TNPSC Thervupettagam

ஐஏஎஸ் அதிகாரிகள் பணி விதிமுறைத் திருத்த யோசனையைக் கை விடுக

January 30 , 2022 918 days 1638 0
  • இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) ஆகியவற்றை அனைத்திந்திய சேவைப் பணிகளாக உருவாக்குவதைப் பெரிதும் ஆதரித்தவர் சர்தார் வல்லபபாய் படேல். மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்படும் இப்பணிகளின் அதிகாரிகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவார்கள் மற்றும் மத்திய அரசு, மாநில அரசுகள் ஆகிய இரண்டிலுமே சேவை புரிவார்கள்.
  • பரந்து விரிந்த மற்றும் பல்வேறுபட்டதுமான இந்த நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை ஒருங்கிணைக்கவும், களமட்டத்தில் செயல்படுத்துதல் மற்றும் உயர்மட்டத்தில் கொள்கை உருவாக்கம், இவ்விரண்டிற்கும் ஓர் இணைப்பாக அனைத்திந்திய சேவைப் பணிகள் அவசியம் என்று படேல் கருதினார்.
  • இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபைக் கூட்டத்தில் 1949 அக்டோபர் 10 அன்று பேசுகையில் படேல் விடுத்த எச்சரிக்கை என்றும் நம் நினைவில் நிற்க வேண்டியது ஆகும். “மனதில் நினைப்பதை வெளிப்படையாகப் பேச முடியாமலும், பாதுகாப்பு உண்ர்வு நீங்கிய நிலையிலும் அனைத்திந்திய சேவைப் பணிகள் செயல்பட வேண்டிய நிலைமை வந்தால் - ஒன்றியமே இல்லாமல் போய்விடும், ஐக்கிய இந்தியாவும் இருக்காது!” 

ஆரோக்கியமான நடைமுறைகள்

  • முந்தைய காலத்தில், மத்திய அரசின் தேவைகளுக்கு அனைத்திந்திய சேவைப் பணிகளைச் சேர்ந்த அதிகாரிகளை வழங்குவதற்கு சுமுகமான-ஆரோக்கியமான மரபுகள் பின்பற்றப்பட்டன. இது மத்திய அரசு, மாநில அரசுகள், சேவைக்குத் தேவைப்படும் அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினருடனான கூட்டு ஆலோசனைகள் வாயிலாக நிறைவேற்றப்பட்டன.
  • எந்த ஒரு அதிகாரியும் அவருடைய விருப்பத்துக்கு மாறாக மத்திய அரசின் பணிகளுக்கு அனுப்பப்பட்டதே இல்லை. ஒவ்வோர் ஆண்டும், மத்திய அரசு அழைத்தால் பணிக்குச் செல்ல விருப்பமுள்ளவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலில் சேர விரும்புவோரின் பெயர்களை, மாநில அரசுகளும் எந்தக் காரணம் கொண்டும் மறைக்காது அல்லது தன்னிச்சையாக சேர்க்காமல் விடாது.
  • இப்படி விருப்பம் தெரிவித்த அதிகாரிகளின் பட்டியலிலிருந்துதான் மத்திய அரசு தனக்குத் தேவைப்படும் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும். இப்படி மத்திய அரசால் தேர்வுசெய்யப்படும் அதிகாரிகளை, மாநில அரசுகளும் கூடிய விரைவில் மாநிலப் பணிப் பொறுப்பிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்கும்.

