ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக் கனவு என்னவாகும்?
- தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் உயர் கல்வி பரவலாகக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுக் கல்வி நிறுவனங்களும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களும் உயர் கல்விப் பரவலாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் செயல்படும் டிபி ஜெயின் கல்லூரி, அதன் உதவிபெறும் பாடப்பிரிவை மூடுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
- அவ்வழக்கில் உதவிபெறும் பிரிவை மூடுவதற்கான விண்ணப்பத்தை அரசுக்கு உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், அதை அரசு இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளுமாறும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அரசு ஏற்றுக்கொண்டால், அது தமிழக உயர் கல்வியில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குவதுடன் ‘சமூகநீதி’ வரலாற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
சுயநிதிக் கல்லூரிகளின் வளர்ச்சி:
- தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளுடன் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை கலை - அறிவியல் கல்லூரிகளே. தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, உயர் கல்வியைப் பரவலாக்கும் நோக்கத்துடன் அரசுக் கல்லூரிகளுடன் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு உதவியது.
- திமுக ஆட்சி செய்த அடுத்த 10 ஆண்டுகளில் 87ஆக இருந்த அரசு உதவிபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்தது. இந்தப் பின்னணியில் 1972ஆம் ஆண்டு துரைப்பாக்கம் அரசு உதவிபெறும் கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் பல ஆயிரம் விளிம்புநிலை மாணவர்கள் இக்கல்லூரியின் உதவிபெறும் பிரிவில் பட்டம் பெற்றுள்ளனர்.
சுயநிதிக் கல்லூரியாக மாற்ற முயற்சி:
- 1980களில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்து, உயர் கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவித்தது. இதனால் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவுகள் தொடங்கிக்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. சுயநிதிப் பிரிவில் மாணவர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிக்க முடியும், அரசின் கட்டுப்பாடுகளும் குறைவு என்பதால், அரசு உதவிபெறும் பிரிவை மூடிவிட்டு, முழுமையாகச் சுயநிதிக் கல்லூரியாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியது இக்கல்லூரி நிர்வாகம்.
- அரசு உதவிபெறும் பிரிவில் பணி ஓய்வுபெறும் ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் இருந்து அனுமதி பெறுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி, பல ஆண்டுகளுக்கு முன்பே பணி நியமனங்களை நிறுத்திவிட்டது. 2017ஆம் ஆண்டு 33 பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழக அரசே முன்வந்து அனுமதி அளித்தபோதும், கல்லூரி நிர்வாகம் பணியிடங்களை நிரப்பவில்லை என அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியாக ரூ1,65,64,984 பெற்று 2009-2010ஆம் ஆண்டுகளில் பெண்கள் விடுதி மற்றும் உள் விளையாட்டு அரங்க வசதிகளை ஏற்படுத்திக்கொண்டது.
- இந்நிலையில், 2019ஆம் ஆண்டு ஒரு துறையில்கூட அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி, உதவிபெறும் பிரிவை மூடிவிட அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அரசுத் தரப்பிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்பதால், நீதிமன்றத்தை அணுகியது. இது ஒருபுறம் இருக்க, கரோனா பொதுமுடக்கச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டது.
தனி அலுவலர் நியமனம்:
- கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளும் அதன் மாணவர் அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. இத்தகைய அழுத்தங்களின் விளைவாகத் தமிழக அரசு 12.08.2022 அன்று தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976 விதிகளின்படி, தனிஅலுவலரை நியமித்துக் கல்லூரியை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. எனவே, 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கின.
- அரசின் இந்த முயற்சியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையைத் தொடர வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம், தனிஅலுவலர் அதில் தலையிடக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தும் 2022-23ஆம் ஆண்டு மட்டுமின்றி அதற்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளிலும் அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. 2022-23ஆம் கல்வியாண்டில் கல்லூரி நிர்வாகத்தால் உதவிபெறும் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படாததை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் உயர் கல்வித் துறையின் இணை இயக்குநரிடம் முறையிட்டது.
கல்வியாளர்களின் கருத்து:
- சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்போது, நிர்வாகத் தரப்பில் பிரதானமாக அரசு உதவிபெறும் பிரிவில் ஆசிரியர்கள் இல்லை என்றும் மாணவர்கள் சேரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்பதை மறுப்பதற்கு அரசிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அரசுத் தரப்பில் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது கல்வியாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.
- ஆண்டுக்கு 1,000 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர்கள் சேரவில்லை எனவும் சுயநிதிப் பிரிவில் பல ஆயிரம் செலுத்தி மாணவர்கள் சேர்ந்தார்கள் எனவும் நிர்வாகம் கூறுவது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. மேலும், பல ஆண்டுகளாகவே காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழித்த நிர்வாகத்தின்மீது முன்பே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும் தனிஅலுவலரை நியமித்தது சரியான முடிவாகும்.
ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படும்:
- தனியார் கல்லூரிகளில் அரசு உதவிபெறும் பிரிவுகள் செயல்படுவதால் அரசின் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் முழுமையாக வணிக நோக்கத்துடன் கல்லூரியை நடத்த முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே, அரசு உதவிபெறும் பிரிவில் பணி நியமனங்களில் சிக்கல்கள் உள்ளதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அரசு உதவிபெறும் கல்லூரிகள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கு மாற்று வழிகளைச் சிந்தித்துக்கொண்டுள்ளன.
- இத்தகைய சூழலில், ஒரு கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவை மூட அனுமதித்தால், மற்ற அரசு உதவிபெறும் கல்லூரிகளும் அதனைப் பின்பற்றி சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுத்ததாக அமைந்துவிடும். இதனால், அக்கல்லூரிகளை நம்பியுள்ள பல ஆயிரம் ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறிபோகும்.
- அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொண்டதுடன், நிறுவனத்தின் நற்பெயரையும் உயர்த்திக்கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களின் சேவை ஏழை மாணவர்களுக்குப் பயன்படாமல் தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்துக்குப் பயன்பட அனுமதிப்பது சமூகநீதிக்கு எதிரான ஆபத்தான போக்காகும்.
இனி என்ன?
- வளர்ச்சியின் பெயரால் சென்னையின் மையப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு உயர் கல்வி வழங்குவதில் துரைப்பாக்கம் கல்லூரியின் பங்கு முக்கியமானது. இடப்பெயர்வால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இப்பகுதி இளம் தலைமுறையினருக்குக் கல்வி ஒன்றுதான் எதிர்காலத்துக்கான ஒரே நம்பிக்கை.
- எனவே, அவர்களின் கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த சமீபத்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். கல்லூரியை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலமாக மட்டுமே அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் எனக் கல்வியாளர்கள் மன்றாடுகின்றனர். என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 11 – 2024)