- நாடாளுமன்றத்தில் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதனால், நாட்டில் ஸ்டார்ட் அப் போல குறு, சிறு நிறுவனங்கள் தொடங்கி நடத்தும் புதிய, இளைய தொழில் முனைவோருக்கு சுலபமாகவும் கூடுதலாகவும் மூலதனத்துக்கான பணம் கிடைக்கும். மூலதனம் இல்லாமல் ஒரு தொழிலையோ வியாபாரத்தையோ தொடங்க முடியாது.
- ஆனாலும், இப்போது தொடக்க கால முதலீடு இல்லாமலேயே ஸ்டார்ட்அப் தொடங்குபவர்கள் உண்டு. என்ன அற்புதமான யோசனையாக இருந்தாலும், திட்டங்களை செயல்படுத்த மூலதனம் வேண்டும். வங்கிக் கடன்கள் மூலதனம் ஆகாது. தவிர, கடன் வாங்கினால் அதற்கு, வியாபாரத்தில் லாபமோ நட்டமோ, முதல் மாதத்தில் இருந்தே, ஒப்புக்கொண்ட அளவு வட்டி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- எனவே, ஸ்டார்ட்அப் மற்றும் அப்படிப்பட்ட சிறுநிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களைப் போலவே, வியாபாரம் நிலைத்து, பெருகி, லாபம் வரும் வரை ’வட்டிபோல வருமானம் தர வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தாத, ’ஈக்விட்டி கேப்பிடல்’ வகையில் மூலதனம் தேவை.
- பெரிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ. மூலம் ‘ஈக்விட்டி’ மூலதனம் திரட்ட முடியும். ஆனால் ஸ்டார்ட்அப் போன்ற சிறு நிறுவனங்களால் அது முடியாது. அவர்கள் மீதும் அவர்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும் நம்பிக்கையுள்ள பணக்காரர்கள், அவர்களுக்கு ’ஈக்விட்டி கேப்பிடல்’ கொடுப்பார்கள். ‘தேவதை’ போல வந்து உதவுவதால் அவர்கள் ’ஏஞ்சல் இன்வெஸ்டார்’ என அழைக்கப்படுகிறார்கள்.
- “யோசனை என்னுடையது. உழைப்பும் என்னுடையது. மேலும் வியாபாரம் தொடங்கி சில பல மாதங்கள் ஆகின்றன. தாமதமாக இணையும் நீங்கள் அவற்றுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். வெறும் மதிப்பல்ல. பண மதிப்பு.அதன் பெயர், ‘பிரீமியம்’. இந்த வியாபாரம் இவ்வளவு காலத்தில் இன்னஅளவு லாபம் ஈட்டும்.
- அவற்றையும் பிரீமியம் கணக்கிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்” என்பதுபோன்ற அணுமுறையில்தான் ஏஞ்சல் இன்வெஸ்டார்கள் கொடுக்கும் பணத்துக்கு, ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும். அந்த விதத்தில், ஸ்டார்ட்அப் களுக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதிதான் ஈக்விட்டி. மற்றொரு பகுதி பிரீமியம். இருதரப்பும் முடிவு செய்யும் அளவுகளில் பிரீமியத்தொகை இருக்கும்.
- இதன் மூலம் பல ஸ்டார்ட்அப்கள் பலன் அடைந்துள்ளன. ஆனால் இந்த ஏஞ்சல் இன்வெஸ்டார் முறையைப் பயன்படுத்தி, சிலர் தங்களுடைய கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்கள் என்ற சந்தேகம் அரசுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏஞ்சல் வரி முறையை அறிமுகப்படுத்தினார்.
- “சில ஸ்டார்ட்-அப் தொடங்குபவர்கள், பிரீமியமாக வாங்கிய பணம், சந்தையில் அவர்கள் பங்குகளுக்கு கிடைக்கக்கூடிய உண்மையான சந்தை மதிப்பைவிட (Fair Market Value) அதிகம். கணக்கிடும் முறை Discounted Cash Flow(DCF) தவறு. அப்படிப்பட்ட கூடுதல் தொகைக்கு நீங்கள்30% வரி கட்டுங்கள்’ என்பதுதான் ஏஞ்சல் வரி முறை.
- இந்த வரி முறை, முறையாக ஸ்டார்ட்அப் நடத்துபவர்களுக்கு பிரச்சினையாக உருவெடுத்தது. எதிர்கால வியாபார வாய்ப்புகள், லாப அளவுகளை வைத்து கணக்கிடப்படும் பிரீமியத் தொகை சரிதானா என்பது சில ஆண்டுகளுக்குப் பின்தான் தெரியவரும்.
