TNPSC Thervupettagam

ஏன் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் முக்கியமானதாகிறது

April 14 , 2021 1380 days 609 0
  • ஒரு காலத்தில் இந்தியக் கிராமம் குடியமர்ந்த சமூகத்தினரையும் சிதறுண்ட சமூகத்தினரையும் கொண்டதாக இருந்தது; அவர்களில் ஒரு சமூகத்தினர் கிராமத்துக்குள்ளேயும் இன்னொரு சமூகத்தினர் கிராமத்துக்கு வெளியேயும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும் அவர்களிடையே சமூக உறவுகள் வளர்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.
  • இதையெல்லாம் இதுவரை நாம் நடத்தியுள்ள ஆய்வுகளும் விவாதங்களும் காட்டுகின்றன. ஆனால் பசு புனிதமான பிராணியாக்கப்பட்டு, மாட்டிறைச்சி உண்பது தடை செய்யப்பட்ட பிறகு சமுதாயம் இரண்டாகப் பிளவுபட்டது. குடியமர்ந்த சமூகத்தினர் தீண்டத்தக்க சமூகத்தினராகவும், சிதறுண்ட மக்கள் தீண்டப்படாத சமூகத்தினராகவும் ஆனார்கள்.
  • தீண்டாமை தோன்றிய காலத்தைத் துல்லியமாக நிர்ணயிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. தீண்டாமை என்பது சமூக மனோபாவத்தின் ஓர் அம்சமாகும். அது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரிடம் காட்டும் ஒருவகையான சமூக அருவருப்பு. சமூக மனோபாவத்தின் இயல்பான விளைவான தீண்டாமை ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் வடிவத்தையும் எய்துவதற்கு சில காலம் பிடித்திருக்க வேண்டும்.
  • அநேகமாக ஆரம்பத்தில் ஒரு மனிதனது உள்ளங்கை அளவு மேகமாக உருவாகி வளர்ந்து பெருகி இறுதியில் இன்று பிரம்மாண்டமான வடிவத்தை எய்தியுள்ள ஒரு நிகழ்வுப் போக்கு தொடங்கிய காலத்தைத் துல்லியமாக அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது எவராலும் இயலாது.

தீண்டாமை எனும் சமத்துவமின்மை

  • தீண்டாமை என்றாலே சமத்துவமின்மை என்றுதான் பொருள். தீண்டாமையை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலக வரலாற்றில் இத்தகைய ஏற்றத்தாழ்வு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இதனால் உயர்வு மனப்பான்மையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு ஒருவர் மகளை இன்னொருவருக்குத் திருமணம் செய்வது, ஒருவர் இன்னொருவருடன் நன்றாக அமர்ந்து உண்ணுவதுகூட முடியாத செயலாகிறது. இந்து மதத்தில் இவை சர்வ சாதாரணம்.
  • ஒருவன் இன்னொரு மனிதனைத் தீண்டக் கூடாது என்று தள்ளிவைக்கும் கீழ்த்தரமான மரபு இந்து மதத்தையும் இந்து சமுதாயத்தையும் தவிர, வேறு எங்காவது இருக்கிறதா? ஒரு மனிதனை இன்னொருவன் தீண்டுவதால் அவன் அசுத்தமாகிப் போகிறான் என்றும், அந்தத் தீண்டுதலால், தண்ணீருக்குக்கூட தீட்டு வந்துவிடுகிறது என்றும், அவன் கடவுளைத் தொழவும் அருகதை அற்றவன் என்றும் இங்கு நிலவுகிற மரபு மனித சமுதாயத்தில் வேறு எங்காவது உண்டா? அந்த அளவு உங்கள் உடலுக்கும் உங்கள் சொற்களுக்கும் கேவலமான பொருள் கூறப்படுகிறது.

