- அதிகாரிகளை மாநில அரசுகளிடம் - அல்லது தேவைப்படும் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறாமலேயே மத்திய அரசுப் பணிகளுக்கு நியமித்துக்கொள்ளும் புதிய முடிவு (ஐஏஎஸ் பணியிட விதிகள், 1954 சட்டத்துக்கான உத்தேச திருத்தங்கள்) காரசாரமான வாக்குவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
- மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான நுட்பமான கூட்டாட்சியின் சமநிலையை இது சீர்குலைத்துவிடும் மற்றும் எதிர்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக இதைத் தவறாகப் பயன்படுத்த வழியேற்பட்டுவிடும்; எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி ஒழுக்கத்தையேகூட பாதித்துவிடும்.
- மத்திய அரசின் அயல்பணிக்காக அதிகாரிகளைக் கையிருப்புப் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டை மாநில அரசுகள் பூர்த்திசெய்வதில்லை என்பதாலும், துணைச் செயலர்கள், இயக்குநர்கள் போன்ற இடைநிலை அதிகாரப் பணிகளுக்கு தகுந்தவர்கள் கிடைக்காமல் மத்திய அரசில் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலும், மாநில அரசுகளிடமோ, அதிகாரிகளிடமோ கேட்காமலேயே அவர்களுடைய சேவையை வலுக்கட்டாயமாகப் பெறும் இந்த நடைமுறையைக் கையாள வேண்டியிருக்கிறது என்று மத்திய அரசு நியாயப்படுத்தப் பார்க்கிறது.
- தமிழ்நாடு (சில ஆண்டுகளுக்கு முன்பு வரை), மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் மத்திய அரசின் அயல்பணிக்குச் செல்ல விருப்பமுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக்கூட மத்திய அரசுக்கு அனுப்ப மறுத்தது உண்மைதான். ஆனால், அனைத்து மாநிலங்களும் (பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட) மத்திய அரசின் அயல்பணிக்கு அனுப்பும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதற்கு மாநில அரசுகள் அவர்களுடைய பெயர்களைத் தரத் தயங்குவது மட்டுமே காரணம் அல்ல.
பற்றாக்குறைக்குச் சில காரணங்கள்
- ஐ.ஏ.எஸ். பணி விதிகளைத் திருத்தும் இந்த உத்தேச முடிவைவிட எளிமையான, அதிக பலன் தரக்கூடிய, அதிக உரசல்களை ஏற்படுத்தாத தீர்வுகள் இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். மத்திய அரசின் அயல்பணிக்குச் செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏன் ஏற்படுகிறது என்பதை நிதானமாக ஆராய்ந்தாலே தீர்வுகளும் தானாகப் புலப்பட்டுவிடும்.
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையில் இவ்வளவு பற்றாக்குறை ஏற்பட முதல் காரணமே 1991-க்குப் பிறகு ஆண்டுதோறும் இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோரின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்ததுதான். ஆண்டுக்கு 140 முதல் 160 பேர் வரை தேர்வுசெய்யப்படுவது குறைக்கப்பட்டு, 50 முதல் 80 பேர் வரை மட்டுமே தேர்வுசெய்யப்பட்டனர். பொருளாதாரச் சீர்திருத்தத்தை அமல்படுத்துவதால் நிர்வாகத்தில் அரசினுடைய பங்கே குறைந்துவிடும் என்பதால், அரசுப் பணிகளுக்கு அதிக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவைப்பட மாட்டார்கள் என்று அன்றைய அரசு தவறாகக் கருதியது. ஆனால், அப்படி நேரவில்லை.
- இந்தச் சிக்கலை உணர்ந்து, மத்திய அரசு மீண்டும் 1991-க்கு முந்தைய எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தேர்வுசெய்வதற்கு இருபது ஆண்டுகள் பிடித்தன. இதனால், கடந்த ஆண்டு (2021) ஜனவரி முதல் தேதி நிலவரப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கை பற்றாக்குறை 23 சதவீதமாக இருந்தது. இந்த பற்றாக்குறையைச் சரிசெய்ய அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 200 பேர் வரை தேர்வு செய்யப்பட்டாக வேண்டும்.
