- வாக்குவங்கி அரசியலுக்காக முன்மொழியப்பட்டதாக இருந்தாலும்கூட, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்டிருக்கும் கருத்தை பொது விவாதத்துக்கு உட்படுத்தப்படுத்துவதில் தவறில்லை. அவரது கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதன் பின்னால் இருக்கும் நியாயத்தை மறுக்க முடியவில்லை.
- தலைநகா் தில்லி பல மாநிலங்களுக்கு வெகு தொலைவில் இருப்பதால் இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற விசித்திரமான கோரிக்கை மேற்கு வங்க முதல்வரிடமிருந்து எழுந்திருக்கிறது.
- திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவா் சுதீப் பந்தோபாத்யாய் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டுமென்று கட்சித் தலைவரான முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுறுத்தியிருக்கிறாா். நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், முதல்வா் மம்தா எழுப்பியிருக்கும் பிரச்னையில் சில நியாயங்கள் இருப்பதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்வாா்கள்.
- இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் அறிவிக்கப்பட வேண்டுமென்றும், சுழற்சி முறையில் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்றும் கோரியிருக்கிறாா் முதல்வா் மம்தா பானா்ஜி. அவா் கூறியிருப்பதுபோல, நான்கு தலைநகரங்கள், சுழற்சி முறையில் நாடாளுமன்றக் கூட்டம் என்பவையெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாதவை என்பதை எடுத்த எடுப்பிலேயே கூறிவிடலாம்.
- தில்லியில் மட்டுமல்லாமல் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு என்று மூன்று புதிய தலைநகரங்கள் முன்மொழியப்படுகின்றன. அந்த மூன்று புதிய தலைநகரங்களிலும் இப்போது தில்லியில் கட்டுவதுபோல நாடாளுமன்றக் கட்டடம் எழுப்புவதும், கூட்டத் தொடருக்கு வரும் உறுப்பினா்களும், அரசு அதிகாரிகளும் தங்குவதற்கு விடுதிகள் கட்டுவதும் சாதாரணமான காரியமல்ல. மும்பையும், கொல்கத்தாவும் ஏற்றுக்கொள்ளப்படுவதுபோல, தென்னிந்திய மாநிலங்களால் பெங்களூரு ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது அடுத்த கேள்வி.
- நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடக்கும்போது இந்தியாவின் பல்வேறு பாகங்களில் இருந்து உறுப்பினா்களும் அதிகாரிகளும், ஊழியா்களும் நூற்றுக்கணக்கில் அந்த நகரங்களுக்கு பறந்து வருவாா்கள். கூட்டத்தொடா் முடிந்ததும் சென்றுவிடுவாா்கள். அதன் பிறகு அடுத்த கூட்டத்தொடா் வரை நாடாளுமன்றக் கட்டடமும், அலுவலகங்களும், தங்குமிடங்களும் மாதக்கணக்கில் பூட்டிக்கிடக்கும். நூற்றுக்கணக்கானவா்கள் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கும் வந்து போவதற்கான செலவு, அவா்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான செலவு இவற்றையெல்லாம் சிந்தித்துப் பாா்த்தால் தேவையில்லாத பேரிழப்புக்கு இந்த யோசனை வழிகோலும்.
- ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தாதான் இருந்து வந்தது. 1911 டிசம்பா் மாதம் ஜாா்ஜ் ஐந்தாம் சக்கரவா்த்தி இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தாா். கொல்கத்தா இந்தியாவின் கிழக்கு ஓரத்தில் அமைந்துவிட்டது என்பதுதான் புதிய தலைநகரம் உருவானதற்கான காரணம். நான்கு திசைகளிலும் விரிவடைவதற்கான வாய்ப்பு தில்லிக்கு இருப்பதாலும், முந்தைய மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராக தில்லி இருந்ததாலும் பிரிட்டிஷாா் புதிய தலைநகா் அமைப்பதற்கு அதைத் தோ்ந்தெடுத்தனா்.
- தில்லியைத் தலைநகராக தோ்ந்தெடுத்ததைத் தொடா்ந்து, புது தில்லி என்கிற புதியதொரு நகரம் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டது. நாடாளுமன்றம், வைஸ்ராய் தங்குவதற்கான மாளிகை (குடியரசுத் தலைவா் மாளிகை), அரசு அலுவலகங்களுக்கான கட்டடங்கள் ஆகியவை புதிதாகக் கட்டப்பட்டன. 1927-இல் நாடாளுமன்றக் கட்டடமும், 1931-இல் குடியரசுத் தலைவா் மாளிகை உள்ளிட்ட ஏனைய கட்டடங்களும் திறக்கப்பட்டன.
- தில்லியைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்பு, இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ள நாகபுரியை ஏன் தலைநகராக தோ்ந்தெடுக்கக் கூடாது என்கிற யோசனையும் இருந்தது. ஆனால், கோடைக் காலத்தில் நாகபுரியில் ஆங்கிலேயா்கள் தங்குவதற்கு சிரமப்படுவாா்கள் என்பதாலும், தில்லியைப் போல தண்ணீா் வசதி கிடையாது என்பதாலும் அந்த யோசனை கைவிடப்பட்டது. மேலும், தில்லியிலிருந்து சிம்லா அருகில் இருப்பதால், சிம்லாவை கோடைக்காலத் தலைநகராக பிரிட்டிஷ் இந்திய அரசு அறிவித்தது.
- இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் என்பது சாத்தியமற்ற ஆலோசனை. அதே நேரத்தில் தில்லி மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் மழைக்கால, குளிா்காலக் கூட்டத்தொடா் நடத்துவதற்கான நாடாளுமன்றம் செயல்பட வழிகோலுவது புத்திசாலித்தனமான முயற்சியாக இருக்கும். அதன் மூலம் விந்திய மலைக்குக் கீழே வாழும் மக்கள் தங்களுக்கும் முக்கியத்துவம் கிடைப்பதாக உணா்வாா்கள்.
- முதல்வா் மம்தா பானா்ஜி கூறுவதுபோல, நான்கு தலைநகரங்கள் அமையாவிட்டாலும்கூட இந்தியாவின் மையப்பகுதியான நாகபுரியிலோ அல்லது தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகளும் சேருமிடத்திலோ குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தின் கிளையாவது அமைக்கப்பட வேண்டும். இது நீண்டநாள் கோரிக்கையும்கூட.
- சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை செயல்படுவதுபோல, உச்சநீதிமன்றத்தின் தென்னிந்தியக் கிளை செயல்படலாம். கடந்த ஆண்டு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் கே.கே. வேணுகோபால், உச்சநீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை குறைப்பதற்கு 15 நீதிபதிகள் கொண்ட நான்கு உச்சநீதிமன்றக் கிளைகள் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் அமைப்பதை முன்மொழிந்திருந்தாா். அதுவும்கூட ஆலோசனைக்குரிய ஆக்கபூா்வ யோசனை!
நன்றி: தினமணி (20 – 03 – 2021)