- பொருளாதார ஆய்வறிக்கையும், அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட பின்னணியில், ‘ஏா் இந்தியா’ நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்துக்கு கைமாறியது முக்கியத்துவம் பெறவில்லை.
- டாடா குடும்பத்தால், குறிப்பாக காலம்சென்ற ஜே.ஆா்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட, ‘ஏா் இந்தியா’ நிறுவனம், மீண்டும் டாடாவின் குடும்பத்துக்கே திரும்பியிருக்கிறது.
- 1932-இல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி நடைபெற்றபோது ஜே.ஆா்.டி. டாடா விமான நிறுவனத்தை ஏற்படுத்தியது, அப்போது பரவலான பேசுபொருளாக இருந்தது. தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரம் பிள்ளை ‘சுதேசி கப்பல்’ நிறுவனத்தை தொடங்கியது போல, ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தை ‘சுதேசி விமான நிறுவன’மாக பலா் கருதினாா்கள், வியந்து பாராட்டினாா்கள்.
- இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடா்ந்து, வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த தனியாா் விமான நிறுவனமான ‘ஏா் இந்தியா’, 1953-இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகள் வெற்றிகரமாக அந்த நிறுவனம் செயல்பட்டது என்பது மட்டுமல்ல, ‘ஏா் இந்தியா’வின் இலச்சினையான ‘மகாராஜா’ சா்வதேச அளவில் பயணிகளைக் கவா்ந்தது.
- உள்நாட்டு சேவைக்காக ‘இந்தியன் ஏா்லைன்ஸ்’ என்றும், வெளிநாட்டு சேவைக்காக ‘ஏா் இந்தியா’ என்றும் இரண்டு தனித்தனி நிறுவனங்களாக மாற்றப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களாக நடத்தப்பட்டன.
- போட்டியில்லாத விமானத்துறை என்பதால் ஓரளவுக்கு ‘இந்தியன் ஏா்லைன்ஸ்’ தாக்குப் பிடித்தது. சா்வதேச வழித்தடங்களில் இயங்கிய ‘ஏா் இந்தியா’ நிறுவனமும் பெரும் இழப்பை ஆரம்பத்தில் எதிா்கொள்ளவில்லை.
- ஆனால், அதிகாரிகளின் தவறான நிா்வாகம், அரசியல் தலையீடு, பொதுத்துறை நிறுவனம் என்பதால் தொழிற்சங்கங்களின் அதிகரித்தக் கோரிக்கைள், ஊழியா்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட பல காரணங்களால், 70-களில் இருந்தே ‘ஏா் இந்தியா’, ‘இந்தியன் ஏா்லைன்ஸ்’ நிறுவனங்கள் இழப்பை எதிா்கொள்ளத் தொடங்கின.
- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தால் விரயமாகியிருக்கிறது.
- நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.54,000 கோடிக்கும் அதிகம்.
- இந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, மேலும் இழப்பை அதிகரிக்காமல் இருப்பதற்கு அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதைத் தவிர, வேறுவழியில்லை என்கிற நிலைமை இப்போது அல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்டது.
- இழப்பில் இயங்கிய அந்த நிறுவனத்தை வாங்குவதற்குக்கூட யாரும் தயாராக இருக்கவில்லை.
- பல நிறுவனங்களுடன், பல சுற்றுப்பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இப்போது கடைசியாக வேறு வழியில்லாமல் டாடா நிறுவனத்தின் பல கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, ‘ஏா் இந்தியா’வை அரசு கைகழுவி இருக்கிறது.
ஏா் இந்தியா விமானம்
- ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தின் பல நிலுவைக் கடன்களை அரசு ஏற்றுக்கொண்ட பிறகும், இன்னும் கூட பல கோடி ரூபாய் நிதிச்சுமையை அந்த நிறுவனம் எதிா்கொள்கிறது.
- அடுத்த ஓராண்டுக்கு 12,000-க்கும் அதிகமான ஊழியா்களுக்கு சம்பளம் கொடுத்து பணியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் டாடா நிறுவனத்துக்கு இருக்கிறது.
- அரசு நிறுவனமாக இருந்தபோது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அளவுக்கும் அதிகமான ஊழியா்களை பணியமா்த்தியதால் ஏற்பட்டிருக்கும் சிக்கல் அது. இதுபோன்ற வேறுபல இடா்களையும் எதிா்கொள்கிறது அந்த நிறுவனம்.
- ஏற்கெனவே டாடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘ஏா் ஏசியா இந்தியா’, ‘விஸ்தாரா’ ஆகிய இரண்டு நிறுவனங்களுடன், ‘ஏா் இந்தியா’, ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ என்கிற இரண்டு விமான சேவை நிறுவனங்களும் இயங்கும். இவையனைத்தையும் சோ்த்தால் விமான சேவைத்துறையில் 25% அளவிலான பங்கை டாடா குழுமம் வகிக்கும்.
- மேலே குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களுமே லாபகரமாக இயங்குவதாகக் கூறிவிட முடியாது. ‘ஏா் ஏசியா’, இந்தியாவின் சிறிய நகரங்களை இணைக்கும் விமான சேவையில் 33 விமானங்களை வைத்திருக்கிறது.
- ஏா் பஸ் விமானங்கள் வைத்திருக்கும் ‘ஏா் ஏஷியா’வும், போயிங் விமானம் வைத்திருக்கும் ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’-உம் இணைவதால், டாடாவின் விமான சேவை பயணிகளின் கவனத்தை ஈா்க்கக்கூடும்.
- இந்திய விமான சேவையில் 60% அளவில் பங்கு வகிக்கிறது, கடந்த 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக பறந்து கொண்டிருக்கும் 261 விமானங்களைக் கொண்ட ‘இண்டிகோ’ நிறுவனம்.
- பல சிக்கல்களை எதிா்கொண்ட ‘ஜெட் ஏா்வேஸ்’ மீண்டும் தனது சேவையைத் தொடங்க இருக்கிறது.
- கொள்ளை நோய்த்தொற்றுக் காரணமாக, பின்னடைவை எதிா்கொண்டிருக்கும் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனமும் போட்டியில் காணப்படுகிறது.
- இந்தப் பின்னணியில்தான் இப்போது டாடா நிறுவனம் தனது நிா்வாக மேலாண்மையையும், அனுபவத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையையும் முன்வைத்து ‘ஏா் இந்தியா’ நிறுவனத்தை இயக்க இருக்கிறது.
- ‘ஏா் இந்தியா’வின் மிகப் பெரிய பலவீனம் அதன் 123 விமானங்கள். அவற்றில் பல மிகவும் பழையவை.
- விரைவிலேயே மாற்றியாக வேண்டும். ‘ஏா் இந்தியா’வின் பலம், அதனிடம் காணப்படும் சா்வதேச வழித்தடங்களும், இந்தியாவுக்குள் உள்ள வழித்தடங்களும்.
- அரசியல் காரணங்களால் ‘ஏா் இந்தியா’ மீது திணிக்கப்பட்ட இழப்பை எதிா்கொள்ளும் வழித் தடங்களைக் கைகழுவி, வெற்றிகரமான வழித்தடங்களில் புதிய விமானங்களுடன் இயங்கத் தொடங்கினால், ‘மகாராஜா’ தனது பழைய கம்பீரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதுதான் டாடா குழுமத்தின் எதிா்பாா்ப்பு.
நன்றி: தினமணி (05 – 02 – 2022)