- இரண்டாவது காரணம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தேவை எண்ணிக்கை குறித்த ஆய்வில் (cadre review) மத்திய, மாநில அரசுகள் காட்டிவரும் ஆர்வமற்ற அணுகுமுறை. மாநிலங்களில் உள்ள சில நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை மட்டுமே ‘கேடர் பதவிகள்’ என்று நியமித்து, அவற்றை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கென பிரத்யேகமாக ஒதுக்குவதற்காக மத்திய மற்றும் மாநிலங்கள் இணைந்து நடத்தும் ஆய்வு இது.
- தமிழ்நாட்டில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர், தொல்லியல் துறை ஆணையர், அருங்காட்சியக ஆணையர் போன்ற மூலோபாயமற்ற பதவிகள்கூட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே வகிக்க வேண்டிய பதவிகள் என்று ஒதுக்கப்பட்டதானது ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைத்து மாநிலங்களிலுமே கேடர் பதவிகள் உண்மையாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட வேண்டிய பதவிகள்தானா என்று முறையாக மறுஆய்வுக்குள்ளாகினால், நிறைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இத்தகைய மூலோபாயமற்ற பதவிகளிலிருந்து விடுவித்து, காலியிடங்களை குறைக்க முடியும்.
- மத்திய அரசிலும் அதிகாரிகள் எண்ணிக்கை பல துறைகளில் உபரியாகவே இருக்கின்றன.
- மாநிலங்களின் அதிகாரப் பட்டியலிலும் கூட்டு அதிகாரப் பட்டியலிலும் இடம்பெறும் பல துறைகளில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், மாநிலங்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை யாசிப்பதையும் அயல்பணிப் பட்டியலுக்குக் கட்டாயம் பெயரைத் தெரிவியுங்கள் என்று கேட்பதையும் மத்திய அரசு கைவிட்டுவிடலாம்.
- பற்றாக்குறைக்கு மூன்றாவது காரணம், தவறான ஆலோசனையின் அடிப்படையில் 2000-ஆம் ஆண்டு முதல் மத்திய செயலகப் பணி குரூப் ‘பி’ பிரிவு அதிகாரிகளின் நேரடி ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டதும், 2011 முதல் நீடித்த வழக்குகள் காரணமாக மத்திய செயலகத்தில் உள்ள கீழ்நிலை வகைகளின் ஊழியர்களிலிருந்து வழக்கமான பதவி உயர்வுகளில் நீண்ட தாமதங்களும். இந்தப் பிரிவு அதிகாரிகள் மத்திய செயலகத்தில் கணிசமான விகிதத்தில் நடுத்தரப் பதவிகளை வகித்துவந்தனர்.
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறைக்கு நான்காவது காரணம், மாநில அரசுப் பணிகளில் இருந்து பதவி உயர்வு அல்லது தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்.க்கு நியமிக்கப்படும் அதிகாரிகளை மத்திய அரசு பயன்படுத்தாமலேயே விடுவதுதான். சுமார் 2,250 எண்ணிக்கையிலான இந்தப் பிரிவு அதிகாரிகள் 35 வயது முதல் 55 வயது வரையிலானவர்கள்; இவர்கள் நிரம்பிய களப்பணி அனுபவமும் ஆற்றலும் மிக்கவர்கள், மாநிலங்களுக்குள்ளேயே பணி செய்துவருகிறவர்கள்.
- இப்படிப்பட்ட அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி பெற்றவுடன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மத்திய செயலகத்தில் துணைச் செயலர் அல்லது இயக்குநர் பொறுப்பில் பணியாற்ற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம்.
