TNPSC Thervupettagam

ஐந்தில் நான்கு பாஜகவின் வெற்றிப் பயணம்

March 11 , 2022 878 days 416 0
  • இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.
  • அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
  • இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தது. எனினும், கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து பாஜக தனித்தே அங்கு களம்கண்டது.
  • உத்தர பிரதேசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள பாஜக, பிரதானப் போட்டியாளராக இருந்த சமாஜ்வாதி கட்சியின் எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது.
  • அடுத்த இரண்டாண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன.
  • மத்தியில் ஆளும் பாஜக, தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் அதே வேளையில், தேசிய அரசியலில் காங்கிரஸின் இடம் கேள்விக்குறியாக மாறியிருப்பதையும் தெரிவிக்கின்றன.
  • உத்தர பிரதேசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ள காங்கிரஸ், தாம் ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் இழந்துவிட்டது.
  • பஞ்சாபில் மட்டுமே பாஜக போட்டியில் பின்தங்கிப்போனது. ஆனால், பாஜக மீதான விவசாயிகளின் அதிருப்தி என்பது, அங்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு ஆதரவாக மாறவில்லை.
  • காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட உத்தராகண்ட், கோவா சட்டமன்றங்களிலும் அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை.
  • கோவாவில் பாஜகவும் ஆஆகவும் தங்களது முதல்வர் வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தை நடத்தியபோது, காங்கிரஸ் அப்படி யாரையும் முன்னிறுத்துவதற்குத் தயாராகவில்லை; ஆஆகவுடன் திரிணமூல் காங்கிரஸும் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், பெரும் எண்ணிக்கையிலான சுயேச்சை வேட்பாளர்களுடனும் சேர்ந்து காங்கிரஸ் போராட வேண்டியதாகிவிட்டது.
  • கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த 10 மாநிலங்கள் மற்றும் 2 ஒன்றியப் பிரதேசங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவால் 4 சட்டமன்றங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
  • இந்நிலையில், தற்போது நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் தொடர்வது அக்கட்சிக்கு ஒரு புத்துணர்வை அளிக்கக்கூடியதாக மாறும்.
  • மேலும், பாஜவுக்கு எதிராகப் பிராந்தியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றுக்குத் தலைமையேற்கலாம் என்ற காங்கிரஸின் வியூகத்தை இத்தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கிவிட்டன.
  • காங்கிரஸ் தன்னை ஒரு தீவிர சுயபரிசோதனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தைத்தான் இம்முடிவுகள் உணர்த்துகின்றன.
  • அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டதன் காரணமாக வாக்குகள் சிதறியதும் தாம் வெற்றிபெறுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியது என்பதையும் பாஜக கருத்தில் கொள்ள வேண்டும்.
  • சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் மக்களவைத் தேர்தல் முடிவுகளும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதில்லை என்பதே சமீப கால அரசியல் நிலவரம்.

நன்றி: தி இந்து (11 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்