- உலக அளவில் பத்தில் ஒன்பது பேர் பாலினப் பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதாக அண்மையில் ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. மக்கள் மத்தியில் நிலவும் பாலினப் பாகுபாட்டுச் சிந்தனை, பாலினச் சமத்துவத்தை எட்டுவதில் தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது. 59 நாடுகளில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகக் கல்வியறிவு பெற்றிருந்தும்கூட, பொதுச் சமூகத்தில் நிறைந்திருக்கும் பாலினப் பாகுபாடு, சிந்தனைரீதியாக நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதையே உணர்த்துகிறது.
- ஐ.நா. வளர்ச்சித் திட்டம் சார்பாக உலகம் முழுவதும் 91 நாடுகளில் 2005 முதல் 2022 வரை மூன்று கட்டங்களாக ‘உலக மதிப்பீடுகள் ஆய்வு’ நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட பாலினச் சமூக நெறிமுறைகள் குறியீட்டின்படி உலக மக்களில் பாதிப் பேர் பெண்களை விட ஆண்களே சிறந்த அரசியல் தலைவர்களாக விளங்க முடியும் என நம்புகிறார்கள். அதேபோல் 40% பேர், ஆண்களால்தான் சிறந்த தொழில் நிர்வாகத்தைச் செயல்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
- அரசியல், கல்வி, பொருளாதாரம், உடல் சார்ந்த கண்ணியம் (Physical integrity) ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் மனைவியைக் கணவன் அடிப்பது நியாயமே என 25% பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் மனங்களில் மலிந்திருக்கும் இதுபோன்ற பாலினப் பாகுபாட்டுச் சிந்தனை, பெண்களின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது. பெண்ணுரிமைகளை இது சிதைப்பதுடன் சம உரிமைக்கு எதிரான சிந்தனைகளுக்கும் வலுவூட்டுகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டில் அடிமட்ட நிலையில் இருக்கும் நாடுகள் தொடங்கி உயர்நிலையில் இருக்கும் நாடுகள்வரை பெண்ணுரிமை என்பது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த மனித வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
- உலக அளவில் பத்துப் பேரில் ஒன்பது பேர் பெண்களுக்கு எதிரான பாலினப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர் என்பது எளிதில் கடந்துபோகும் விஷயம் அல்ல. அரசாங்கம் விழிப்புடன் செயல்பட்டு, கொள்கைரீதியான முடிவுகளை எடுத்துச் சமூக நெறிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். பெண்கள் மறுமணம் செய்துகொள்வது குற்றமாகப் பார்க்கப்பட்ட காலத்தில் ‘மறுமண நிதியுதவித் திட்ட’த்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது மறுமணம் சார்ந்து சமூகத்தில் நிலவிய பிற்போக்குச் சிந்தனையை ஓரளவுக்கு மாற்றியது. இதைப் போலவே பாலினப் பாகுபாட்டைக் களைவதற்கான திட்டங்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.
- கல்வித் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதுடன், இளம் வயதிலேயே பாலினச் சமத்துவம் குறித்த புரிதலைக் குழந்தைகளிடம் உருவாக்குவது காலத்தின் தேவை. பெண்களின் ஊதியமில்லாத உழைப்பு கணக்கில் கொள்ளப்படாததும் பாலினப் பாகுபாடு மோசமாக வளர்வதற்கு ஒரு காரணம். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக உழைத்தாலும் ஆண்-பெண் ஊதியப் பாகுபாடு 39% ஆக இருப்பது என்பது, பெண்கள்மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
- பெண் வெறுப்புப் பேச்சு, பெண்ணடிமைத்தனம், பெண்கள் மீதான வன்முறை போன்றவற்றுக்குக் கடுமையான தண்டனை அளிப்பதோடு பெண்களின் சமூகப் பாதுகாப்பையும் பங்களிப்பையும் உறுதிசெய்யும் வகையிலான கொள்கை முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். அதுதான் நீடித்த, நிலையான மனித வளர்ச்சியை நோக்கிய செயல்பாடாக அமையும்.
நன்றி: தி இந்து (19 – 06 – 2023)