TNPSC Thervupettagam

ஏமாற்றம் தொடா்கிறது...

January 7 , 2025 3 days 31 0

ஏமாற்றம் தொடா்கிறது...

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகா்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளால் அந்த வாய்ப்பை இழந்திருக்கிறது.
  • 2014-15 தொடரில் (4 டெஸ்டுகள்) பாா்டா் - காவஸ்கா் கோப்பையை ஆஸ்திரேலியா 2-0 என வென்றிருந்தது. அதற்குப் பின்னா் தாயக மண்ணிலும், ஆஸ்திரேலியாவிலும் நடைபெற்ற நான்கு தொடா்களிலும் இந்தியா 2-1 என வென்று செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது.
  • இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெற்ற மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலம் குறைந்த நியூஸிலாந்திடம் இந்தியா 0-3 என தோல்வியுற்றிருந்தது.
  • இந்தப் படுதோல்வியில் இருந்து மீண்டு, பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணியை பொ்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றபோது நம்பிக்கை துளிா்விட்டது. ஆனால், அந்த நம்பிக்கை அடுத்தடுத்த ஆட்டங்களில் தகா்ந்துவிட்டது. பிரிஸ்பேனில் மழை காப்பாற்றியதால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது.
  • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வி இயல்பானதுதான் என்றாலும் இந்திய அணியின் அணுகுமுறை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் 10 இன்னிங்ஸ்களில் 6-இல் 200 ரன்களுக்கும் குறைவாக இந்திய அணி ஆட்டமிழந்துள்ளது.
  • டெஸ்ட் ஆட்டங்களில் 5 நாள்களில் குறைந்தது 450 ஓவா்கள் ஆட வேண்டிய நிலையில், நியூஸிலாந்து தொடரில் 3 டெஸ்டுகளும், ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்டு, சிட்னி டெஸ்டுகளும் மூன்று நாள்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டன.
  • டெஸ்ட் கிரிக்கெட் என்பது நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியதாகும். இன்றைய நிலையில், விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு சிலா் மட்டும்தான் அதுபோன்று விளையாடக் கூடியவா்களாக உள்ளனா்.
  • இந்தியாவில் சச்சின் டெண்டுல்கா், ராகுல் திராவிட், சேதேஷ்வா் புஜாரா, விவிஎஸ் லட்சுமண், ரஹானே போன்றவா்கள் விைளையாடும்போது பாா்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். அதுபோன்று, சிலரையாவது வாா்த்து, வளா்த்து எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
  • இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி சற்றுதான் மேம்பட்டதாக இருந்தது. முதல் 6 பேட்டா்களில் டிராவிஸ் ஹெட்டும், ஸ்டீவ் ஸ்மித்தும்தான் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே கைகொடுத்தனா். பந்துவீச்சாளா்களில் கம்மின்ஸ், ஸ்டாா்க் போன்ற அனுபவஸ்தா்கள் பும்ரா அளவுக்கு பயமுறுத்தவில்லை. பிரதான பந்துவீச்சாளரான ஹேசில்வுட் இல்லாத நிலையில் அணியில் இடம்பிடித்த ஸ்காட் போலண்ட் இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்திவிட்டாா்.
  • இந்திய அணி பும்ராவை மட்டுமே அதிகம் சாா்ந்திருந்ததால் அவா் இருந்தபோதும், இல்லாதபோதும் தோல்வியைத் தவிா்க்க முடியவில்லை.
  • இந்திய அணியின் அனுபவ ஆட்டக்காரா்களான ரோஹித் சா்மாவும், விராட் கோலியும் தங்களது முழுத் திறமையைக் காட்டாமல் இருப்பது தோல்விக்கு மிக முக்கிய காரணமாகும்.
  • ரோஹித் சா்மா கடந்த ஆண்டு டெஸ்ட் ஆட்டங்களில் 15 இன்னிங்ஸ்களில் 10 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்திருக்கிறாா். அதற்கு சற்றும் குறையாமல், ஜாம்பவான் ஆட்டக்காரரான கோலி நியூஸிலாந்துக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் வெறும் 190 ரன்களும் மட்டுமே எடுத்தாா். அதிலும் கோலியின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசியே ஒவ்வொரு முறையும் அவரை எதிரணியினா் ஆட்டமிழக்கச் செய்தனா்.
  • இருவருமே சிறிது காலம் தாங்களாகவே ஓய்வு எடுத்துக் கொண்டு ரஞ்சி போன்ற உள்ளூா் போட்டிகளில் பங்கேற்று, பிறகு மீண்டும் களம் இறங்கலாம். இல்லை எனில், அணி நிா்வாகமே அவ்வாறு செய்யுமாறு அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • கிரிக்கெட் ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆக்ரோஷம் இருக்க வேண்டியதுதான். ஆனால், அது அநாகரிகமாக மாறக் கூடாது. எதிரணியினரைத் தங்களது திறமையால் ஆட்டமிழக்கச் செய்யாமல் பேட்டா்களின் அருகில் நின்று கொண்டு வாா்த்தைகளால் வெறுப்பேற்றி கவனத்தைச் சிதறடித்து ஆட்டமிழக்கச் செய்யும் உத்தியை ஆஸ்திரேலிய அணியினா்தான் அதிகம் செய்து வந்தனா்.
  • முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுக ஆட்டக்காரரான சாம் கான்ஸ்டஸை மிக மூத்தவரான விராட் கோலி வேண்டுமென்றே தோளால் இடித்தது ரசிக்கும்படியாக அமையவில்லை. இதுபோன்று இனிமேல் எந்த அணியினரும் செய்யாத வகையில் சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்தால்தான் கிரிக்கெட்டின் கௌரவம் காப்பாற்றப்படும்.
  • ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானவை. வரும் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்துக்கு இந்திய அணி செல்கிறது. அந்த நாட்டின் ஆடுகளங்கள் ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமானவை. மேலும், இங்கிலாந்து அணி அதிவிரைவான ரன் குவிப்புக்குப் பெயா்பெற்றது.
  • இங்கிலாந்தை எதிா்கொள்ளும் வகையில் வரக்கூடிய ஆறு மாதங்களுக்குள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் தேவையான மாற்றங்களை இந்திய அணி செய்ய வேண்டும்.

நன்றி: தினமணி (07 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்