TNPSC Thervupettagam

ஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது?

September 18 , 2020 1584 days 721 0
  • இந்தியாவின் பல முதல்வர்கள் நம்முடைய கூட்டாட்சித்துவத்தைச் சூழ்ந்திருக்கும் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வருவதைப் பற்றி முறையிடுகிறார்கள்.
  • ஜிஎஸ்டி இழப்பை ஈடுகட்டும் பொறுப்பிலிருந்து ஒன்றிய அரசு பின்வாங்குவது இன்றைய புகாருக்கான அடித்தளமாகும்; இது வெளித்தெரியாத ஒரு ஆபத்தின் வெளித்தெரியும் சிறு பகுதிதான்.
  • இன்னும் சிக்கலான பிரச்சினையானது தேசியம் தொடர்பிலான தவறான புரிதலிலும், ஜனநாயகம் மீதான அரசின் அலட்சியத்திலும் வேரூன்றியிருக்கிறது.
  • இந்தியாவின் ஜனநாயக தேசியம் தொடர்பிலான புரிதல் கொண்டவர்களின் கைகளில்தான் கூட்டாட்சித்துவம் இயங்க முடியும். ஏனென்றால், இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை; ஒன்றில்லாமல் மற்றொன்று முறைப்படி இயங்காது.

இரண்டு தேசியங்கள்

  • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தத் துணைக்கண்டத்தில் தேசியம் தொடர்பிலான இரண்டு விரிவான கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
  • முதலாவது வகையானது, வலுவாக ஒருங்கிணைக்கப்பட்ட கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு சமூகம் இரண்டு தேசியங்களாகப் பிரிக்கப்பட்டு, தனக்கென்று ஒரு அரசைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தாக்கம்.
  • கலாச்சாரமானது இன-மத அடிப்படையில் வரையறுக்கப்பட்டது; இந்த வரையறை ஒன்றேபோல் இருந்த இந்து மகாசபா, முஸ்லிம் லீக் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்டது.
  • இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி தேசங்களாக இருந்தார்கள் என்று கூறி தங்களுக்கென்று தனி அரசுகளை அவர்கள் கோரினார்கள்.
  • இந்து மகாசபாவைப் பொறுத்தவரை இந்திய தேசியம் என்பது இந்து தேசியமாகத்தான் இருந்தாக வேண்டியிருந்தது.
  • இந்து அடையாளத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையானது மதச் சிறுபான்மையினர்களுக்கு மட்டுமல்ல; தங்கள் மதத்தைப் போலவே தங்களின் மொழியையும் முக்கியமாகக் கருதிய மொழிச் சிறுபான்மையினருக்கும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
  • இந்து தேசியர்களைப் பொறுத்தவரை தமிழராகவோ பஞ்சாபியாகவோ இருப்பதைவிடவும் இந்து அடையாளம் என்பது முக்கியம்.
  • இரண்டாவது வகையானது, காங்கிரஸ் கட்சியின் சில பகுதியினரால் வெளிப்படுத்தப்பட்டது; அவர்களும் நாடு என்பதைப் பொதுவான கலாச்சாரத்தால் வரையறுக்கப்படுவதாகவும், அதைப் பின்பற்றுவோர் தங்களுக்கென்று ஒரு நாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கொண்டிருந்தார்கள்.
  • ஆனால், இந்தப் பொதுவான கலாச்சாரம் இன-மத அடிப்படையிலானது அல்ல. அது பொதுவான வரலாற்று அனுபவத்தால், அதாவது ஆங்கிலேயரின் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தால் வரையறுக்கப்படுவது; பல்வேறு கலாச்சார மூலங்களிலிருந்து வெளிப்படும் கருத்துகள் கலந்து வளர்ந்தது. இதற்கு இன்னும் நல்ல பெயரிட வேண்டும் என்றால், இந்த இரண்டாவது தேசியத்தைக் குடிமைத்துவம் என்று கூறலாம்.
  • எனினும், வியக்கத்தக்க வகையில், இந்த இரு தேசியங்களின் அடிப்படை வடிவங்களுக்கும் அதிக வேறுபாடில்லை.
  • ஏனென்றால், இரண்டாவதும் ஒற்றுமை என்ற வலுவான கருத்தாக்கம் என்ற பெயரில், முதலாவதைப் போலவே ஒரு பொதுக் கலாச்சாரத்தைக் கற்பனை செய்கிறது.
  • ஆனால், இந்த ஒற்றுமை தனித்த அடையாளங்களை விளிம்பு நிலைக்குத் தள்ளக் கூடியது அல்லது ஒதுக்கக் கூடியதாகும்.