- அதனால், போகப் போக வருமான வரி அலுவலகத்தில் இருந்து, ‘பிரீமியம் அதிகம், ஏஞ்சல் வரி செலுத்துங்கள்’ என நோட்டீஸ்கள் வர ஆரம்பித்தன. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
- இதன் காரணமாக ஸ்டார்ட்அப்களுக்கு கிடைக்கும் முதலீடுகள் குறைய ஆரம்பித்தன. தொழில் தொடங்குவதை சுலபமாக்கி, அதன்மூலம் வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டு, பல சலுகைகளுடன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் திட்டம் கிடுகிடுவென வளர்ந்தது. இந்தியாவில் இப்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உள்ளன.
- ஸ்டார்ட்-அப்களாக தொடங்கி வளர்ச்சியடைந்துள்ள ‘யூனிகார்ன்’கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலை தொடர ஏஞ்சல் வரி இடையூறாக இருந்தநிலையில், அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் மற்றொரு பிரச்சினையாக இருந்த ‘ஸ்டார்ட்அப்’ மீது விதிக்கப்படும் 2% ஈக்கவலை ஷேசன் லெவியும் (Equalisation Levy) ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
- இவை ஸ்டார்ட்-அப் மூலதன உருவாகத்துக்கும் அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வழிவகுக்கும். திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கத்துடன், 1.48 லட்சம் கோடி ரூபாயில் பிரதமமந்திரி பெயரில் வேறு ஐந்து திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- ஆண்டுக்கு 25,000 பேர் ‘மாடல் ஸ்கில்லோன்’ திட்டத்தின் மூலம், மத்திய அரசு உதவியோடு ரூ.7.5 லட்சம் வரை கடன் பெற ஏற்பாடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் தகுதி பெறாதவர்கள், உள்நாட்டு நிறுவனங்களிலேயே மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டியில் 3% வரை மத்திய அரசு மானியமாக கொடுக்கும்.
- அடுத்து, வேலைக்குச் சேரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, முதல் முறையாக வேலையில் சேர்பவர்கள் சேமநலநிதித் திட்டத்தில் (இபிஎப்) சேருகிறபோது, அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் அதிகபட்சமாக ரூ.15,000 வரை 3 தவணைகளில் வழங்கப்படும். மாத ஊதியம் ரூ.1 லட்சம் வாங்குகிறவர்கள் வரை இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
- உற்பத்தித் துறையில் இளைஞர்கள் வேலைக்கு சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் கட்டுகிற சேமநல நிதி மற்றும் நிறுவனம் கட்டுகிற சேமநல நலநிதி இரண்டையும், முதல் 4 ஆண்டுகளுக்கு மத்திய அரசு கட்டும். உற்பத்தி நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு புதிய ஊழியருக்காக நிறுவனம் கட்ட வேண்டிய சேமநல நிதியில் அதிகபட்சமாக ரூ.3,000 வரை 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசே கட்டும்.
- ஓராயிரம் ஐ.டி.ஐ.கள் ‘ஹப் & ஃபோக்’ விதத்தில் தரம் உயர்த்தப்பட்டு, அருகில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்ப பாடத்திட்டமும் பயிற்சியும் வழங்கப்படும் பட்ஜெட்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் படிப்புமுடித்து வரும் இளைஞர்களில் 51% பேர் வேலைக்கு தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்து.
- அதை மாற்றும் விதமாக படித்து முடித்தவர்களுக்கு நிறுவனங்களில் பயிற்சி கிடைப்பதற்காக ஒரு மாபெரும் இன்டர்ன்ஷிப் திட்டத்தையும் 2024-25 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அதன்படி நாட்டின் முன்னணி 500 பெரிய நிறுவனங்கள் படித்து முடித்து வருகிற இளைஞர்களுக்கு வேலை பழகும் இன்டர்ன் வாய்ப்பை தன்னார்வ முறையில் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
- அதில் ரூ.4,500-ஐ மத்திய அரசு வழங்கும். நபர் ஒருவருக்கு ரூ.500-ஐ அந்த நிறுவனங்கள் வழங்கும். இந்த செலவை தங்கள் கார்ப்பரேட் நிறுவன சமூக பொறுப்பு நிதியத்தில் இருந்து (சிஎஸ்ஆர்) பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படியாக, சில புதிய யோசனைகளுடன் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவை எவ்வளவு தூரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது இவற்றை செயல்படுத்தும் விதத்திலும் இருக்கிறது. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 07 – 2024)