- பொதுவாக உயிரினங்கள் தங்களின் உணவுத் தேவைக்காகவே பிற உயிரினங்களை வேட்டையாடுகின்றன. ஆனால், சில உயிரினங்கள் தாங்கள் ஈன்ற குட்டிகளையே உண்பதும் நடக்கிறது. உதாரணமாக, நாய்கள் குட்டி போடும்போது அவை ஒன்றிரண்டு குட்டிகளைத் தின்றுவிடுவதாகக் கேள்விப்பட்டிருப்போம்.
- நாய்கள் மட்டுமல்ல எலி, பன்றி, பறவைகள், சில குரங்கினங்கள்கூடத் தங்கள் குட்டிகளை உண்பது நடப்பது உண்டு. அவை ஏன் குட்டிகளைத் தின்கின்றன?
- ஓர் உயிரினத்தின் உயரிய நோக்கமே இனப்பெருக்கம் செய்து, தன் இனத்தைப் பிழைத்திருக்க வைப்பதுதான். ஆனால், இந்த நோக்கத்துக்கு மாறாக ஓர் உயிரினம் தன் குட்டிகளையே தின்பது என்பது அதன் இனத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் இல்லையா? பிறகு ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
- உண்மையில் தன் இனத்தைப் பிழைக்க வைப்பதற்கான ஏற்பாடாகவே விலங்குகள் குட்டிகளைத் தின்பதாக அறிவியல் கூறுகிறது. பொதுவாகப் பல்வேறு காரணங்களுக்காக விலங்குகள் தம் குட்டிகளைத் தின்கின்றன. அதில் முதல் காரணம் எண்ணிக்கையைக் குறைப்பது.
- ஹேம்ஸ்டர் என அழைக்கப்படும் வெள்ளெலிகள் வழக்கமாக 8-9 குட்டிகள் வரை ஈனுகின்றன. இவற்றில் ஒன்றிரண்டு குட்டிகளைத் தாயே தின்றுவிடுகிறது. இதை ஏன் என்று அறிவதற்காக விஞ்ஞானிகள், ஒரு தாய் வெள்ளெலியைத் தேர்ந்தெடுத்து அது இரண்டு குட்டிகளைத் தின்றவுடன், மீண்டும் இரண்டு குட்டிகளை அதன் வாழ்விடத்தில் விட்டனர். அதையும் அந்தத் தாய் வெள்ளெலி தின்றது.
- இதை அடுத்து அந்த வெள்ளெலி அடுத்தமுறை குட்டிகளை ஈன்றவுடன் அவற்றில் இருந்து இரண்டு குட்டிகளை விஞ்ஞானிகள் எடுத்துவிட்டனர். இப்போது அந்தத் தாய் வெள்ளெலி எந்தக் குட்டியையும் உண்ணவில்லை. இது ஏன் என ஆராய்ந்தபோது, அந்தத் தாய் தன் இனத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே அவ்வாறு செய்தது என்று தெரியவந்தது. தேவைக்கு அதிகமான குட்டிகளை ஈனும்போது அவற்றுக்கு உணவிலும் இடத்திலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதன் காரணமாக எல்லாக் குட்டிகளும் பாதிக்கப்படாமல் இருக்க, தாயே ஒன்றிரண்டு குட்டிகளைத் தின்றுவிட்டது. இதையேதான் மற்ற உயிரினங்களும் செய்கின்றன.
- இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவை ஏனோதானோ என்று குட்டிகளைச் சாப்பிடுவதில்லை. எந்தக் குட்டி பலவீனமாக இருக்கிறதோ, பிழைத்திருக்கும் வாய்ப்பு எதற்கு குறைவோ அதை மட்டுமே உண்கின்றன. இதன்மூலம் மற்ற குட்டிகள் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பெண் விலங்குகள் பலவீனமான குட்டிகளை வளர்ப்பதற்கு நேரம் செலவிடுவதற்குப் பதில், ஆரோக்கியமான புதிய தலைமுறையை உருவாக்குவதற்காக அவ்வாறு செய்கின்றன.
