிகக் கொடூரமாக அடக்கி ஒடுக்கியது; சுமார் ஒன்றரை லட்சம் கென்ய மக்களை, விடுதலைப் போராட்ட முகாம்களில் படுகொலை செய்தது. இந்தக் காலகட்டத்தில் (1952 முதல் 1962 வரை) மறைந்த இரண்டாம் எலிசபெத் அரசாட்சி செய்துவந்தார்.
- காலனி ஆதிக்கத்தின் கொடுமைகள் நீண்டவை, நெடியவை. அதனால் தொடரும் விளைவுகள் காலனி ஆதிக்க காலத்தைவிடவும் கொடுமையானதாக உருப்பெற்று வருகின்றன. ஆனால், இவற்றைச் சில பத்தாண்டுகளில் மறந்து, உலகெங்கிலும் உள்ள மக்களும், இன்னும் எஞ்சியுள்ள முடியாட்சியின் மன்னர்களும், குடியாட்சிப் பிரதிநிதிகளும், தேனீக்கள்போல வரிசையில் நின்று அரசிக்கு அஞ்சலி செலுத்தினர்.
- இந்த உருக்கமான அஞ்சலிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அடிமைத்தனத்தின் முக்கியக்காரணியாக அரச குடும்பம் இருந்தது என்ற நெருடலையும் தவிர்க்கத்தான் முடியவில்லை
நன்றி: தி இந்து (09 – 10 – 2022)