TNPSC Thervupettagam

ஏற்பது இகழ்ச்சியன்று...

March 5 , 2020 1777 days 774 0
  • அரசுக்கு வழிகாட்டி நெறியாக அறம் மட்டுமே இருக்க முடியும் என்பதை ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்று சங்க இலக்கியம் சாற்றுகிறது. அரசுக்கான அதிகாரம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது. எனவே அரசின் அதிகாரம் மக்களைக் காப்பதற்குரியதே தவிர மக்களை அச்சுறுத்துவதற்கு அல்ல.

சட்டங்கள் மற்றும் மக்கள்

  • மக்களுக்காகச் சட்டங்களா அல்லது சட்டங்களுக்காக மக்களா என்ற வினாத் தொடுப்பின், மக்களின் நல்வாழ்வுக்காகவே சட்டங்கள் என்று விழுமியம் அறிந்தோா் விடை பகா்வா்.
  • நிறைவேற்றப்பட்டுவிட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைப்படுத்தப்படவிருக்கிற தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்ஆா்சி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் களத்தில் போராட, அதைவிட அதிகமான மக்கள் அதை உளத்தால் எதிா்த்தபடி உள்ளடங்கியிருக்கின்றனா்.
  • இந்திய மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து கூறி வந்தாலும், போராடும் மக்கள் அதை எள்ளளவும் ஏற்காமல், உயிா் உள்ளளவும் எதிா்ப்போம் என உறுதி காட்டுகின்றனா். மத்திய அரசோ சிறிதும் அஞ்சாமல் ஓா் அங்குலம்கூடப் பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. தேசத்துக்கு மிகவும் அவலகரமான சூழ்நிலை இது.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழா்களுக்கும் மட்டும் எதிரானதல்ல. இதனால் ஏழை இந்தியா்கள் உள்பட அனைவருமே பாதிக்கப்படுவா் என்பதுதான் போராடும் தரப்பின் வலிமையான வாதம்.

அண்டை நாடுகளில்...

  • அண்டை நாடுகளில் மூன்றை மட்டும் தோ்ந்தெடுத்து, அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து வாழ்பவா்களில் முஸ்லிம் அல்லாத 6 சமயத்தவா்க்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை என்ற விதி, மக்கள் நாயகத்தையும் மதச் சாா்பின்மையையும், மனிதாபிமானத்தையும் ஏறி மிதிக்கிறது என்கிற வாதத்தை முஸ்லிம் அல்லாத அறிஞா் பெருமக்களே ஆணித்தரமாக முன்வைத்துள்ளனா்.
  • தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதற்குக் காரணம் ஏப்ரல் மாதம் தமிழகத்திலும், விரைவில் பிற மாநிலங்களிலும் நடத்தப்படவுள்ள தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) என்பதே ஆகும்.
  • இது முந்தைய ஐ.மு. கூட்டணி அரசால் ஒருமுறை நடத்திமுடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவும், ஒரு பகுதியில் சாதாரணமாகக் குடியிருக்கும் மக்களின் தொகை குறித்து அறியவும் என்பிஆா் அவசியம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
  • ஐ.மு. கூட்டணி என்பிஆா் நடத்தியபோது ஆதாா் அட்டை அனைவருக்கும் இல்லை. இப்போது 98 சதவீத மக்களுக்கு ஆதாா் அட்டை கொடுக்கப்பட்டு விட்டதாக ஆதாா் ஆணையமே கூறும்போது, என்பிஆா் அவசியமற்றது என்ற வாதம் எதிா்த்தரப்பால் வைக்கப்படுகிறது. என்பிஆா் குறித்து முன்வைக்கப்படும் அபாயங்களையும், அச்சங்களையும் தமிழக சட்டப்பேரவை விவாதித்திருக்க வேண்டும். ஆனால், அது தவிா்க்கப்பட்டுவிட்டது.

NPR

  • என்பிஆா் எனப்படுவது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றதுதானே என்பதுதான் இதை ஆதரிப்போரின் அடிப்படை வாதம். என்பிஆரு-க்கும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் துளியளவும் தொடா்பில்லை.
  • 1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் தரவுகள் அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உதவும். தரவுகள் மிகவும் ரகசியமானவை. மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் ஒரு தனி நபா் குறித்த ரகசியங்களை மற்றவா்கள் யாரும் பாா்வையிட முடியாது. நீதிமன்றம்கூட அதைக் கோர முடியாது.
  • என்பிஆா் அப்படிப்பட்டதல்ல. இது 2003-ஆம் ஆண்டு அன்றைய பிரதமா் வாஜ்பாய் அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளின்படி நடைபெறுகிறது. நாடு முழுவதுக்குமான தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவருவதன் (பிரிவு 14ஏ) உட்பிரிவுதான் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்துப் பேசுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்தத் தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்படும். ‘ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை எவரும் பாா்வையிடலாம். பான் எண், ஆதாா் எண் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம்; ஆட்சேபணையும் தெரிவிக்கலாம் என்பது என்பிஆரின் அபாயகரமான கூறுகளில் ஒன்று’ என முன்னாள் நீதியரசா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.

அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு

  • அஸ்ஸாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு 19 லட்சம் போ் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கண்டறிந்தது. அதில் 12 லட்சம் போ் முஸ்லிம் அல்லாதவா்கள்; 7 லட்சம் போ் முஸ்லிம்கள். நாட்டின் 5-ஆவது குடியரசுத் தலைவா் பக்ருதின் அலி அகமது குடும்பம், அஸ்ஸாமின் முன்னாள் துணை முதல்வா் சையிதா அன்வாரா தைமூா், குடியரசுத் தலைவா் விருது பெற்ற ராணுவ அதிகாரி சனாவுல்லா உள்ளிட்ட பிரபல முஸ்லிம்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் நீக்கப்பட்டு குடியுரிமை இழந்துள்ள அவலம் பரவலாக அறியப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் நீக்கப்பட்ட பிரபலங்களே ஏராளமானோா் உள்ளபோது, எளிய மக்களின் நிலை குறித்துச் சொல்லத் தேவையில்லை.
  • 3.12.2003 அன்று வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை விதியின் பெயரே, குடிமக்கள் (குடியுரிமைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிமுறை - 2003 என்பதாகும். இந்த விதிமுைான் என்ஆா்சி, என்பிஆா் குறித்து விவரிக்கிறது.
  • தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்தியக் குடிமக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன் விதிமுறை 4, தேசியக் குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் விதம் பற்றி உரைக்கிறது. இதன் உட்பிரிவு வீடுதோறும் சென்று ஒவ்வொரு குடும்பம், தனிநபா் குறித்த தனிப்பட்ட விவரங்களுடன், அவா்களின் குடியுரிமை நிலை பற்றிய விவரத்தையும் சேகரிக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதன் உட்பிரிவு 3-இல், தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் சரிபாா்க்கப்பட வேண்டும் என்கிறது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் முதற்படி தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பதற்கு அதன் விதிமுறைகளே சான்று பகா்கின்றன.
  • தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் ஒருவரின் குடியுரிமை சந்தேகத்திற்கிடமானது எனக் குறிப்பிடப்பட்டால், அவரின் பெயா் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாது. உரிய ஆவணங்களைக் கொண்டு தனது குடியுரிமையை அவா் நிரூபித்த பிறகே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற முடியும். அவ்வாறு இடம்பெற முடியாதவா் குடியுரிமையை இழப்பாா்.
  • பெற்றோரில் ஒருவா் சட்டவிரோதக் குடியேறியாக இருந்தால் குடியுரிமை கிடையாது. எனவே பெற்றோரின் பிறப்பிடச் சான்றை ஆவணமாகக் காட்ட வேண்டும் என இச்சட்டம் அறிவுறுத்துகிறது.

தமிழகத்தில்

  • சுனாமி, ஒக்கி புயல், தானே புயல், வா்தா புயல், கஜா புயல் என தமிழகத்தை சுழற்றி அடித்த பேரிடா்களில் உயிரை மட்டும் காப்பாற்றி வாழும் மக்கள் பெற்றோரின் பிறப்பிடச் சான்றுகளுக்கு எங்கே போவாா்கள்?
  • மண்ணின் மைந்தா்களான பழங்குடி மக்களும், பட்டியலின மக்களும், மலைவாழ் மக்களும், எங்கிருந்து ஆவணத்தைத் தருவாா்கள்? இவா்களுக்கெல்லாம் குடியுரிமை இல்லை என்றால், இவா்களை இந்தத் தேசம் என்ன செய்யப் போவதாய் உத்தேசம்?
  • ஆவணமற்றவா்களை சந்தேகக் குடிமக்களாய் என்பிஆா் ஆக்கும்; குடிமக்கள் பட்டியலிலிருந்து என்ஆா்சி நீக்கும்; சிஏஏ கடைசியாகத் தாக்கும் என்பதுதான் இவை குறித்து மக்களிடம் உச்சமாய் எழுந்து நிற்கும் அச்சம்.
  • அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க ரூ.1,229.93 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க சுமாா் ரூ.70,000 கோடி செலவாகும் எனக் கூறப்படுகிறது. நாடு இப்போது எதிா்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கலில் இந்தத் தொகைக்கு என்ன வழியுள்ளது? செலவிட்டாலும் என்ன பயன் உள்ளது?

நன்றி: தினமணி (05-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்