- எண்ணிக்கை மட்டுமல்ல, எதிரிகளின் ஆதிக்கம் அதிகமாகும்போதும் சில விலங்குகள் குட்டிகளைத் தின்றுவிடுகின்றன. அரணைகள் தம் முட்டைகளுக்கு எதிரிகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால், அவற்றைத் தின்றுவிடுகின்றன. தாம் உருவாக்கிய முட்டைகளை யாருக்கோ உணவாகக் கொடுப்பதைவிட, தாமே அவற்றைத் தின்று வேண்டிய ஊட்டச்சத்துகளைப் பெற்றுக்கொள்கின்றன. ஆனால், அடுத்த முறை பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்து அவை மீண்டும் முட்டைகளை இடுகின்றன.
- சில நேரம் தாய்க்கு உணவு கிடைக்காதபோதும் குட்டிகளை உண்பது உண்டு. கோழிகள் கால்சியம் ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக, முட்டைகளை உடைத்து விடுகின்றன.
- இயற்கையில் வேட்டை விலங்குகள் மட்டும் குட்டிகளை உண்பதில்லை. தாவரங்களை உண்ணும் நீர்யானை போன்ற விலங்குகள்கூட அவ்வாறு செய்கின்றன. ஆனால், அவை குட்டிகளைத் தாமாகக் கொல்லாமல் அவை பிறக்கும்போது இறந்துவிட்டால் மட்டுமே உண்கின்றன.
- சில விலங்குகள் இனப் பெருக்கத்துக்குத் தடையாக குட்டிகளே வரும்போது அவற்றைக் கொன்று விடுவதும் நிகழ்கிறது. பரிணாமத்தின் கண்ணோட்டத்தில் இனப்பெருக்கம் எந்த அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறதோ அந்த அளவுக்கு அந்த உயிரினம் தன்னை, பூமியில் நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அதற்குக் குட்டிகளே தடையாக இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
- உதாரணமாக, சில மீன்கள் தங்கள் முட்டைகளை அவை பொரியும் வரை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் முட்டைகள் பொரியாத போது அவற்றைப் பாதுகாத்துத் தன் ஆற்றலை வீணடிப்பதைவிட, அந்த முட்டைகளைத் தின்றுவிட்டுப் புதிய முட்டைகளை உற்பத்தி செய்யும் வேலைகளில் இறங்கிவிடுகின்றன.
- சிங்கம், சிம்பன்சி போன்ற விலங்கினங்களில் ஆண்கள் அதிகாரப் போட்டியால் சில நேரம் குட்டிகளைக் கொல்வது உண்டு. மனிதர்கள் பூமியில் ஏற்படுத்திவரும் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மறைமுகமாக விலங்குகளின் சிசுக்கொலைகளை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, ஆர்க்டிக் பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தால் துருவக் கரடிகளின் வாழ்விடங்கள் அழிகின்றன. இதனால் பிறக்கும் குட்டிகள் வளர்வதற்குத் தேவையான வளங்கள் கிடைக்காதபோது தாய்க் கரடிகளே குட்டிகளைக் கொல்கின்றன.
- மனிதர்கள் வன விலங்குகளின் அன்றாட நடத்தைகளில் ஊடுருவுவதும் அவற்றுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி குட்டிகளைக் கொல்லும் நிலைக்குச் இட்டுச் செல்கிறது. குறிப்பாக வனத்தில் இருந்து பிடித்துவரப்பட்ட விலங்குகள் செயற்கைச் சூழலில் குட்டிகளை ஈனும்போது, அவற்றைக் கொல்ல முயல்கின்றன. அந்த விலங்குகளுக்கு மனரீதியாக ஏற்படும் அழுத்தமே அவை ஆக்ரோஷமாக இயங்குவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 10 – 2023)