TNPSC Thervupettagam
November 4 , 2024 67 days 74 0

ஏற்புடையதல்ல!

  • குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் குறைந்துவிடுமோ என்ற அச்சம் தென் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
  • நிதி ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 1971 மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், 2017-இல் 15-ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டபோது, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • இதனால் நிதி ஒதுக்கீடு குறையும் என்று அஞ்சிய தென் மாநிலங்கள் "சிறந்த செயல்பாட்டுக்கு தண்டனையா?' என எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 31.12.2023-இல் அமைக்கப்பட்ட 16-ஆவது நிதி ஆணையம் எந்த ஆண்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
  • நிதி ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் தனது வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசுத் திட்டங்களை மாநிலங்களில் செயல்படுத்தவும், ஐஐடி, எய்ம்ஸ் போன்ற அடிப்படை கட்டமைப்புகளுக்காகவும் மத்திய அரசு நிதி அளிக்கிறது. இதில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் அதிக நிதி பெறுவது இயற்கையானதே.
  • தொகுதி மறுவரையறையைப் பொருத்தவரை, மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்வதை 25 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதாக 1976-இல் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே நடைமுறையைப் பின்பற்றி நிறுத்திவைக்கப்படுவதாக வாஜ்பாய் அரசு 2001-இல் அறிவித்தது.
  • இப்போது 2026-இல் மக்களவைத் தொகுதி வரையறை செய்யப்பட வேண்டும். 2021-இல் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தென் மாநிலங்களுக்கு இப்போது எழுந்துள்ளது.
  • தற்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகியவை கூடுதலாக 23 தொகுதிகள் பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகியவை கூடுதலாக 150 தொகுதிகள் பெற வாய்ப்புள்ளது.
  • இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென் இந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கின்ற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
  • தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பெற்ற வெற்றிக்காக அவற்றைத் தண்டிக்கக் கூடாது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷும் வலியுறுத்தி உள்ளார்.
  • மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்தவரை, பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே பிறப்பு விகிதம் 1990-களை ஒப்பிடுகையில் குறைந்தே வந்து கொண்டிருக்கிறது என்பது புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது.
  • இந்தச் சூழலில், அதிக குழந்தைகள் என்ற இந்த யோசனை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இப்போதே மக்கள்தொகையில் சீனாவை விஞ்சி 142 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையோடு இந்தியா முதலிடத்தில் உள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒரு சதுர கி.மீ.க்கு மக்கள் தொகை அடர்த்தி ஆஸ்திரேலியாவில் 3 பேர், ரஷியாவில் 8.5 பேர், அமெரிக்காவில் 38 பேர், சீனாவில் 151 பேர், பிரிட்டனில் 286 பேர் என்று உள்ள நிலையில் இந்தியாவில் 488 பேர் என உள்ளது. மாசு அதிகரிப்பால் புது தில்லி உள்ளிட்ட நகரங்கள் வசிக்கத் தகுதியில்லாதவையாக மாறி வருகின்றன.
  • எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் ரயில் வசதிகளை ஏற்படுத்தினாலும் இரண்டாம் நிலை நகரங்களில்கூட போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
  • பருவநிலை மாற்றத்தால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. பருவம் தப்பிய மழையால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்தபோதும் 23 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் அளிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகையால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
  • இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அரசியல் மனமாச்சரியங்களைப் புறந்தள்ளி தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் கருத்தொற்றுமை எட்டப்படுவதே நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.
  • மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும்தான். அதற்காக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக மாநிலங்கள் தண்டிக்கப்படுவது ஏற்புடையதல்ல!

நன்றி: தினமணி (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்