TNPSC Thervupettagam

ஏன் எல்ஐசியைப் பாதுகாப்பது முக்கியம்?

February 6 , 2020 1803 days 839 0
  • இந்திய சாமானியர்களை அதிரவைத்த அறிவிப்புகளில் ஒன்று என்று அதைச் சொல்லிவிடலாம். ‘ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் அரசுக்குள்ள பங்குகளை விற்போம்’ என்று நிதிநிலை அறிக்கையில் அரசு செய்துள்ள அறிவிப்பை ஏனைய பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்புகளின் தொடர்ச்சிபோல பார்க்க முடியாது.

எல்ஐசியின் வரலாறு

  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உருவான காலகட்டத்தை நாம் தெரிந்துகொண்டால்தான் அரசு எடுத்திருக்கும் முடிவு எவ்வளவு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
  • 1945-லிருந்து அடுத்த பத்தாண்டுகளில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பலவும் மக்கள் சேமிப்பைத் திரட்டி, வெவ்வேறு சொந்தத் தேவைகளுக்காக மடை மாற்றிக்கொண்டிருந்தன. ஏறக்குறைய 25 காப்பீட்டு நிறுவனங்கள் அப்போது திவாலாயின. மேலும், 25 நிறுவனங்களின் வர்த்தகம், பாலிசிதார்களுக்கு நஷ்டம் ஏற்படும் விகிதாச்சாரத்தில், வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்பட்டன. இன்னும் 75 நிறுவனங்கள் ‘போனஸ்’ வழங்கக்கூட வக்கற்றிருந்தன. இத்தகு சூழலில்தான் மக்கள் பணத்தைப் பாதுகாத்திட அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்திட வேண்டியிருந்தது.
  • அக்காலகட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் விலாவரியாகப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிவந்த ஒருவரை அன்றைய நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் தமது இல்லத்திற்கே அழைத்து, இதுகுறித்துப் பேசுகிறார். இந்தப் பிரச்சினைக்கு ஒரு மாற்று வழியை யோசிக்குமாறு கோருகிறார். அந்தக் கட்டுரையாளர் முன்னின்று இன்னொருவரையும் இணைத்துக்கொண்டு ஒரு மாற்றுத் திட்டத்தை வடிவமைக்கின்றனர். அதுதான் 1956 ஜனவரியில் அவசரச் சட்டம் மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) தோற்றத்துக்கு வழிவகுக்கிறது. அந்தக் கட்டுரையாளர் ஒரு தமிழர் என்பது இங்கே தமிழர்கள் நாம் பெருமை கொள்ள வேண்டியதாகும். எஸ்.எஸ்.விஜயராகவன் என்கிற அந்த அறிஞர், தமிழகத்தின் மூத்த கல்வியாளரான ச.சீ.இராஜகோபாலனின் சகோதரர்; தமது தொடர் களப்பணியில், பாம்புக் கடியில் உயிர் நீத்தவர் விஜயராகவன்.

பல்லாயிரம் கோடி பலன்கள்

  • எல்ஐசியை உருவாக்குகையில் அரசு செய்த முதலீடு வெறும் ரூ.5 கோடிதான். ‘ஆழக் குழி வெட்டி அதிலொரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை, அது என்ன?’ என்று அக்காலத்திய விடுகதை ஒன்று உண்டு. தென்னை மரம் என்பது விடை. அப்படியாக, எல்ஐசி அந்த ரூ.5 கோடி முதலீடுக்குப் பதிலீடாக இந்த நாட்டின் அரசுக்கு இதுவரை கொடுத்திருப்பது எவ்வளவு தெரியுமா? பல்லாயிரம் கோடிகள். கடந்த நிதியாண்டில் அரசுக்கு ஈவுத் தொகையாக எல்ஐசி கொடுத்திருப்பது மட்டும் ரூ.2,611 கோடி எனும் ஒருவரித் தகவல் வழி மொத்த தொகையை நாம் கணக்கிட முற்படலாம். இந்தியாவின் ஐந்தாண்டு திட்டச் சாதனைகள் யாவற்றுக்கும் முக்கியமான நிதியாதாரம் எல்ஐசி மூலம் அரசுக்குக் கிடைத்ததுதான்.
  • ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் பல லட்சம் கோடியை எல்ஐசி கொடுத்துவருகிறது. 2012-2017ல் கொடுத்திருப்பது 14 லட்சத்து 23 ஆயிரத்து 55 கோடி ரூபாய். அது மட்டுமல்ல; ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் பல்வேறு ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும் அரசின் பத்திரங்களிலும் எல்ஐசி முதலீடு செய்துள்ள தொகை ரூ.28,84,331 கோடி!
  • இப்போது பட்ஜெட் அறிக்கையிலேயே பங்குகளை விற்கப்போகிறோம் என்றும் அறிவித்துவிட்டனர் தற்போதைய ஆட்சியாளர்கள். ஏன் இந்த முடிவு? எவ்வளவு விற்கப்போகிறார்கள், எந்த மதிப்பில்? கேட்டால், இன்னும் முழுத் திட்டம் வகுக்கவில்லை. ‘இப்படி உடனே உடனே கேட்கக் கூடாது, பொறுத்திருங்கள்’ என்று அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