அரசியல் குறுக்கிட்டபோது…

  • அரசியல் காரணங்களுக்காக, மத்திய அரசும் சரி மாநில அரசுகளும் சரி; இந்தக் கண்ணியமான நடைமுறைகளில் சில வேளைகளில் குறுக்கிட்டது அல்லது மீறியதும் உண்டு. 2001 ஜூலையில், தமிழ்நாடு மாநிலப் பணிப் பட்டியலைச் சேர்ந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் சேவையை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக, தனக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்டது.
  • 2020 டிசம்பரில் மத்திய அரசு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் விஷயத்தில் இதே போல நடந்துகொண்டது. 2021 மே மாதம், மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலர் பணி ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அவரை மத்திய அரசின் பணிப் பொறுப்புக்கு எடுத்துக்கொள்வதாக ஆணை பிறப்பித்தது. இந்த மூன்று தருணங்களிலும் தொடர்புள்ள மாநில அரசுகள் அந்த அதிகாரிகளைப் பணிப் பொறுப்பிலிருந்து விடுவிக்க மறுத்துவிட்டன.
  • மத்திய அரசுப் பணிக்கு விருப்பம் தெரிவித்த அதிகாரிகளின் பெயர்களை சில மாநில அரசுகள் பழிவாங்கும் போக்கில், மத்திய அரசுக்குத் தெரிவிக்காமல் தன்னிடமே வைத்துக்கொண்டதும் உண்டு, அல்லது அப்படி அவர்களின் சேவை தேவை என்று மத்திய அரசு கோரியபோது உடனடியாக அவர்களை விடுவிக்காமல், வேண்டுமென்றே காலதாமதப்படுத்தியதும் உண்டு.
  • மத்தியப் புலனாய்வுக் கழக (சிபிஐ) சேவைக்கு விருப்பம் தெரிவித்த மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை - அப்படிச் செல்ல அவருக்கு முதலில் அனுமதி வழங்கியிருந்தபோதிலும் - சிபிஐக்குச் செல்ல தயாராகும் விதத்தில், மத்திய ஆணைக்கேற்ப மாநிலப் பணிப் பொறுப்பிலிருந்து அவரே தன்னை விடுவித்துக்கொண்டதற்கு 2014 மே மாதம் இடை நீக்கம்செய்தது தமிழ்நாடு அரசு.

இப்போதைய பிரச்சினை

  • மத்திய அரசின் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பெறும் பொருட்டு, 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஐஏஎஸ் (கேடர்) விதிகள் 6(1) பிரிவுக்கு நான்கு திருத்தங்களைச் செய்ய விரும்புவதாகக் கூறி, மாநில அரசுகளிடம் ஜனவரி 25-க்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டிருக்கிறது. இப்போதுள்ள 6(1) பிரிவானது, ஒரு மாநிலத்தில் பணிபுரியும் அதிகாரி மத்திய அரசுப் பணிக்கு (அல்லது வேறு மாநிலப்பணிக்கு அல்லது மத்திய அரசு நிறுவனப் பணிக்கு) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன்தான் செல்ல வேண்டும் என்கிறது.
  • இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்திய அரசு இதில் இறுதி முடிவெடுக்கலாம் என்ற ஏற்பாடும் இதில் இருக்கிறது.
  • மத்திய அரசு புதிதாகக் கொண்டுவர விரும்பும் நான்கு திருத்தங்களில் இரண்டு, மாநில அரசுகளை அமைதி இழக்க வைக்கின்றன.
  • முதலாவது, 'ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாநில அரசு கட்டாயமாக வழங்க வேண்டும்' என்கிறது. அந்தப் பட்டியலில், அதிகாரிகள் தாங்களாகவே மத்தியப் பணிக்குச் செல்ல விரும்பாவிட்டாலும்அவர்களுடைய பெயர்களைச் சேர்க்கும் கட்டாயத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்படுத்துகிறது.
  • இளநிலைப் பதவிகளில் திருப்தியற்ற பணிச்சூழல், உயர்நிலைப் பதவிகளுக்கு ஒரு ஒளிபுகா மற்றும் தன்னிச்சையான தேர்வு முறை மற்றும் அனைத்து நிலைகளிலும் பணிப் பாதுகாப்பு இருக்குமா என்பதும் நிச்சயம் இல்லாதது - ஆகியவை மத்திய அரசில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பற்றாக்குறைக்கு உண்மையான காரணங்களாகும்; இந்தப் பிரச்னைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
  • மேலும், மத்திய அரசு இப்போது ஐஏஎஸ் பயிற்சி பெறாதவர்களைக்கூட அவர்களுடைய இதர திறமை, தகுதிகளின் அடிப்படையில் உயர் அதிகாரிகளாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற கொள்கை முடிவை எடுத்து அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
  • மேலும், இந்திய அரசு ஐஏஎஸ் அதிகாரிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, மத்தியப் பணிகளின் (Central Services) அதிகாரிகளுக்கு மத்திய அரசின் பதவிகளில் அதிகப் பங்கை வழங்கிவருகிறது. இப்படித் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வேறிடங்களிலிருந்து கிடைக்கும்போது, விருப்பமில்லாத ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுக்குத் தள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  • இரண்டாவது, 'சில சூழ்நிலைகளில் மத்திய அரசால் கோரப்படும் குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசு விடுவிக்க வேண்டும்' என்ற நிபந்தனை. அண்மைக் கால அனுபவங்களின் அடிப்படையில், இந்தப் பிரிவை அரசியல் நோக்கத்திற்கு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற நியாயமான அச்சத்தை மாநில அரசுகள் கொண்டிருக்கின்றன.
  • மாற்றுக் கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலர், முதல்வரின்  செயலர் மற்றும் மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளை ஒருதலைப்பட்சமாக மத்திய அரசு தன் வசம் வைத்தால் அல்லது அவர்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பினால் என்ன செய்வது?