இன்னொரு தேசியம்

  • இவற்றுக்கு வெளியே மூன்றாவதான ஒரு வகை தேசியமானது, தனித்ததும் பிராந்தியரீதியிலுமான கலாச்சாரங்களால் செழிப்படைந்திருக்கும் சமூகங்களை அனுமதிக்கிறது; இந்தச் சமூகங்கள் தங்களுக்குத் தாங்களே அரசுகளையும் கல்வி, சட்டம், பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளையும், பிற அமைப்புகளையும் உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை என்பதையும் ஒப்புக்கொள்கிறது.
  • அவற்றுக்கு சுயாட்சி உரிமைகள் உண்டு. எனினும், தனி நாடாக வேண்டும் என்ற விருப்பத்தை அவை வெளிப்படுத்துவதில்லை.
  • தங்களை ஒரு பெரிய, ஒன்றுக்கொன்று சமமான முக்கியத்துவம் பெற்ற பொதுக் கலாச்சாரத்தைக் கொண்ட, எல்லோருக்கும் சொந்தமான மற்றொரு அரசின் அங்கமாகவே அவை நினைக்கின்றன.
  • உண்மையில், இந்தப் பொதுக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே அவை கட்டமைக்கப்படுகின்றன; இப்படியாகத் திரண்டு ஒரு தேசமாக அவை ஒருங்கிணைகின்றன. ஒரு ஒன்றிய அரசின் பொதுக் கலாச்சாரத்துக்கும், அதன் அங்கமாக இருக்கும் வேறுபட்ட கலாச்சாரங்களுக்கும் இடையில் அவ்வப்போது மோதல்கள் ஏற்படக் கூடும்; எனினும், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்படும். இதை ஒன்றுதிரண்ட தேசியம் என்று அழைக்கலாம். இது ஓரளவுக்கு வலுவான, மொழி சார்ந்த கூட்டாட்சித்துவத்துடன் ஒத்திசைந்து இருக்கும்.

மூழ்கடிக்கப்பட்ட மூன்றாவது தேசியம்

  • இப்படி 1930-களில் அரசியல் மேட்டுக்குடிகளிடம் மேற்கண்ட மூன்று கருத்தாக்கங்களுமே புழங்கிவந்தன.
  • 1940-களிலோ இந்த மூன்றாவதான ஒன்றுதிரண்ட தேசியமானது ஏனைய இரண்டு தேசியங்களாலும் மூழ்கடிக்கப்பட்டது. தேசப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியா இன-மதரீதியிலான தேசியத்தை ஒதுக்கியது; ஆனால், அதன் ஆளும் மேட்டுக்குடி வர்க்கமானது, மேலும் நாடு துண்டுபடக் கூடுமோ என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மொழியடையாளம் சார்ந்த அரசியல் கருத்து வெளிப்பாடுகளைக்கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தது.
  • இது தொடர்பாக, ஜவாஹர்லால் நேரு அளவுக்கு அசௌகரியமாக உணர்ந்தவர்கள் வேறு யாரும் இல்லை; இன-மொழிரீதியில் ஒரு கூட்டரசு உருவாக்கப்பட்டால் அது மொழிரீதியில் அணிதிரள்வதற்கு அரசியலர்களைத் தூண்டி, நாட்டின் பொருளாதார நலன்கள் போன்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பிவிடுமோ என்று அவர் பயந்தார்.
  • மேலும், மத அடையாளங்களைப் போலவே, அது மொழி அடையாளங்களையும் உறையச் செய்து பிரிவினைக்குத் தூபம் போட்டு, இறுதியாக இந்தியாவைப் பிளவுபடுத்திவிடுமோ என்று அவர் அஞ்சினார்.
  • இப்படித்தான், 1950-ல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது இந்தியா ஒன்றிய அரசு சார்ந்த, குடிமைத்துவ தேசியத்தைத் தனது அதிகாரபூர்வ சித்தாந்தமாகத் தழுவிக்கொண்டது.
  • கூட்டாட்சித்துவ ஏற்பாட்டை ஒப்புக்கொண்டாலும் அரசாங்கத்தின் இரண்டாம் அடுக்கானது நிர்வாக அடிப்படையில் வரையறுக்கப்பட்டதேயொழிய பல்வேறு கலாச்சாரங்களை அங்கீகரிக்கும் வகையிலானதாக இல்லை. இந்தியாவின் பாதுகாப்பும் ஒற்றுமையும் முதன்மைக் காரணங்களாகச் சொல்லப்பட்டன.
  • ஆக, மையப்படுத்தப்பட்ட காலனிய அரசின் அனுபவத்தால் வடிவமைக்கப்பட்ட ஒன்றிய அரசு என்ற மனப்பான்மைக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது; பன்மைக் கலாச்சாரக் கூட்டரசுடன் இயைந்த ஒன்றுதிரண்ட தேசியம் என்ற கருத்தாக்கமோ என்றென்றைக்குமாகக் கைவிடப்பட்டதாகத் தோன்றியது.

