TNPSC Thervupettagam

ஏ.டி.ஹெச்.டி. அதீதத் துறுதுறுப்பு ஆபத்தா?

June 1 , 2024 30 days 58 0
  • சில நேரம் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக்கூடப் பிரபலங்கள், குறிப்பாகத் திரைப் பிரபலங்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களைக் கூறுவது உதவும். ஒருகாலத்தில் நடிகை சாவித்திரி ‘கோமா’வில் பல மாதங்கள் இருந்தபோது ‘கோமா’ என்கிற வார்த்தை பொதுமக்களிடையே பரவலாயிற்று.
  • குறிப்பாக மனநலப் பாதிப்புகள் போன்ற நோய்களைப் பொறுத்தவரைப் பிரபலங்கள் இதுபோல் கூறுவது சமூகத்தில் அந்நோய் பற்றிய அவமான உணர்வு (Stigma) குறைய உதவும். பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தான் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
  • அதன்பின் அவர் இந்திய மனநல மருத்துவச் சங்கத்தின் தூதராக மாறினார். இதுபோல் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸில் தனக்கு ஏ.டி.ஹெச்.டி பாதிப்பு இருந்ததாக அண்மையில் கூறியதும் அந்தப் பாதிப்பு குறித்துச் சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

ஏ.டி.ஹெச்.டி என்பது என்ன?

  • கவனக் குறைவு மற்றும் அதீதத் துறுதுறுப்பு (Attention Deficit Hyperactivity Disorder) என்பது இதன் பொருள். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் மிக முக்கியமானது இது. கிட்டத்தட்ட உலக அளவில் 3% குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மனித இனத்தில்தான் குழந்தைகள் பிறந்து, வளர்ந்து, முழுமையான வளர்ச்சியடைய நீண்ட காலம் (18-20 ஆண்டுகள்) ஆகிறது. மனித மூளையும் அப்படித்தான். பிறந்தது முதல் பதின்பருவத்தைக் கடப்பது வரை வளர்ச்சியும் மாற்றமும் அடைந்து கொண்டே இருக்கிறது.
  • இதில் எந்தக் கட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது சிந்தனை, உணர்வுகள், செயல்பாடு களைப் பாதிக்கிறது. இவற்றை ‘மூளை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள்’ எனப் பொதுவாக அழைக்கிறோம். அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், டிஸ்லெக்ஸியா போன்ற பாதிப்புகள் இவற்றில் அடங்கும். ஏ.டி.ஹெச்.டியும் இந்த வகைப் பாதிப்புதான்.

அதீத துறுதுறுப்பு:

  • இந்தப் பாதிப்பின் இரு முக்கிய விஷயங்கள் அதீதத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைவு. இந்தப் பாதிப்பு இருக்கும் குழந்தைகள் அதீதச் சுறுசுறுப்பாகவும் துறுதுறுப்பாகவும் இருப்பார்கள். இவர்களால் ஓரிடத்தில் அமைதியாக இருக்க முடியாது. வழக்க மாகக் குழந்தைகள் துறுதுறுப்பாக இருப்பார்கள். ஆனால், இந்தப் பாதிப்பு இருக்கும் குழந்தைகள் அதீதச் சேட்டைக்காரர்களாக இருப்பார்கள்.
  • வகுப்பிலோ பொது இடங்களிலோ ஓரிடத்தில் கொஞ்ச நேரம்கூட அமர்ந் திருக்க முடியாது. ஓடுவது, ஆபத்தான இடங்களில் ஏறுவது போன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். உட்கார்ந்து விளையாடக்கூடிய விளை யாட்டுகளை விளையாட முடியாது. கல்யாண வீடுகள், கூட்டங்கள் போன்ற இடங்களில் இவர்களை அமர வைக்கவே இயலாது. அதிகமாகப் பேசுவார்கள். பரபரப்பாகவே இருப்பார்கள்.

பொறுமையின்மை:

  • அதீதத் துறுதுறுப்பின் நீட்சியாக இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குப் பொறுமை மிகக் குறைவாக இருக்கும். வரிசையில் இவர்களால் காத்திருக்க முடியாது. விளையாட்டுகளிலோ சாப்பிடும்போதோ தனது முறை வரும் வரை பொறுமையாகக் காத்திருக்க மாட்டார்கள்.
  • அதேபோல் வகுப்பில் கேள்வி கேட்கும்போது யாருக்கான கேள்வி என அறிவிப்பதற்கு முன் பதிலளிப்பார்கள். பிறருடன் உரையாடும் போதும் அவர்கள் உரையாடலை முடிக்கும் முன்னரே பதிலளிப்பார்கள். விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் மனதில் தோன்றுவதை உடனே செய்வார்கள், சொல்வார்கள். இது ‘முன்யோசனையில்லாத் தன்மை’ (impulsivity) எனப்படுகிறது.

