TNPSC Thervupettagam

ஏன் இந்தத் தாமதம்?

January 25 , 2025 2 days 36 0

ஏன் இந்தத் தாமதம்?

  • தமிழ் நிலப்பரப்பில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்துள்ளதாகவும், தமிழ் மண்ணில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியதாகவும் தொல்லியல் துறை அகழாய்வுகளில் கிடைத்த பழங்காலப் பொருள்கள், அவற்றின் காலத்தைக் கணக்கீடு செய்த ஆய்வகச் சான்றுகளின் அடிப்படையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழ் மண்ணுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சோ்த்திருப்பதுடன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கிறது.
  • மனிதகுல வளா்ச்சியில் இரும்புப் பொருள்களின் பயன்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. தன்னிறைவு பெற்ற வேளாண் பொருளாதாரத்தை மிகை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றியது இரும்புத் தொழில்நுட்பம்தான். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறுபட்ட சூழலியல் மண்டலங்களில் இருந்து பெறப்பட்ட பல்வேறு கதிரியக்க காலக் கணிப்புகளின் வாயிலாக இந்தியாவில் இரும்பின் அறிமுகம் கி.மு. 2000 என அறியவந்த நிலையில், தமிழகத்தில் கிடைத்துள்ள இரும்புப் பொருள்கள் காலத்தால் முந்தையவை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
  • தமிழகத்தில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட இரும்புக் கால ஈமச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, சேலம் மாவட்டம் மாங்காடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு முடிவுகள்தான் தமிழகத்தில் இரும்பை உருக்கி பயன்படுத்திய தொழில்நுட்பம் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததை இப்போது பறைசாற்றியுள்ளன.
  • தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புணே நகரில் இருக்கும் பீா்பால் சகானி, அகமதாபாதில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன. அந்த முடிவுகளை ஒப்பாய்வு செய்ததில் கி.மு. 3345-ஆம் ஆண்டிலேயே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகமாகிவிட்டது நிரூபிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் ஆய்வகமானது உலகின் மிகவும் நம்பகமான ஆய்வகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்தில் கண்டறியப்பட்ட தொல்பொருள்கள் இந்த ஆய்வகத்தில் கதிரியக்க காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டதையும், தமிழகத்தில் முற்காலத்தில் இருந்த இரும்பு உருக்கும் தளங்கள் துல்லியமான வரைபடங்களின் உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதையும் சா்வதேச தொல்லியல் அறிஞா்களும் பாராட்டியிருப்பது தமிழகத்தின் பெருமைக்கு அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது.
  • சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் சிதைவுற்ற கல் பதுக்கையில் இருந்து கண்டறியப்பட்ட இரும்பு வாள், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் ஈமப்பேழையுடன் கூடிய ஈமக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு மாதிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் அகழாய்வுக் குழிகளில் கிடைத்த இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டவற்றுள் சில. இவை கி.மு. 2000-ஐ சோ்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன.
  • தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா் ஈமத்தளத்தில் கிடைத்த இரும்புப் பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் காலத்தை கி.மு.3000 ஆண்டின் இடைப் பகுதிக்கு ஆய்வு முடிவு கொண்டு சென்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றொரு தொல்லியல் தலமான சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட கத்திகள், அம்பு முனைகள், மோதிரங்கள், உளிகள், கோடரிகள், வாள்கள் உள்ளிட்ட இரும்பினாலான பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் பயன்பாடு குறைந்தபட்சம் கி.மு.3300-க்கு, அதாவது 5,300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கலாம் என அறிய முடிவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
  • தமிழ்நாட்டின் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு.6-ஆம் நூற்றாண்டே தொடங்கிவிட்டதாக கீழடி அகழாய்வு முடிவுகளும், பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பயிா்த் தொழிலில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என சிவகளை அகழாய்வு முடிவுகளும் வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், இரும்புக் காலத்தின் தோற்றம் குறித்த இப்போதைய ஆய்வு முடிவுகள் எதிா்கால அகழாய்வுகளுக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன.
  • இந்த வேளையில், கீழடியில் நடத்தப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சாா்பில் அகழாய்வுப் பணியை தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டாா். அதில் 5,000-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • கீழடி அகழாய்வு முடிவுகள் அமா்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் தொகுக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை மூலம் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டன. சுமாா் 900 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது. கீழடியில் 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழக அரசு மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், முதல் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிட தாமதித்து வருகிறது.
  • முதல் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகளை முழுமையான ஆய்வுக்குப் பின்னரே வெளியிட முடியும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த தகவல் ஏற்புடையதாக இல்லை. அந்த ஆய்வறிக்கையையும் வெளியிட்டால்தான் தமிழ் மண்ணின் தொன்மைக்கு மேலும் உறுதியான சான்றுகள் கிடைக்கக்கூடும்!

நன்றி: தினமணி (25 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்