TNPSC Thervupettagam

ஏ.கே.செட்டியார் 110 - 30 வயதில் 3 லட்சம் மைல்கள்

November 17 , 2023 421 days 375 0
  • இடதுசாரி வங்கப் படைப்பாளிகளால் 60களில் உருவானது இந்திய ஆவணப்பட இயக்கம். அவர்கள், ரஷ்ய ஆவணப்பட முன்னோடிகளில் முதன்மையானவராக விளங்கிய டிசிகா வியர்த்தோவின் (Dziga Vertov) பாணியில் தாக்கம் பெற்று ஆவணப் படங்களை உருவாக்கினார்கள். பின்னர் எழுபதுகளில் அது மேலும் செழித்து வளர்ந்தது. வங்க இலக்கியத்தின் தாக்கத்துடன் கலைப் படங்களை உருவாக்கிய சத்யஜித் ராய், திரைமொழியின் சாயலோடு ஆவணப்படங்களை உருவாக்கினார். வங்கத்தின் மகாகவி தாகூரின் வாழ்க்கையை அவர் 1961இல் ஆவணப்படமாக வெளிக்கொண்டு வந்தார்.
  • இது போன்று ஆளுமைகளின் வாழ்க்கையை ஆவணமாக்குவதில் ஆர்வம் செலுத்தாமல், சுதந்திர இந்தியாவின் சிக்கல்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகி, எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இந்திய ஆவணப்பட இயக்கத்தைச் செழுமைப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன். இன்று தமிழ்நாட்டிலும் ரவிசுப்ரமணியன், ஆர்.பி.அமுதன், திவ்யா பாரதி எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படைப்பாளிகள் வெவ்வேறு களங்களில் இத்துறையில் இயங்கி வருகின்றனர். ஆனால், வங்காளிகளுக்கும் முன்னால், 29 வயதே நிரம்பியிருந்த இளம் தமிழர் ஒருவர், நவீன இந்தியாவின் வரலாற்றைத் தனது எளிய வாழ்க்கையின் வழியாக மாற்றி எழுதிய மகாத்மா காந்தி எனும் மாமனிதரைக் குறித்து ஒரு முழுமையான ஆவணப்படத்தை உருவாக்கினார்.
  • அவர்தான் தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று மெச்சத்தக்க .கே.செட்டியார். பெரும் பொருளைச் செலவிட்டும், பெரும் அர்ப்பணிப்பைக் கொடுத்தும் உருவாக்கிய அந்த ஆவணப்படம், ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்என்கிற தலைப்பில் ஆகஸ்ட் 1940இல் வெளிவந்தது. இப்படம் தமிழ்நாட்டிலும் பர்மாவிலும் மலேசியா, சிங்கப்பூரிலும் ரகசியமாகத் திரையிடப்பட்டது. 1941இல் தெலுங்கு மொழியிலும் டப்செய்யப்பட்டது. இப்படத்தைக் கைப்பற்றி அழிக்க விரும்பியது ஆங்கிலேய அரசு. விளைவாகப் படச்சுருளையும் அதன் நெகட்டீவையும் ரகசியமாகப் பாதுகாத்து வந்தார் .கே.செட்டியார். பின்னர் நாடு விடுதலை அடைந்த இரவில் ஆகஸ்ட் 14, 1947 அன்று டெல்லியில் காந்தி ஆவணப்படம் சுதந்திரமாகத் திரையிடப்பட்டது.