பிராந்தியங்களிலிருந்து உருவான உயிர்

  • ஆயினும், இன அடையாளங்களை ஒட்டுமொத்தமாக உட்செரிக்கக் கூடிய பெரிய குடிமைத்துவ அடையாளத்தை நிராகரித்த மாநிலங்களின் அமைப்பொன்று நோக்கி மெதுவாக இந்தியா நகர்ந்தது; அப்போது, அதுவரை முக்கியத்துவம் கொடுக்காமல் வைக்கப்பட்டிருந்த மூன்றாவது தேசியமானது ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்தது.
  • தன்னாட்சி, அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகள் பிராந்தியத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டன. மொழி அடிப்படையிலான மாநிலங்கள் என்ற விவகாரம் வெகுமக்கள் போராட்டமாக உருவெடுத்து தெலுங்கு பேசும் மக்களுக்காக 1953-ல் ஆந்திரம் உருவானது.
  • உடனடியாக அதைத் தொடர்ந்து மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கான ஆணையம் அமைக்கப்பட்டது. எல்லா பிரதான மொழிக் குழுக்களையும் அங்கீகரிக்கக் கூடிய, பகுதி அளவில் சுயாட்சி கொண்ட மாநிலங்களை உருவாக்குவதுதான் நியாயம் என்று அந்தக் குழு கூறியது.
  • தவிரவும், அப்படிப்பட்ட மாநிலங்களை உருவாக்குவது நிர்வாகத் திறனை மேம்படுத்துவதுடன் ஜனநாயகத்தையும் வலுவாக்குகிறது, மொழிரீதியிலான மேலாதிக்கத்தால் பிராந்தியச் சிறுபான்மையினரிடையே தோன்றும் அச்சத்தை அகற்ற உதவுகிறது.
  • மேலாதிக்கமானது இறுதியில் எதிர்ப்புக்கும் மோதலுக்கும் வித்திடுவதுடன் தேசிய-அரசைக் கீழிறக்கக் கூடும், கூட்டாட்சித்துவம் மட்டுமே மொழிரீதியிலான பெரும்பான்மைவாதத்தைத் தடுக்கும், மோதல்களைக் கட்டுப்படுத்தும், இந்திய தேசியத்தை வலுப்படுத்தும்.

பிரிக்கப்பட்ட மாநிலங்கள்

  • மேற்கண்ட குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி 1956-ல் மாநிலங்கள் மறுவரையறுக்கப்பட்டன. கூடிய விரைவில், வெகு மக்கள் போராட்டங்கள் காரணமாக பம்பாய் மாகாணமானது மஹாராஷ்டிரமாகவும் குஜராத்தாகவும் பிரிக்கப்பட்டது.
  • 1966-ல் பஞ்சாபிலிருந்து ஹரியாணா பிரிக்கப்பட்டு, தனி மாநிலமானது. அதற்கும் வெகு காலம் கழித்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், உத்தராகண்டு போன்ற மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆக, இந்தியா மெதுமெதுவாக ஒன்றுதிரண்ட தேசிய-அரசாக ஆகிவந்தது.
  • இதற்கு, பிராந்தியக் கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் முன்பைவிட வலுவாக இருக்கின்றன என்பதே அர்த்தம் ஆகும்.
  • உண்மையில், இது நன்கு நீடிக்கக் கூடிய ஒன்றிய அரசுக்கான விதைகளைத் தூவியது. ஏனெனில், இது பிராந்தியக் குழுக்களின் பங்கேற்பையும் கருத்தொற்றுமையையும் சார்ந்திருந்தது.

மாநிலங்கள் சரிசமம்

  • இந்த ஒன்றுதிரண்ட தேசியம் இந்தியாவுக்கு நன்மைகளைத் தந்திருக்கிறது, பல்வேறு குழுக்களுக்கும் பலன் அளித்திருக்கிறது; இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளான வடகிழக்கிலும் காஷ்மீரிலும் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றாலும்கூட. ஆனால், ஒன்றுதிரண்ட தேசியத்தை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அவற்றின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமே தவிர அதைக் கைவிடுவதன் மூலம் அல்ல.
  • கூட்டாட்சித்துவத்தின் தற்கால நெருக்கடியானது ஒன்றுதிரண்ட, ஜனநாயக இந்திய தேசியத்தின் மீது சித்தாந்த அடிப்படையில் குறுகலாகவும் தார்மீகரீதியில் பலவீனமாகவும் இருக்கும் இந்து தேசியம் தொடுக்கும் தாக்குதலால் ஏற்பட்டது.
  • இந்தத் தாக்குதல் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் இந்தப் போக்குகளுக்கு முட்டுக்கட்டை போடப்படவில்லை என்றால் நமது தனித்த தேசியச் செயல்திட்டத்தில் பெரும் விரிசல்கள் ஏற்பட ஆரம்பிக்கக் கூடும் என்று அஞ்சுகிறேன். அது இந்தியக் குடியரசுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி:  தி இந்து (18-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்