- மத்திய அரசில் வேலை செய்தால்தான் அவர்களுக்கு மாநிலத்தில் அடுத்த பதவி உயர்வு என்று விதித்துவிட்டால், அதிகாரிகள் கிடைப்பதில் பற்றாக்குறையே இருக்காது. ஐ.ஏ.எஸ். நியமனத்தின்போது 50 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம். இந்த நடவடிக்கை மூலம் ஒரே மூச்சில், மத்திய அரசின் துணைச் செயலர், இயக்குநர் பதவிகளில் காலியிடங்கள் அனைத்தையும் நிரப்பிவிடலாம்.
- மத்திய அரசின் அயல்பணிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட ஐந்தாவது காரணம், மத்திய அரசே விதித்துள்ள பல நிர்வாக தடைகள்தான். பணியிடத்துக்கு நியமிக்கப்பட வேண்டியவர்களுக்கு விதிக்கப்படும் அதீதமான கட்டுப்பாடுகள், விபரீதமான ஊக்குவிப்புகள், விருப்பம் தெரிவித்தோர்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் காலாவதியாகும் நடைமுறை, நீண்ட தடைக் காலங்கள், மீண்டும் இன்னொரு முறை மதிய அரசின் அயல்பணிக்கு நியமிக்கப்பட கட்டாய இடைவெளிக்கால நிபந்தனை - இது போன்ற தடைகளை நீக்க வேண்டும்.
- நேரடியாகத் தேர்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் சேர்ந்து, 9 முதல் 16 ஆண்டுகள் வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் துணைச் செயலராகவோ, இயக்குநராகவோ மத்திய செயலகப் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது விவேகமற்ற செயல்.
- இந்தக் கட்டத்தில்தான் அவர்கள் மாவட்ட ஆட்சியர், துறைத் தலைவர் போன்ற பதவிகளில் மாநிலங்களில் அதிகாரம், பணித்திருப்தி, கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றுடன் பணியாற்றிக்கொண்டிருப்பார்கள். எனவே பெரும்பாலானவர்கள் மத்திய அரசில் அயல்பணி ஒதுக்கீட்டில் செல்ல விரும்புவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் இணைச் செயலர் பதவிக்கான பட்டியலில் இடம்பெறாமல் போகின்றனர். அதையடுத்து கூடுதல் செயலர், செயலர் பதவிகளுக்கும் அவர்கள் தேர்வாக முடிவதில்லை.
ஒரு மாற்று யோசனை
- நாங்கள் ஒரு மாற்று யோசனையைக் கூறுகிறோம். நேரடியாகத் தேர்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அவர்கள் பணிபுரியத் தொடங்கிய 9-25 ஆண்டுகளுக்குள் மத்திய அரசில் மூன்றாண்டுகள் பணிசெய்திருக்க வேண்டும் என்பதைக் கட்டாய விதி ஆக்கிவிடலாம். அவர்கள் பணிபுரியும் மாநிலத்தின் முதன்மைச் செயலர் பதவிக்கு (பொதுவாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு) நியமிக்கப்பட பரிசீலிக்கும்போது, மத்திய அரசுப் பணியில் மூன்றாண்டுகளை முடித்தவரா என்று பார்ப்பதன் மூலம், அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்துவிடுவார்கள்.
- இதனால் அதிகாரிகள் தங்களுக்கு வசதியான நேரத்தில் மத்திய அரசில் பணிபுரிய விருப்பம் தெரிவிப்பார்கள். இதனால் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அதிகாரிகள் போதிய எண்ணிக்கையில் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்.