உலகத்தின் கண்களுக்கு

  • அடுத்த ஆண்டில் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, ஐநா அவையின் கொடி கீழே இறக்கப்பட்டதுடன், அவரது மறைவுக்கு ஐநா பிரதிநிதிகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். அந்த நிகழ்வு, உலகெங்கும் காந்தி மகான் குறித்து அறியும் ஆவலை உருவாக்கியது. அப்போது காந்தி: உலகம் உச்சரிக்கும் ஒரு பெயர்என்கிற கட்டுரையை எழுதினார். அத்துடன் காந்தியின் ஆவணப்படத்தை மகாத்மா காந்தி: 20ஆம் நூற்றாண்டின் தீர்க்கதரிசிஎன்கிற தலைப்புடன் ஹாலிவுட்டில் ஆங்கிலத்தில் தயாரித்து, அங்கே உயர்தர இசை, படத்தொகுப்பு ஆகியவற்றுடன் உலகத்தின் கண்களுக்குக் கொண்டு சென்றார் .கே.செட்டியார். அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன் காந்தியின் இறுதி யாத்திரை வரையிலான நிகழ்வுகளை ஆவணப்படத்தில் இணைத்திருந்த அவர், அதை இந்தியிலும் டப் செய்து வெளியிட்டிருந்தார்.

காந்தியின் மானசீகச் சீடர்

  • அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்கிற இயற்பெயர் கொண்ட .கே.செட்டியார், காரைக்குடிக்கு அருகிலுள்ள கோட்டையூரில் நவம்பர் 3, 1911இல் செல்வச் செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இளமைப்பருவத்தின் ஒரு பகுதி செட்டிநாட்டிலும் பள்ளிப் பருவம் திருவண்ணாமலையிலும் கழிந்தது. பள்ளிக் காலத்திலேயே காந்தியின் மீது ஈடுபாடு கொண்டவராக, அவரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டவராக விளங்கினார். சுதந்திரப் போராட்டம் அவரை ஈர்த்தது. கூட்டங்களில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் அவரது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர், அவர் களப் போராளியாகிச் சிறை செல்லக்கூடும் என அஞ்சி, அவரை பர்மாவின் ரங்கூனுக்கு அனுப்பினார்கள். ரங்கூனில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் வணிகச் சங்கம் நடத்தி வந்த தனவணிகன்என்கிற இதழுக்குத் தனது இருபதாவது வயதில் ஆசிரியர் ஆனார். பத்திரிகைப் பணி அவருக்குப் ஒளிப்படக் கலையின் மீது ஈடுபாட்டை உருவாக்கியது. அங்கிருந்து 1936இல் ஜப்பானுக்குச் சென்று அங்கே இம்பீரியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சேர்ந்து மூன்று மாத காலம் ஒளிப்படக் கலையை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டார்.

முதல் பயண எழுத்து 

  • ஜப்பானில் ஒளிப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த தருணத்தில் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்து தாம் கண்டதையும் கேட்டதையும் பயண அனுபவக் கட்டுரையாக எழுதி, செல்லும் இடங்களில் தாம் எடுத்த ஒளிப்படங்களை இணைத்து தனவணிகனுக்கு அனுப்பினார். அதில் அவரது கட்டுரைகளை வாசித்த வாசகர்கள் ஜப்பானுக்கே போய் பார்த்ததுபோல் உள்ளதுஎன்று பாராட்டினார்கள். இப்படிப் பாராட்டு பெற்ற அவரது முதல் பயண எழுத்துகள் ஜப்பான் கட்டுரைகள்' என்கிற தலைப்பில் அவரது முதல் புத்தகமாக வெளிவந்தது. அதன்பின்னர், தனது ஒளிப்படக் கலை தொடர்பான படிப்பில் மேலும் நிபுணத்துவம் பெற விரும்பிய அவர், ஜப்பானிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குப் பயணமானார்.
  • அங்கே ஒளிப்படக் கலையில் பட்டயப் படிப்பை முடித்து 1936இல் இந்தியா திரும்பும் வழியில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநராக இருந்த ஜான் கிரிஸனின் (John Grierson) 5 ஆவணப்படங்களைக் காணும் வாய்ப்பு .கே.செட்டியாருக்கு அமைந்தது. என்றாலும் அவருக்கு அப்போது ஆவணப்படங்களை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னர், இங்கிலாந்திருந்து அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த அவர், அந்த அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக ஒளிப்படங்களுடன் பல்வேறு இதழ்களில் பதிவு செய்தார். அவையெல்லாம் தொகுக்கப்பட்டு உலகம் சுற்றும் தமிழன்என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. இப்படித்தான் 17 நூல்களின் வழியாகத் தமிழ்ப் பயண இலக்கியத்தின் மாற்றில்லா முன்னோடியானார்.