சமூக விடுதலை

  • தீண்டப்படாதவர்களுக்குச் சட்டம் உறுதிசெய்திருப்பதைவிட அதிகபட்சமான சமூக விடுதலை தேவைப்படுகிறது. அது இல்லாவிட்டால் சட்டரீதியான சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை.
  • உங்களுக்குப் பெளதிக சுதந்திரம் இருக்கிறதல்லவா, எங்கு வேண்டுமானாலும் போகலாம்; என்ன வேண்டுமானாலும் பேசலாம்; அவை சட்டம் விதித்திருக்கிற கட்டுப்பாடுகளை மீறாத அளவில் சரி என்று சிலர் சொல்கிறார்கள்; இந்தச் சுதந்திரத்தால்தான் என்ன பயன்?
  • மனிதனுக்கு உடல் மட்டுமில்லை; உள்ளமும் உண்டு. பெளதிக விடுதலை என்றால் என்ன? சுதந்திர எண்ணம், சுதந்திரச் செயல் இவையே பெளதிக விடுதலை.
  • ஒரு கைதியின் விலங்குகளை அகற்றி அவனை விடுதலை செய்துவிடுகிறார்கள்; இதன் உள்ளர்த்தம் என்ன? அவன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்பதுதானே? உடல் திறன் அளவுக்குத் தகுந்தபடி அவன் செயல்படலாம் என்பதுதானே? மனத்துக்கு விடுதலை இல்லையென்றால், இந்த உடல் விடுதலையால் அவனுக்கு என்ன பயன்? மன விடுதலைதான் உண்மையானது. மன விடுதலையற்றவன் விலங்குகளால் பிணிக்கப்படாத நிலையிலும் ஓர் அடிமைதான்.
  • அவனது மனம் சுதந்திரமாக இல்லையென்றால் அவன் சிறைவாசம் புரியாவிட்டாலும் கைதிதான். மன விடுதலை இல்லாதவன் உயிரோடு உலவினாலும் பிணம்தான். மன விடுதலை அல்லது சிந்தனைச் சுதந்திரம் ஒருவனது இருப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது.
  • ஒருவனது சிந்தனைச் சுதந்திரத்தின் சுடர் அணைக்கப்பட்டுவிட்டது என்றும் அல்லது அவனது மனம் விடுதலையாகிவிட்டது என்றும் எப்படித் தெரிந்துகொள்வது? மேலே கூறியவற்றின் பின்னணியில் நீங்கள் சுதந்திரமானவர்கள்தானா? உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக்கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல, அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்துக்கு ஈடு இணையே இல்லை.

கல்வி முக்கியம்

  • தாழ்த்தப்பட்ட மக்கள் எதன் பொருட்டு பாடுபட வேண்டும்? கல்வி வளர்ச்சிக்காகவும் உண்மைத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அவர்கள் பாடுபட வேண்டும்.
  • சலுகை பெற்ற சமுதாயப் பிரிவினரின் அதிகாரம் என்பது பொதுமக்களிடையே திட்டமிட்டு, விடாது, ஓயாது பரப்பப்படும் அப்பட்டமான பொய்களையே ஆதார பீடமாக அடித்தளமாகக் கொண்டுள்ளது. பொய் எனும் அதன் பிரதான பாதுகாப்பு அரண் உடைத்து நொறுக்கப்படாதவரை எழுச்சி ஏற்பட முடியாது.
  • எந்த ஓர் அநீதியும் அவதூறும் மோசடியும் ஒடுக்குமுறையும் எதிர்க்கப்படுவதற்கு முன்னர் இவற்றுக்கு ஆதார அடிப்படையாக, அஸ்திவாரமாக இருக்கும் பொய்யைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அதன் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும்; அதன் வேடத்தைக் களைந்தெறிய வேண்டும்.
  • இத்தகைய பொய்கள் ஏன் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கல்வி அறிவின் மூலம்தான் இதனைச் சாதிக்க முடியும்.

அதிகாரத்தின் அவசியம்

  • தாழ்த்தப்பட்ட மக்கள் போராட வேண்டிய, பாடுபட வேண்டிய இரண்டாவது விஷயம் அதிகாரம். நலன்களைப் பொறுத்தவரையில் இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே உண்மையிலேயே பெருமளவில் முரண்பாடு நிலவுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
  • விவேகமான அணுகுமுறை இந்த முரண்பாட்டை ஓரளவுக்கு மட்டுப்படுத்தக்கூடுமாயினும் இத்தகைய ஒரு முரண்பாட்டின் அவசியத்தை அது ஒருபோதும் அகற்றாது.
  • ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும்படி செய்வது அதிகாரம்தான். அவ்வாறு இருப்பதால் அதிகாரத்தை ஒழித்துக்கட்ட அதிகாரம் தேவை. அதிகாரத்தை எவ்வாறு நெறிமுறையோடு பயன்படுத்துவது என்ற பிரச்சினை இருக்கலாம்.
  • ஆனால், ஒரு தரப்பில் அதிகாரம் இல்லாதபோது இன்னொரு தரப்பில் உள்ள அதிகாரத்தை ஒழிப்பது சாத்தியமல்ல என்பதில் எத்தகைய ஐயப்பாடும் இருக்க முடியாது. அதிகாரம் என்கிறபோது அது பொருளாதார அதிகாரமாகவும் அரசியல் அதிகாரமாகவும் இருக்கலாம்.
  • எனவே, கூடிய அளவுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டிய முழுக் கட்டாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று இருக்கின்றனர். சமூக, பொருளாதாரத் துறைகளில் போதிய அளவு அதிகாரம் பெற்றிராத நிலையில், தாழ்த்தப்பட்ட மக்கள் மிக அதிகமான அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் பெற இயலாது.
  • தாழ்த்தப்பட்ட இன மக்கள் எந்த அளவுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றபோதிலும் இந்துக்கள் பெற்றிருக்கும் மிகப் பரந்த, விரிந்த சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்துடன் ஒப்பிடும்போது அது மிகச் சிறிய அளவே இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்