மூடுமந்திர அணுகுமுறை ஒழியட்டும்
- மத்திய அரசில் இணைச் செயலர், கூடுதல் செயலர், செயலர் அல்லது அதற்கு இணையான பதவிகளுக்கு அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடைமுறை (empanelment) அதிகாரிகளிடையே அதிருப்தியைத் தருவதாகவே இருக்கிறது. இது மூடுமந்திரமான ரகசியமாகவும், யதேச்சாதிகாரமாகவுமே இருக்கிறது. வெளிப்படையான, நேர்மையான முறையில் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றே அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
- இத்தகு நடைமுறை கைவிடப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, மத்திய அரசு தனக்குத் தேவைப்படும் இணைச் செயலர், கூடுதல் செயலர், செயலர்களை, மாநில அரசுகளில் சமமான கிரேடுகளில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இருந்து நேரடியாக தேர்வுசெய்ய வேண்டும், துணைச் செயலர்கள் – இயக்குநர்கள் பதவிக்கு உரியவர்களைத் தேர்வுசெய்யும் அதே நடைமுறையைக் இங்கேயும் கடைப்பிடிக்க வேண்டும்.
- இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் திறமை வாய்ந்த அதிகாரிகள் கிடைக்கச் செய்து, மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பெற்ற அனுபவத்தை அந்த அதிகாரிகள் மத்திய அரசின் பணியில் பயன்படுத்தவும் உதவும்.
- எனவே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை என்ற நோயை அடையாளம் காண்பதிலும், அதைத் தீர்ப்பதற்கான பரிகார நடவடிக்கைகளிலும் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் திருப்திகரமானவை அல்ல என கருதுகிறோம். அவை தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். அப்படியே மத்திய அரசு விரும்பும்படி திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டாலும், அவற்றை செயல்படுத்துவதை மாநில அரசுகளால் குலைத்துவிட முடியும்.
- மத்திய அரசுக்குத் தேவைப்படும் அதிகாரிகளைப் பற்றிய பணிக்குறிப்பில் தவறாகவும் எதிர்மறையாகவும் மாநில அரசுகள் குறிப்பிட்டுவிட வாய்ப்பிருக்கிறது. அதிகாரிகள் மீது போலியான ஒழுங்கு நடவடிக்கைகளையும் லஞ்ச வழக்குகளையும் பதிவுசெய்யவும்கூட முனையலாம். சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது உண்டு.
- அடக்குமுறை தோற்கும் இடத்தில், அன்பான வேண்டுகோள்கள் பலன் தரும். மத்திய அரசுப் பணிக்கு மாநிலங்களிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கிடைக்காமலிக்கும் பற்றாக்குறையை மத்திய அமைச்சரவைச் செயலர் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களைத் தொடர்புகொண்டு பேசினாலோ, பிரதம மந்திரி அனைத்து மாநில முதலமைச்சர்களை அழைத்து ஆலோசனை கலந்து பேசினாலோ தீர்க்க முடியாதது அல்ல.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 263-வது கூறின்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பேரவை, இத்தகைய மத்திய – மாநில அரசுகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே உருவாக்கப்பட்டது.
வழிகாட்டும் அனுபவம்
- தேசப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் இந்திய அரசில் பணிபுரிந்த ஐ.சி.எஸ். அதிகாரிகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேரின் சேவையை (பிரிட்டிஷ் – முஸ்லிம் அதிகாரிகள்) நாடு இழக்க நேரிட்டது. அன்றைய இளம் இந்திய அரசுக்கு இப்போதிருப்பதைவிட கடுமையான பல சோதனைகள் ஏற்பட்டன.
- சர்தார் படேல் மிகுந்த தொலைநோக்குடனும் விவேகமான அணுகுமுறைகளுடனும் அன்றைய மாகாண அரசுகளைக் கலந்து – அவற்றுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு அல்ல – சுமுகமாகச் செயல்பட வைத்து பற்றாக்குறையைச் சமாளித்தார். கூட்டாட்சிக் கொள்கையின் புனிதத்தையும், தேசத்தின் ஒருமைப்பாடு – நிர்வாகத் திறமை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, இப்போதைய மத்திய அரசும் அதே அணுகுமுறைகளைக் கையாண்டு பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (20 – 02 – 2022)