மொழியும் வடிவமும்

  • சுருக்கமாகச் சொல்வது, நேரில் கண்டதை யும், அதன் வழி உணர்ந்த அனுபவத்தையும் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் சொல்வது, அதைச் சுற்றி வளைக்காமல் அதேநேரம் சுவாரஸ்யம் குன்றாமல் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கம் அவரது எளிய மொழியிலும் வடிவத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு கட்டுரையை எங்கே தொடங்கி, எங்கே முடிக்க வேண்டும் என்பதிலும் அவரது தெளிவு ரசனை கொண்டதாக இருக்கிறது. உலகம் முழுவதும் பயணித்தவற்றைத் தமிழர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்கிற அவரது வேட்கை, அவரை 35 வயதுக்குள் மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணிக்க வைத்திருக்கிறது. இவ்வளவு பயணித்த அந்நாளின் தமிழன் அவர் ஒருவர் மட்டும்தான்என்று, .கே.செட்டியாரைக் குறித்து சாகித்திய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள்வரிசையில் நூல் எழுதியுள்ள எழுத் தாளர் சா.கந்தசாமி குறிப்பிடுகிறார்.

காந்திக்காக மேற்கொண்ட நெடும் பயணம்

  • உண்மையில் .கே.செட்டியாரை உலகின் பல நாடுகளும் துரத்தியது காந்தி ஆவணப் படத்துக்காக அவர் மேற்கொண்ட பயணங்கள்தான். அந்த ஆவணப்படத்துக்காக 1937இல் டாகுமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்என்கிற நிறுவனத்தைத் தொடங்கி அவர், தென்னாப்பிரிக்காவில் மோகன் தாஸ் காந்தியின் போராட்டத்தில் தொடங்கி, காந்தியின் பழைய திரைப்படத் தொகுப்புக்கள் எங்கெல் லாம் இருக்கின்றனவோ அங்கெல் லாம் சென்று அவற்றைச் சேகரித்து வந்து, சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தற்போதைய இந்தியா வின் மகாத்மாவுடன் இணைக்க முடிவு செய்தார். இதற்காகப் பல்லாயிரக்கணக்கான மைல்கள், நான்கு கண்டங்களில் உலகப் போருக்கு இடையில் பயணம் செய்து, நூற்றுக்கும் அதிகமான புகைப்பட, ஒளிப்பதிவுக் கலைஞர்களிடமிருந்து காட்சிப்படச் சுருள்களைத் தேடித் தேடிச் சேகரித்தார்.
  • இதற்காக அவர் பயணக் கப்பலில் பயணிக்கும்போது தனது சேகரிப்புக்களைச் சரக்கு கப்பலில் தனியாக அனுப்பி வைப்பார். தான் பயணம் செய்யும் கப்பல் ஒருகால் போரில் தகர்க்கப்பட்டால் தனது சேகரிப்புக்கு ஏதும் நேரக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை அவர் செய்திருந்தார். அவர் சேகரித்த 50 ஆயிரம் அடி காட்சிப் பதிவுகளி லிருந்துதான் 2 மணி நேர இந்தியாவின் முதல் காந்தி ஆவணப் படத்தை உருவாக்கினார். அவற்றில் காந்தியின் பல அரிய ஒளிப்படங்களும் காட்சி களும் இடம்பெற்றிருப்பதை யூடியூபில்கண்டு வியக்கலாம். சின்ன அண்ணாமலை தமிழ்ப் பண்ணை பதிப்பகத்தைத் தொடங்கக் கைகொடுத்த மூவரில் ஒருவராக விளங்கிய .கே.செட்டியார், 40 ஆண்டு கள் குமரி மலர்ஆவண இதழைப் பதிப்பித்த சாதனை விரிவாகத் தனியே எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்