கவனக்குறைவு:

  • உடல் மட்டுமல்ல, மனமும் அலை பாய்ந்துகொண்டே இருப்பதால் எதிலும் ஆழ்ந்த கவனமில்லாத் தன்மை தோன்றும். பிறர் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கவே மாட்டார்கள். ஒரு விஷயத்தைச் செய்யும்போதே வேறொரு தூண்டுதல் வந்தால் உடனே கவனம் சிதறிவிடும்.
  • இதனால், நிறைய மறந்து விடுவார்கள். அன்றாடம் செய்யும் செயல்களிலும் கவனம் இல்லாமல் பொருள்களைத் தேடுவார்கள், தொலைப்பார்கள், மறந்து விடுவார்கள். பொறுமையாக அமர்ந்து வீட்டுப் பாடம் செய்வது, படிப்பது, எழுதுவது போன்ற செயல்களில் மனம் செல்லாது. இதனால், பாடங்களைக் கற்பதில் சிக்கல்கள் எழும்.

பிற பாதிப்புகள்:

  • இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குப் படிப்பதிலும் ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிப்பதிலும் சிக்கல்கள் எழும். சிலர் பிறரை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடும். உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமை, முன்யோசனை இல்லாமல் செயல்களில் ஈடுபடுவது போன்ற குணங்களால் வன்முறை, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, போதைப் பழக்கம் போன்ற அபாயங்களும் ஏற்படும். குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்கள், பதின்வயதினரிடையே ஏ.டி.ஹெச்.டி பாதிப்பு அதிகமாக இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஏன் இந்தப் பாதிப்பு?

  • இந்தப் பாதிப்பைப் புரிந்துகொள்வ தற்கு நாம் மூளையின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நமது மூளையில் நாம் ஒரே விஷயத்தைக் கவனித்துச் செய்யும்போதே சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை அடிக்கடி கவனிப்பதற்காகச் சில அமைப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போது ‘டொம்’ எனப் பக்கத்தில் சத்தம் கேட்டால் திரும்பிப் பார்ப்பீர்கள், அல்லவா? இதுபோல் சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க டோபமின் போன்ற வேதிப்பொருள்கள் மூளையில் செயல்படுகின்றன.
  • இந்தச் செயல்பாடு அதீதமாக ஆகும்போது அடிக்கடி கவனம் சிதறி ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது இரண்டு நிமிடங் களுக்கு ஒருமுறை வாசலைப் போய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தால் படத்தில் கவனம் செல்லாது அல்லவா? அது போலத்தான் இதுவும்.

செல்போன்களும் தூண்டுதல்களும்:

  • ஸ்மார்ட் போன்களில் ஏராளமான ஆர்வமூட்டும் தூண்டுதல்கள் இருப்பதால் சிறு குழந்தைகளுக்கு நீண்ட நேரம் ஸ்மார்ட் போன்களைக் காட்டுவது இந்தக் கவனச் சிதறலை அதிகரிக்கும். பெரியவர்களுக்கே செல்போன், இணையம், சமூக ஊடகங்கள் போன்றவை கவனச் சிதறல் உண்டாக்கும்போது குழந்தைகளுக்கு இவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

படைப்பூக்கமும் கற்பனைத் திறனும்:

  • அதேநேரம் ஏ.டி.ஹெச்.டி என்றால் ஏதோ தீர்க்க முடியாத நோயோ, சாபமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை ஆராயும் குணமும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் குணமும் இவர்களுக்குச் சிறிது அதிக மாக இருக்கிறது, அவ்வளவுதான். இதனால், பாதகங்கள் இருப்பதுபோல் நன்மைகளும் இருக்கும். ஆராய்ந்து பார்க்கும் குணம் அதிகம் இருப்பதால் கற்பனைத் திறனும் படைப்பூக்கமும் அதிகமாக இருக்கும்.
  • கூச்சப் படாமல் தயக்கமின்றித் தங்களுக்குத் தோன்றியதைச் சொல்வதால், செய்வதால் பிறரோடு நன்றாகப் பழகுவது, தங்கள் திறமையை வெளிப்படுத்துவது எனச் சில விஷயங்களில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். நடிகர் ஃபகத் ஃபாஸிலுக்குக்கூட இக்குணங்கள் அவர் மிகச் சிறந்த நடிகராக இருக்க உதவியிருக்கும். ஆகவே, இது குறித்துக் கவலை வேண்டாம். கொஞ்சம் கவனம் இருந்தால் போதும்.

தீர்வு என்ன?

  • ஏ.டி.ஹெச்.டியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே அதைக் கண்டறிந்து சிகிச்சை அளித் தால் பலன் இருக்கும். இவர்களது சுற்றுப்புறத்தில் அதிகத் தூண்டுதல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்யச் சொல்லாமல் சின்ன சின்ன வேலைகளாகச் செய்ய வைக்க வேண்டும்.
  • அவர்கள் ஆர்வம் இழக்காத வகையில் கவனம் குவிக்க மூளைக்கு வேலை தரும் பயிற்சிகள் தரவேண்டும். உடற்பயிற்சி, தியானம் போன்றவை பலன் தரும். தேவைப்பட்டால் மூளை வேதிப்பொருள்களின் சீர்குலைவைச் சரிசெய்ய மருந்துகளும் எடுக்க வேண்டி யதிருக்கும். விழிப்புணர்வும் முறையான சிகிச்சையும் இருந்தால் இந்தப் பாதிப்பினை வெகுவாகக் குறைக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்