நீண்ட கால பாதிப்பு

  • மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவாக இருந்தாலும் மாநிலத்தின் முடிவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் அமல்படுத்த வேண்டியவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள். அப்படிப்பட்ட அதிகாரிகளை மத்திய அரசு, தான் விரும்பும் நேரத்தில் எடுத்துக்கொள்ள உரிமை கோருவது, மாநிலங்களின் உரிமைகளில் தேவையின்றித் தலையிடுவது என்று மாநில அரசுகள் கருதுவதும் சரியானதுதான். அது மட்டுமல்ல; ஐஏஎஸ் அதிகாரிகள் சுதந்திரமாக, உரிமையோடு, நெஞ்சை நிமிர்த்தி தங்களுடைய வேலையைச் செய்ய முடியாமல் ஓர் அச்சுறுத்தலாகவே இந்தத் திருத்தங்கள் செயல்படும்.
  • மேலும், மாநில அரசைவிட மத்திய அரசுக்கே அதிகாரம் என்ற உணர்வோடு ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படத் தொடங்கினால், மாநிலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிடும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பதவிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, மாநிலங்களில் தேர்வு செய்யப்படும் அதிகாரிகளைக் கொண்டே நிர்வாகத்தை நடத்த மாநில அரசுகளும்  முற்படும்.
  • அதற்குப் பிறகு ஐஏஎஸ் பதவிக்கான கண்ணியமும் கவர்ச்சியும் குறைந்துவிடும். படித்த, செயல்துடிப்புள்ள, புத்திகூர்மையுள்ள இளைஞர்கள் ஐஏஎஸ் சேவையை நாட மாட்டார்கள். குறுகிய நோக்கத்தில் எடுக்கப்படும் அவசர முடிவுகள், அரசு நிர்வாகத்துக்கே நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கூட்டாட்சியை சிந்தியுங்கள்

  • பிரிட்டிஷ் வைஸ்ராய் காலத்து மேன்மைதங்கிய உச்சபட்ச அதிகாரம் எதையும் மத்திய அரசு பரம்பரை மூலம் பெற்றுவிடவில்லை. மாநிலங்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படியான தார்மிக நெறிகளைக் கடைப்பிடிக்காமல் நிர்வாகம் செய்ய மத்திய அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை” என்று சட்ட அறிஞர் நானி பால்கிவாலா கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.
  • “அரசமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு சுயேச்சையான வாழ்வுரிமை உண்டு, மத்திய அரசுக்கு இருப்பதைப் போலவே அவற்றுக்கும் நாட்டின் அரசியல், சமூக, கல்வி, கலாச்சார வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய முக்கியக் கடமைகள் உண்டு. அவை மத்திய அரசுக்கு முகவர்களோ, துணைக்கிரகங்களோ அல்ல” என்று எஸ்.ஆர். பொம்மை எதிர் மத்திய அரசு (1994) வழக்கில் உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியிருக்கிறது.
  • சர்தார் படேலின் முதிர்ந்த ஆலோசனையை ஏற்று, ஐஏஎஸ் பதவிகள் தொடர்பாக தான் உத்தேசித்திருக்கும் பணி விதிகளுக்கான திருத்தங்களை மத்திய அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கிறோம். கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே கருத்து மோதல்களும், பூசல்களும் ஏற்படுவது இயற்கை.
  • தேசிய நலனைக் கருத்தில் கொண்டு அவற்றையெல்லாம் கூட்டாட்சிக் கொள்கை அடிப்படையில் சுமுகமான முறையில் பேசித்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (30 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்