உலகில் முதலிடம்

  • பொதுத் துறை நிறுவனங்கள் என்றாலே மோசம் என்ற வாதத்தைத் தொடர்ந்து தன்னுடைய செயல்பாடுகளால் சுக்குநூறாக்கிவந்திருக்கிறது எல்ஐசி. இந்தியா தனியார்மயக் கொள்கைகளை வரித்துக்கொண்ட பின் பல நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையில் போட்டிக்கு வந்தாலும் இன்றும் எல்ஐசியின் இடத்தை யாராலும் நெருங்க முடியவில்லை. காரணம் அதன் நம்பகத்தன்மை. பாலிசிதாரர்களது நம்பிக்கை பொய்க்காத வகையில் பணப் பட்டுவாடாவை முடிப்பதில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது எல்ஐசி. விளைவாக, இன்றைக்கு 40 கோடி பாலிசிகளுடன் காப்பீட்டுத் துறையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது எல்ஐசி. அதன் மொத்தச் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.32 லட்சம் கோடி என்கின்றனர்.
  • இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை ஏன் அரசு பங்கு பிரித்து விற்க முற்பட வேண்டும்? நிறுவனங்களை விற்றுச் செலவுக்கு வழி தேடுவது என்ன வகையிலான சாமர்த்திய அரச நிர்வாகம்?
  • எல்ஐசி நிறுவனத்தின் உருவாக்கத்தின் பின் எவ்வளவு பெரிய தொலைநோக்கு இருந்தது என்பதை நாம் உணர வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு ஆற்றிய உரையைக் கொஞ்சம் கவனிக்கலாம்: “ஆயுள் காப்பீட்டை தேச உடைமையாக்குவது ஒரு சோஷலிஸ சமூகத்தை நோக்கி நாம் நடைபோடுவதாகும்.” முன்னதாக, ஜனவரி 1956-ல் காப்பீட்டுத் துறையை நாட்டுடைமையாக்கும் மசோதாவை வானொலி அறிவிப்பின் மூலம் செய்த அன்றைய நிதியமைச்சர் டாக்டர் சிந்தாமணி தேஷ்முக் கூறியதையும் நாம் நினைவுகூரலாம்: “ஒரு தேசத்தின் சேமிப்புதான் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி உந்தித் தள்ளும் முக்கிய விசை.”
  • இன்றைய மோடி அரசு மேற்கண்ட இரு விஷயங்களுக்கும் முரணாகச் செல்கிறது என்பதை விவரிக்கவும் வேண்டுமா?

மக்கள் கடமை

  • இந்தியக் காப்பீட்டுச் சந்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்போதும் பசுமைக்காடு. அதனால்தான் காப்பீட்டுத் துறையில் ‘திறந்து விடு, திறந்து விடு’ என்ற குரல் வெளியிலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்க முடியாத ஒரு அரசு இதைத் தக்க தருணமாகப் பார்க்கிறது.
  • உயிர்ப் பாதுகாப்பு என்ற அகல் வெளிச்சத்தை இரண்டு கைகளால் காத்துக்கொண்டே இருக்கும் எல்ஐசியின் லச்சினை இதுவரை இந்திய மக்களின் சேமிப்பைக் காத்துவருவதைச் சொல்லாமல் சொல்கிறது. இப்போது மக்களாகிய நம்முடைய முறை. நாம் எல்ஐசி எனும் அந்த உயிரோட்டமான இயக்கத்தை நம் கரங்களால் அணையவிடாது பாதுகாக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்